Post Office

போஸ்ட் ஆபிஸ் வழங்கும் 9 சேமிப்புத் திட்டங்கள்… பலன்கள் என்னென்ன?

இந்தியாவின் பழமையான துறைகளில் ஒன்று அஞ்சல் துறை. 166 ஆண்டுகள் பழமையான இந்தத் துறையின் கீழ் நாட்டில் 1,54,965 அஞ்சலகங்கள் இருக்கின்றன. சேமிப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை நம்பகத்தன்மை மிகுந்ததாகக் கருதப்படும் அஞ்சலகங்கள் 9 வகையான சேமிப்புத் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இதில் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது என்பதாலும் அதற்கான பலன்களும் மற்ற வங்கி சார்ந்த சேமிப்புத் திட்டங்களை விட அதிகம் என்பதாலும் மக்களிடம் அஞ்சல சேமிப்புத் திட்டங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

சரி அஞ்சலகங்கள் தரும் 9 விதமான சேமிப்புத் திட்டங்கள் என்னென்ன?

அஞ்சல சேமிப்புத் திட்டம் (அ) தபால்நிலைய சேமிப்புத் திட்டம்

Post Office Site

வங்கிக் கணக்கு போன்ற இந்த சேமிப்புத் திட்டத்தில் தனியாகவும், ஜாயிண்ட் அக்கவுண்டாகவும் தொடங்க முடியும். ஆண்டுக்கு 4% வட்டி இதற்கு வழங்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட யாரும் இதில் கணக்குத் தொடங்க முடியும். மைனர்களுக்கு கார்டியன்கள் மூலம் ஜாயிண்ட் அக்கவுண்டாகக் கணக்குத் தொடங்க முடியும். அதேநேரம், சிங்கிள் அக்கவுண்டுகளை ஜாயிண்ட் அக்கவுண்டுகளாகவும், இதேபோல் நேரெதிராகவும் மாற்ற முடியாது. மாதந்தோறும் 10-ம் தேதி முதல் மாதத்தின் கடைசி தேதி வரையிலான காலகட்டத்தில் மினிமம் பேலன்ஸ் தொகை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்குவோருக்கு ஏடிஎம், செக் புக், மொபைல் பேங்கிங்/இ-பேங்கிங் வசதிகளும் அளிக்கப்படுகின்றன. 500 ரூபாயுடன் அருகிலிருக்கும் அஞ்சலத்துக்குச் சென்று இந்தக் கணக்கை நீங்கள் தொடங்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx – என்ற இணையதளம் மூலமும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

தேசிய சேமிப்பு வைப்பு நிதி (RD)- 5 ஆண்டுகள்

ஐந்து ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட இந்த சேமிப்புத்திட்டத்தில் மாதாந்திரம் குறைந்தபட்சத் தொகையாக ரூ.100 செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். அதிகபட்சத் தொகை என்று கணக்கு எதுவுமில்லை. இந்த சேமிப்புத் திட்டத்துக்கு அஞ்சலகம் ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்குகிறது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும். 3 ஆண்டுகளுக்குப் பிறகு இதை நீங்கள் முன்னதாகவே முடித்துக் கொள்ளும் ஆப்ஷனும் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வாடிக்கையாளரின் ஒப்புதலுக்கு இணங்க கால அளவை நீட்டித்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு உங்கள் கணக்கில் இருக்கும் மொத்தத் தொகையில் 50% தொகையை 2% வட்டியில் கடனாகப் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD)

முதலீட்டுத் திட்டமான இது 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என நான்குவகையான முதிர்வு காலத்தோடு கிடைக்கிறது. ஐந்தாண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட திட்டத்துக்கு மட்டும் 6.7% வட்டியும் மற்ற 3 திட்டங்களும் 5.5% வட்டியும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஐந்தாண்டுகள் முதிர்வுத் தொகை கொண்ட திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் பணத்துக்கு வருமான வரிச் சட்டம் 80 சி-யின் கீழ் வருமான வரி விலக்குப் பெறலாம்.

மாதாந்திர வருவாய் திட்டம் (MIS)

குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரையில் இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய முடியும். ஜாயிண்ட் அக்கவுண்டுகளுக்கு அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6.6% வட்டி கணக்கிடப்பட்டு மாதம்தோறும் வழங்கப்படும். கணக்கு தொடங்கி ஒரு ஆண்டு காலத்துக்குள் கணக்கை முடிக்க முடியாது. ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு காலத்துக்குள் கணக்கை முடிக்க நினைத்தால் முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்படும். அதேபோல் 3-5 ஆண்டுகள் இடைவெளியில் பிடித்தம் ஒரு சதவிகிதமாகும். ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்துக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் பாஸ்புக்கைக் கொடுத்து கணக்கை முடித்துக் கொள்ள முடியும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS)

ஐந்து ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட இந்தத் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தனியாகவே, அல்லது மனைவியுடன் சேர்ந்தோ கணக்குத் தொடங்க முடியும். குறைந்தபட்சமாக ரூ.1,000 – அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கும் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் என நான்கு காலாண்டு மாத இறுதியில் வட்டித் தொகை அளிக்கப்படும். வட்டித் தொகை சேமிப்புக் கணக்குக்கு மாற்றப்படும். சேமிப்புக் கணக்குக்கு மாற்றப்படும் அந்தத் தொகைக்கு வட்டி பெற முடியாது.

பி.பி.எஃப் திட்டம் (PPF)

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.500 தொடங்கி ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இது 15 ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட நீண்டகால சேமிப்புத் திட்டமாகும்.

Post Office

சுகன்யா சமிர்தி அக்கவுண்ட் (SSA)

பெண் குழந்தைகளுக்கான இந்த சேமிப்புத் திட்டம் 21 ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்டது. குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாய் வரை ஆண்டுதோறும் முதலீடு செய்ய முடியும். பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்த பிறகு அல்லது திருமணம் நடைபெறும் சூழலில் திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பாக அல்லது திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சேமிப்புத் திட்டத்தை முடித்துக் கொண்டு பணத்தைப் பெற முடியும். இதற்கு வட்டியாக ஆண்டுக்கு 7.6% கொடுக்கப்படுகிறது.

தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC)

ஐந்து ஆண்டுகள் முதிர்வுத் தொகை கொண்ட இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 சேமிக்க முடியும். அதிகபட்சத்தொகை என்ற வரம்பு இல்லை. ஆண்டுக்கு 6.8% வட்டி வழங்கப்படும். உதாரணமாக 1,000 ரூபாய் முதலீடு ஐந்து ஆண்டு முதிர்வு காலம் முடிந்ததும் ரூ.1,389.49 ஆகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

கிஸான் விகாஸ் பத்திரம் (KVP)

ஆயிரம் ரூபாய் குறைந்தபட்சத் தொகையை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. 124 மாதங்கள் (10 வருடங்கள் 4 மாதங்கள்) முதலீடு செய்யலாம். நீங்கள் கணக்கை முடிக்க விரும்பும் நேரத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் வரையறையின்படி இருக்கும் முதிர்வு காலத்தின் அடிப்படையில் கணக்கை முடித்துக் கொள்ள முடியும். இதற்கு வட்டியாக ஆண்டுக்கு 6.9% கொடுக்கப்படுகிறது.

Also Read – பண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top