பெரும்பாலான கடைகளில் டிஜிட்டல் வழியே பண பரிவர்த்தணைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சில இடங்களில் நம்மால் UPI வழியாகப் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதுண்டு. ஸ்லோ இன்டர்நெட் கனெக்ஷன் பெரிய பிரச்னையாக மாறியிருக்கும் சூழலில், இன்டர்நெட் வசதியின்றியே UPI-யில் பணம் செலுத்த முடியும்… எப்படி என்று பார்க்கலாமா?
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால், வரி ஏய்ப்பையும் தடுக்க முடியும்; அதேபோல், காகிதத்தின் பயன்பாட்டையும் குறைக்க முடியும். கூகுள், பேடிஎம், போன்பே, பாரத்பே உள்பட பல்வேறு வகைகளில் டிஜிட்டலில் பண பரிவர்த்தனையைச் செய்ய முடியும். இந்த வகை சேவைகளால் சில நொடிகளில் பணத்தை மாற்றிவிட முடியும்.
UPI
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உருவாக்கிய பேமெண்ட் முறைதான் UPI (Unified Payments Interface). வங்கிகள் வழங்கிவரும் IMPS வசதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட UPI வசதியைப் பயன்படுத்தி விரைவாக பண பரிவர்த்தணைகளை மேற்கொள்ளலாம். இதற்காக, உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட வசதி வேண்டும். இணைய வசதியுடன் மட்டுமே UPI பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்ற தவறான புரிதல் இருக்கிறது. ஆனால், இணைய வசதி இல்லாமலும் உங்கள் போனைப் பயன்படுத்தி ஆஃப்லைனிலும் UPI பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
ஆஃப்லைனில் UPI பயன்படுத்துவது எப்படி?
ஸ்டெப் 1 – உங்கள் போனில் டயல் பேடில் *99# என்ற எண்ணை அழுத்தி, கால் செய்யவும்.
ஸ்டெப் 2 – பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கான ஆப்ஷன்களுடன் ஒரு பாப்-அப் விண்டோ திறக்கும். அதில், நீங்கள் பண பரிவர்த்தனை செய்யும் முறையைத் தேர்வு செய்யவும். அதுதொடர்பான எண்ணைப் பதிலாக உள்ளீடு செய்து `Send’ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3 – பணம் பெறுபவருக்கு UPI-யைப் பயன்படுத்தி எந்த முறையில் நீங்கள் பணத்தை அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். செல்போன் எண்ணைப் பயன்படுத்தி பணத்தை அனுப்ப விரும்பினால், குறிப்பிட்ட செல்போன் எண்ணைப் பதிவிட்டு, அதற்கான ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 4 – நீங்கள் அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்து `Send’ ஆப்ஷனைக் கொடுங்கள்.
ஸ்டெப் 5 – பேமெண்ட் செலுத்தப்படுவது தொடர்பான குறிப்பைப் (Remark) பதிவு செய்யுங்கள்.
ஸ்டெப் 6 – உங்கள் UPI ரகசியக் குறியீட்டு எண்ணைப் (PIN) பதிவு செய்து பண பரிவர்த்தனையை முடிக்கலாம். இன்டர்நெட் வசதி இல்லாமலேயே நீங்கள் UPI மூலம் பணம் செலுத்திவிட்டீர்கள்.
Also Read – Boeing: தமிழகத்தில் முதல்முறை – போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த சேலம் நிறுவனம்!