சொந்த வீடு வாங்க/கட்ட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கனவாக இருந்து வருகிறது. வீடு வாங்கவோ அல்லது கட்டவோ நம்மிடம் முழுமையான பணம் இல்லாதபோது வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன் வசதியைப் பெறலாம்… வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடும் போதும் நாம் என்னென்ன செய்ய வேண்டும்… எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்… இந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிஞ்சுக்குவோம்.
வட்டி விகிதம்
வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள்/நிறுவனங்களில் குறைவான வட்டி விகிதம் அளிக்கும் வங்கியை ஒப்பிட்டுத் தெரிந்துகொண்டு தேர்வு செய்யுங்கள். வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, இரண்டு வகையான வட்டி விகிதங்களை வங்கிகள் அளிக்கின்றன.
- Fixed (நிலையானது)
- Floating (சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியது)
இந்த இரண்டு வகையான வட்டி விகிதம் பற்றி முழுவதுமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யுங்கள். Fixed என்பது நிலையான வட்டி விகிதம். அதேநேரம், Floating என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்தும், ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கும் வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு மாறக்கூடியது. நிலையான வட்டி விகிதத்தை விட ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் 1 – 2% அளவுக்குக் குறைவாக இருக்கும். நீண்டநால நோக்கில் இது நன்மை பயக்கக் கூடியது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதேநேரம், வட்டி விகிதம் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தால், நிலையான வட்டியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
கால அளவு (Tenure)
வீட்டுக்கடன் வாங்க சரியான வங்கி/நிறுவனத்தைத் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது, கடனைத் திரும்பச் செலுத்துவதற்காக நீங்கள் தேர்வு செய்யும் கால அளவு. நீண்ட காலம் திரும்ப செலுத்தும் வகையில் கால அளவை நீங்கள் தேர்வு செய்தால், மாதாந்திர தவணை (EMI) குறைவாக இருக்கலாம்; ஆனால், கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டி மிக அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அதேநேரம், குறைந்த கால அளவு என்பது இ.எம்.ஐ தொகையை அதிகமாகக் கொண்டிருக்கும். இதனால், உங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழ வாய்ப்பிருக்கிறது.
முன்தொகை (Down Payment)
சொந்த வீடு வாங்குவதற்காக கடன் உதவி பெற நீங்கள் முடிவு செய்துவிட்டால், கடனுக்காக முன்தொகையாக எவ்வளவு கட்ட வேண்டும் எனபதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். சொத்தைப் பொறுத்து, அதன் மதிப்பில் 75-90% கடன் உதவி பெற முடியும். மீதமுள்ள தொகையை நீங்கள் முன்தொகையாகச் செலுத்த வேண்டும். முன்தொகையாக வங்கிகள் கேட்கும் குறைந்தபட்சத் தொகையை மட்டுமே கட்டப் போகிறீர்களா அல்லது நீங்களாகவே கூடுதல் தொகையைக் கட்டப் போகிறீர்களா என்பதையும் யோசித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான முன்தொகையை நீங்கள் செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் இ.எம்.ஐ மற்றும் திரும்பச் செலுத்தும் கால அளவைக் குறைக்க முடியும். அதேபோல், உங்களுக்கு ஃப்ரீ அப்ரூவ்ட் வீட்டுக் கடன் இருக்கிறதா என்பதை உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள். அப்படி இருந்தால், அது லோன் புராசஸிங் நேரத்தைக் குறைக்கும். குறைந்தபட்ச ஆவணங்களை மட்டுமே வைத்து கடனை ஓகே செய்துவிட முடியும்.
Also Read:
காப்பீடு ரொம்ப முக்கியம் பாஸ்
இயற்கைச் சீற்றங்கள், தீ உள்ளிட்ட விபத்துகள் உள்ளிட்டவற்றில் இருந்து உங்கள் வீட்டைப் பாதுகாக்கக் கட்டாயம் ஒரு காப்பீடைத் தேர்வு செய்துவிடுங்கள் பாஸ். ஆண்டுக்கு 2,000 ரூபாய் என்ற குறைந்த பிரீமியத்தில் ரூ.50 லட்சம் வரையில் உங்கள் கனவு வீட்டுக்கு நீங்கள் காப்பீடு பெற முடியும். வீட்டுக்குள் இருக்கும் பொருட்களையும் நீங்கள் காப்பீடு செய்ய விரும்பினால், அதற்கான ஆப்ஷன்கள் கொண்ட காப்பீட்டைத் தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல், அசம்பாவிதங்கள் நேர்ந்து அதன் மூலம் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அதையும் காப்பீடு மூலம் சமாளிக்க முடியும். பெரும்பாலான வங்கிகள் காப்பீட்டுத் தொகையைக் கழித்துக் கொண்டே கடனைக் கொடுப்பார்கள்.
இதர கட்டணங்கள்
வீட்டுக் கடன் வாங்கும்போது, புராசஸிங் ஃபீஸ் உள்ளிட்ட இதர கட்டணங்களாக எவ்வளவு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இதர கட்டணங்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், உரிய காரணத்தை வங்கி பிரதிநிதியிடம் கேட்டுத் தெளிவுபெறுங்கள். சில வங்கிகள் புராசஸிங் கட்டணத்தை ரொம்பவே குறைவாகவே சார்ஜ் செய்கின்றன. அதையும் ஒப்பிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
கிரடிட் ஸ்கோர்
உங்களின் கிரடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டியில் உங்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் முன்வரும். இதனால், ஆரோக்கியமான கிரடிட் ஸ்கோரைப் பராமரிப்பது ரொம்பவே முக்கியம். ஏற்கனவே வாங்கியிருக்கும் கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்துவது, உங்கள் பண பரிவர்த்தனைகளை முறையாக வைத்துக் கொள்வது போன்றவை கிரடிட் ஸ்கோரை உயர்த்த உதவும்.
இதையும் நோட் பண்ணிக்கோங்க பாஸ்
வீட்டுக்கடன் வாங்கினால் மட்டும் போதும் என்றில்லாமல், கடன் வாங்கிய பிறகு அந்த குறிப்பிட்ட வங்கிகள்/நிறுவனங்கள் அளிக்கும் சேவைகளைக் கருத்தில் கொள்வது அவசியம். ஒருவேளை உங்களது கடனை நீங்கள் முன்கூட்டியே முடித்துக் கொள்ள நினைத்தால், அதற்கு வங்கி தரப்பில் இருந்து என்ன மாதிரியான சேவைகள் அளிக்கப்படுகின்றன… அதில் திருப்தி இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
Also Read – ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால் மீட்பது எப்படி… சிம்பிள் ஸ்டெப்ஸ்!