இந்திய சந்தைகளில் தொடர்ந்து ஆறு நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று லேசாக ஏற்றம் கண்டிருக்கிறது. ஆகஸ்ட் 12 நிலவரப்படி சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,088-க்கு விற்பனையானது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் தேவை சரிவடைந்த நிலையில், இந்த ஆண்டு தேவை 25% உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் இடையிலான காலகட்டத்தில் 10.9 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தநிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில் 120.4 டன்னாக உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு கரன்சி எக்சேஞ்சை அடிப்படையாகக் கொண்டு ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தங்கத்தின் அளவு முதல்முறையாக 700 டன்னைக் கடந்திருக்கிறது. ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு 705.6 டன் ஆகும். 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இது 558.1 டன்னாக இருந்தது.
கொரோனா சூழலில் தங்கம் விலையேற்றம் ஏன்?
உலக அளவில் கொரோனா பாதிப்பால் சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவியது. அந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. தற்போது சந்தைகளில் நிலைத்தன்மை ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் மாற்று முதலீடுகள் பக்கம் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கிறார்கள். இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,800 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. ஆகஸ்ட் 11 நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.47,770 ஆக இருந்தது. கிராம் விலை ரூ.4,777.
இந்த சூழலில் கோல்டு ஃபாண்ட் எனப்படும் sovereign gold bond-ன் விலை 10 கிராம் ரூ.4,790 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் முதலீடு செய்பவர்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி போக, இதன்விலை கிராமுக்கு ரூ.4,740. தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் விலை சரிவு ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 12 நிலவரப்படி ஏற்றம் காணத் தொடங்கியிருக்கிறது. தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால், அதன் பாதுகாப்புத் தன்மை குறித்த அச்சம் தேவையில்லாதது என்கிறார்கள் நிபுணர்கள்.
தங்கம் வாங்க ஏற்ற நேரமா?
ஆபரணத் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தங்கம் வாங்க இது பொன்னான நேரம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஆடி மாதத்துக்குப் பிறகு வரிசையாக நடைபெறும் என்பதால், வரும் காலங்களில் தங்கத்தின் தேவையும் அதிகரித்து விலையும் கூட வாய்ப்பிருக்கிறது. மேலும், அந்த காலகட்டங்களில் தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read – சிகப்பு ரோஜாக்கள் முதல் மாஸ்டர் வரை… தமிழ் சினிமாவில் பூனைகள்!