எல்லோருடைய முதலீட்டு திட்டங்களிலும் தங்கம் இருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்… ஏன் அப்படிச் சொல்கிறார்கள் – 5 காரணங்கள்!
தங்கத்தில் முதலீடு
முதலீடு செய்வதற்கான பிளானில் இருப்பவரா நீங்கள்… உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி சிந்தியுங்கள் என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் அட்வைஸாக இருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்வது ஏன் சிறந்தது… அதற்கான 5 காரணங்கள்.
பணவீக்கம்
பணவீக்கம், பங்குச் சந்தை ஏற்ற, இறக்கம் போன்ற அசாதாரண சூழல்களிலும் தங்கத்தின் விலை என்பது நிலையாக இருக்கும். கடந்த 2020-ல் பங்குச் சந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டபோது கூட தங்கத்தின் மீதான ஈடுபாடும், அதன் விலையும் பெரிதாக வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யும்போது, இதுபோன்ற அசாதாரண சூழல்களைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. அதனால், உங்களுக்குப் பெரிய அளவுக்கும் பாதிப்பு ஏற்படாது. அதேபோல், பணவீக்கம் அதிகரிக்கும் நேரத்தில், பங்குச் சந்தைகள் அடிவாங்கினாலும் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். இது உங்கள் முதலீட்டுக்கு வலு சேர்க்கும்.
தொடர்ந்து அதிகரிக்கும் மதிப்பு
தங்கத்தின் விலையை சர்வதேச சந்தையில் எப்படி நிர்ணயிக்கிறார்கள் தெரியுமா… அதன் தேவை மற்றும் கையிருப்பு எனப்படும் Demand and Supply அடிப்படையிலேயே தங்கத்தில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போதிய அளவில் இருப்பு இல்லாததால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்தே வந்திருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் பாடம். உதாரணமாக, முதலீட்டுக்கான தங்கத்தின் தேவை என்பது கடந்த 20 ஆண்டுகளில் 10% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், இதே காலத்தில் தங்கத்தின் Supply என்பது 1.6% அளவுக்குத்தான் உயர்ந்திருக்கிறது.
குறைந்த வட்டி விகிதம்
கொரோனா பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளவிட முடியாதது. இதனால், உலக அளவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எல்லா நாடுகளுமே கடுமையாகப் போராடி வருகின்றன. ரிசர்வ் வங்கி போன்ற உலகின் மத்திய வங்கிகள் யாவும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்து வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் இருந்து தங்கள் கவனத்தைத் தங்கத்தின் பக்கம் திருப்பி வருகிறார்கள். தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்போது, அதன் தேவையும் அதிகரிக்கும். இதனால், விலையும் ஏறுமுகத்திலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ரிஸ்க் கம்மி
உலக அளவில் தங்கத்தில் முதலீடு என்பது பாரம்பரியமானது. பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல்ரீதியாக (ESG) பாதுகாப்பானது. நீங்கள் முதலீடு செய்யும் தங்கம் சட்டப்பூர்வமான வழியில் பெறப்பட்டது என்பதை மட்டும் உறுதி செய்துகொண்டால் போதும், நீங்கள் தங்கத்தில் செய்யும் முதலீடு எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும்.
ஆப்ஷன்கள்
மற்ற முதலீடுகளைப் போல் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்ய எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, தங்கள் முதலீட்டைத் திட்டமிடும் new age investors-களின் வசதிக்காக தங்கத்தில் முதலீடு செய்ய எத்தனையோ வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதில், ETF-கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்கிறார்கள். இப்படியான, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதை மற்ற பங்குச் சந்தை முதலீடுகளைப் போலவே தங்கத்தையும் டிஜிட்டலாகவே வாங்குவது மற்றும் விற்க முடியும் என்பது கூடுதல் பிளஸ்.