Cash Transactions – தினசரி லிமிட், ஐ.டி விதிப்படி அபராதம் எவ்வளவு?

வருமான வரி விதிப்படி தினசரி Cash Transactions-ன் உச்சவரம்பு எவ்வளவு… அதை மீறுகையில் எவ்வளவு அபராதம் விதிப்பார்கள்?

ரொக்கப் பணபரிமாற்றம் (Cash Transactions)

இந்தியப் பொருளாதாரத்தில் ரொக்கப் பணபரிமாற்றம் முக்கியமான பங்காற்றுகிறது. சிறு வியாபாரிகள் பெரும்பாலும் தங்கள் பரிமாற்றங்களை ரொக்கமாகவே இன்றளவும் கையாண்டு வருகிறார்கள். என்னதான் டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் வளர்ச்சியடைந்து வந்தாலும், ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யவே ஒரு சிலர் விரும்புவார்கள். அதேநேரம், கறுப்புப் பணப் புழக்கத்தின் மையமாகவும் ரொக்கப் பணபரிமாற்றமே இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

cash transactions
cash transactions

தினசரி ரொக்கப் பணபரிமாற்றத்துக்கு வருமான வரித்துறை உச்ச வரம்பை நிர்ணயித்திருக்கிறது. வருமான வரித்துறை விதிப்படி தினசரி ரூ.2 லட்சத்தைத் தாண்டி ரொக்கப் பணபரிமாற்றம் எந்தவொரு காரணத்துக்காகவும் செய்ய அனுமதியில்லை. உதாரணமாக ரூ.3 லட்சத்துக்கு நீங்கள் தங்க நகை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் ரொக்கமாகக் கொடுத்து வாங்க முடியாது. காசோலை, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது வங்கி பணபரிமாற்றம் மூலமே மேற்கொள்ள முடியும். இந்த உச்ச வரம்பை மீறுபவர்களுக்கு 100% அளவுக்குக் கூட அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

இவ்வளவு ஏன், உங்கள் குடும்ப உறுப்பினரிடமிருந்து நீங்கள் பணத்தைப் பெற்றாலும், இந்த உச்ச வரம்பை மீறக்கூடாது என்கிறது வருமான வரித்துறை. ஐ.டி விதி 269ST-ன் கீழ் தினசரி ரொக்கப் பணபரிமாற்றம் ரூ.2 லட்சத்தைத் தாண்டக்கூடாது. அதேபோல், பரிசாக ஒரே தடவையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் தனிநபர் ஒருவர் ரொக்கப் பணத்தைப் பெறக் கூடாது. அப்படி பெறுவாறாயின், மேலே குறிப்பிட்ட விதியை மீறியதாகக் கருதப்பட்டு, பரிசாகப் பெற்ற பணத்துக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

அதேபோல், காப்பீட்டுக்கான தொகையை செலுத்துகையில், அதை நீங்கள் பணமாகச் செலுத்தினால், ஐ.டி விதி 80D-யின் கீழ் வரிவிலக்குப் பெற முடியாது. அதனால், வங்கி வாயிலாகச் செலுத்துவதை உறுதி செய்துகொள்ளுங்கள். பத்திரப் பதிவின்போது அதிகபட்சமாக ரூ.20,000-த்துக்கு மேல் நீங்கள் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. விற்பனை செய்பவர் முன்பணம் பெறுவதிலும் இந்த விதி பொருந்தும். கடனாக ஒரு நிதி நிறுவனத்திடமோ அல்லது நண்பர் ஒருவரிடமோ நீங்கள் பணம் பெற்றால், அதைத் திரும்பச் செலுத்தும்போது ரூ.20,000-த்துக்கு மேல் ரொக்கமாகக் கொடுக்கக் கூடாது என்பது விதி.

cash transactions
cash transactions

சொந்தமாகத் தொழில் செய்து வருமான வரிக் கட்டுவோர், ரூ.10,000-த்துக்கு மேல் ரொக்கமாக ஒருவருக்குப் பணத்தை ஒரு நாளில் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுப்பாரானால், அதை வரிக்கணக்குத் தாக்கல் செய்கையில் கணக்குக் காட்டி விலக்கு பெற முடியாது. அதேபோல், பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.35,000 என்கிற அளவுக்கு ரொக்கமாகப் பணத்தைக் கொடுக்க முடியும்.

Also Read – முதலீடாக வீடு வாங்கப் போகிறீர்களா… கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top