புதிதாக வீடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கியமான செலவுகள் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.
சொந்த வீடு
சொந்தமாக ஒரு வீடு வாங்குவது பலரின் கனவாகவே இருக்கும். ஒருவரின் லைஃப்டைமில் மிகப்பெரிய முதலீடாகவும் அது இருக்கும். அதைச் சரியான நிதி திட்டமிடலோடு செய்ய வேண்டும். ஒரு வீட்டை வாங்க நீங்கள் நினைக்கும்போது, அந்த வீட்டை சொந்தமாக்க மொத்தமாக எவ்வளவு செலவாகும் என்பதைச் சரியாக அறிந்துகொள்ள வேண்டும். வீட்டின் விலையாக கட்டடம் கட்டிக் கொடுக்கும் பில்டர்கள் சொல்லும் விலையை விட வீடு வாங்கும்போது கூடுதலாக செலவழிக்க வேண்டி வரும். Hidden Charges என்கிற வகையில் குறிப்பிட்ட தொகை உங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும். இந்த செலவுகளுக்காக ஒரு நிதியை ஒதுக்குவது குறித்து நீங்கள் திட்டமிடாவிட்டால், கடைசி நேரத்தில் உங்கள் பிளான் சொதப்ப நேரிடலாம்.
அப்படி வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 செலவுகள்!
Stamp Duty
ஒவ்வொரு சொத்தையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். சொத்துப் பதிவுக்காக ஸ்டாம்ப் ட்யூட்டி என்கிற வகையில், அரசு நிர்ணயிக்கும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். மாநில அரசுகள் நிர்ணயிக்கும் இந்தத் தொகை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். பொதுவாக மொத்த சொத்து மதிப்பில் இருந்து 4% முதல் 7% வரை விதிக்கப்படலாம். உதாரணமாக, உங்கள் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று வைத்துக் கொண்டால், பத்திரப் பதிவின்போது ஸ்டாம்ப் ட்யூட்டியாக ரூ.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டும். அதேபோல், பெரும்பாலான மாநிலங்கள் பெண்கள் வீடு வாங்கையில் 1% அளவுக்கு சலுகை கொடுப்பதுண்டு.
Registration Fee
சொத்துப் பதிவின்போது கட்ட வேண்டிய மற்றொரு தொகை பதிவுக் கட்டணம். மொத்த சொத்து மதிப்பில் 1% அளவுக்கு பதிவுக் கட்டணம் விதிக்கப்படும். ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும். முத்திரைத் தாள் கட்டணத்துடன் கூடுதலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி
நீங்கள் கட்டுமானத்தில் இருக்கும் ஒரு சொத்தை வாங்குகிறீர்கள் என்றால், ஜி.எஸ்.டி கட்ட வேண்டும். நீங்கள் வாங்கும் வீடு அரசின் `Affordable Housing’ என்கிற வரையறைக்குள் வந்தால், மொத்த சொத்து மதிப்பில் 1% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். அந்த வரையறைக்குள் வராவிட்டால் 5% அளவுக்கு வரி நிர்ணயிக்கப்படும். உங்கள் வீட்டின் மதிப்பு ரூ.45 லட்சத்துக்குள் இருந்தால் அல்லது கிராமப்புறங்களில் 60 சதுர மீட்டருக்குள்ளும், நகர்ப்புறங்களில் 90 சதுர மீட்டர் அளவுக்குள்ளும் இருந்தால் 1%, அதற்கு மேல் மதிப்புகொண்ட வீடுகளுக்கு 5% ஆகவும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். உதாரணமாக கட்டுமானத்தில் இருக்கும் ரூ.40 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கு ரூ.40,000 ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும். அதேநேரம், ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கு ரூ.2.5 லட்சம் ஜி.எஸ்.டி வரி. அதேநேரம், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கும், பழைய வீடுகளை மீண்டும் விற்பனை செய்யும்போதோ ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது.
பராமரிப்புத் தொகை (Advance Maintenance Charges)
வீடு வாங்கும்போது ‘Maintenance Charges’ முக்கியமான இடத்தைப் பெறும். வீட்டின் விலையும் இதனால் பாதிக்கப்படும். பில்டர்கள் ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்புத் தொகையை முன்தொகையாக வசூலிப்பதுண்டு. சொத்தின் அமைவிடம், பரப்பளவு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சில லட்சங்கள் வரை வரலாம். கட்டடத்தின் செக்யூரிட்டி, தண்ணீர், லிஃப்ட், பராமரிப்பு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுக்காக ஒரு தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.
பார்க்கிங் கட்டணம்
வீடு வாங்கிவிட்டால், நாம் இனிமேல் பார்க்கிங்குக்கான செலவழிக்க வேண்டாம் என்று வீடுவாங்குவோர் எண்ணுவதுண்டு. ஆனால், அது முழுவதுமாக உண்மையில்லை என்றே சொல்லலாம். கேட்டட் கம்யூனிட்டி போன்ற இடங்களில் நீங்கள் வீடு வாங்கினால், பார்க்கிங்குக்கென தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். சில சொசைட்டிகளில் ஆண்டுக்கணக்கில் இதற்கான கட்டணத்தை வசூலிப்பதுண்டு. அதேபோல், பொதுவான பார்க்கிங் ஸ்பேஷில் கார் பார்க்கிங் செய்ய தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், ஒரு வாகனத்துக்கு மேல் நீங்கள் வைத்திருந்தால், அதற்கும் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.
வீடு வாங்குவதற்கு முன்னர், இதுகுறித்தெல்லாம் தீர விசாரித்து அதற்கான செலவுகளையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Also Read – வீடு வாங்கப்போறீங்களா… ‘Dream Home’ வாங்கும் மில்லியனியல்ஸுக்கான 5 டிப்ஸ்!