பான் கார்டு – ஆதார் இணைப்பு, வங்கிகளில் கே.ஒய்.சி ஆவணங்கள் சமர்பிப்பு – இப்படி மார்ச் 31-க்குள் நீங்கள் முடிக்க வேண்டிய நிதி சேவைகள் தொடர்பான வேலைகள் என்னென்ன?
நிதியாண்டு முடிவு
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 31-ம் தேதியோடு நிதியாண்டு முடிவுக்கு வரும். அப்போது, பல சேவைகளுக்கான காலக்கெடுவும் முடிவுக்கு வரும். அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதி பரிவர்த்தனை, வங்கி தொடர்பான சில ஆவணங்களை நீங்கள் அப்டேட் அல்லது சமர்ப்பிக்கத் தவறினால், அபராதம்/நிதி சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். அப்படி, இந்த மார்ச் 31-ம் தேதிக்குள் நீங்கள் முடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.
பான் கார்டு – ஆதார் எண் இணைப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2022 மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், உங்கள் பான் கார்டு செல்லாததாகவும் வாய்ப்பிருக்கிறது.
எப்படி இணைக்கலாம்?
- ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யும் இ-ஃபைலிங் இணையதளம்.
- ’UIDPAN’ என்று உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
- ஆஃப்லைனில் பான் கார்டு சேவை மையங்கள் அல்லது NSDL மற்றும் UTIITSL அலுவலகங்களுக்கு நேரில் சென்று இணைக்கலாம்.
கே.ஒய்.சி
வங்கிக் கணக்குகளுக்கான கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31-ம் தேதியை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீங்கள் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கு பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம்.
வருமான வரிக் கணக்குத் தாக்கல்
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டு வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடுவை மத்திய அரசு பல்வேறு முறை நீட்டிப்பு செய்தது. அந்த வகையில் கடைசி தேதியாக மார்ச் 31, 2022 அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், தாமதமாக வரிக் கணக்குத் தாமதமாக தாக்கல் செய்யும்போது குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டி வரும்.
வீட்டு மானியம்
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) மூன்று தவணைகளில் கடைசி தவணைக்கான காலக்கெடு 2022 மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. நகர்ப்புறங்களில் வீடு கட்டுவோருக்கு PMAY திட்டத்தின் கீழ் மானியம் பெறும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.