Ever Given Ship

Ever Given: சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் கப்பல்… உங்களுக்கு என்ன பாதிப்பு தெரியுமா?

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் எவர் கிவன் கப்பலால் உலக அளவில் பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள்.

சூயஸ் கால்வாய்

எகிப்தின் சூயஸ் கால்வாயானது உலக வர்த்தகத்தில் முக்கியமான கடல் வழிப் பாதையாகப் பார்க்கப்படுகிறது. மொத்த வணிகத்தில் 12% இந்தக் கடல் பாதை வழியாகவே நடக்கிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்தக் கடல் பாதை முதன்முதலாக 1869ல் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், 2014ம் ஆண்டு ஆகஸ்டில் சீரமைக்கப்பட்டது.

https://www.canva.com/design/DAEZ7p4H6bc/view?embed

எவர் கிவன் கப்பல்

முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயை ஜப்பானைச் சேர்ந்த கப்பல் நிறுவனமான ஷோயி கிஷன் கே.கே (Shoei Kisen KK) நிறுவனத்துக்குச் சொந்தமான எவர் கிவன் (Ever Given) என்ற பிரமாண்ட சரக்குக் கப்பல் கடந்த 23-ம் தேதி கடக்க முயன்றது. மத்திய தரைக்கடல் வழியாக ஆசியாவிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்து துறைமுக நகரமான ரோட்டர்டாம் நகருக்கு அந்தக் கப்பல் பயணம் மேற்கொண்டிருந்தது.

சூயஸ் கால்வாயில் எவர் கிவன் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட கடுமையான புழுதிப் புயலால் கப்பல் திசைமாறி கரையை ஒட்டி தரைதட்டியது. இதனால், சூயஸ் கால்வாயின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கிட்டத்தட்ட 200 சரக்குக் கப்பல்கள் முகாமிட்டிருக்கின்றன. இதனால், உலக வர்த்தகத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,900 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகின் பிரமாண்ட சரக்குக் கப்பல்களுள் ஒன்றான எவர் கிவன் கப்பலில் சுமார் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும். அதில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள், உயிருள்ள விலங்குகள், தோல் சாதனங்கள், பல பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் எவர் கிவன் கப்பலில் சிக்கியிருக்கின்றன. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை 3% ஏற்றம் கண்டிருக்கிறது.

https://www.canva.com/design/DAEZ71Haxtw/view?embed

இந்தியர்கள்

எவர் கிவன் சரக்குக் கப்பலின் கேப்டன் உள்பட ஊழியர்கள் 25 பேருமே இந்தியர்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக ஜப்பான் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம், இதற்காக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

சூயஸ் கால்வாய் போக்குவரத்து பிரச்னையால் உலக அளவில் பெரும் பொருளாதார அளவிலான பாதிப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அந்த கால்வாய் மூலமாக மட்டும் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வர்த்தகத்தை இந்தியா, வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கு செய்து வருகிறது.

பெட்ரோலியப் பொருட்கள், ஆர்கானிக் வேதிப் பொருட்கள், இரும்பு, ஸ்டீல், ஆட்டோமொபைல், ஜவுளி, மிதியடிகள், கைவினைப் பொருட்கள், பர்னிச்சர்கள் மற்றும் தோல் பொருட்கள் என இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பொருட்களின் லிஸ்ட் ரொம்பவே நீளம். இதனால், நீங்கள் ஆர்டர் செய்திருக்கும் ஷூ போன்ற பொருட்கள் உங்கள் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். இதையடுத்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சரகம் முக்கிய கடல்சார் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறது. தற்காலிக பிரச்னையான இதனால், விலை ஏற்றம் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top