ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்த ஜெய் சௌத்ரி, இன்று உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதித்திருக்கிறார். அவரது பயணம் சுவாரஸ்யங்கள் நிறைந்தது.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான இஸட் ஸ்கேலர் (ZScaler) நிறுவன உரிமையாளரான 62 வயது ஜெய் சௌத்ரி, உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஆண்டில் 577 இடங்கள் முன்னேறியிருக்கிறார். ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021 (Hurun Global Rich List 2021) பட்டியலின்படி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலிலும் முதல்முறையாக இடம்பிடித்திருக்கிறார். அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் (Nasdaq) பட்டியலிடப்பட்டுள்ள இஸட் ஸ்கேலர் நிறுவனத்தின் 45 சதவிகித பங்குகளை ஜெய் சௌத்ரியின் குடும்பம் வைத்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் இன்றைய மொத்த மதிப்பு 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.20.54 லட்சம் கோடி)
ஹுருண் நிறுவனத் தகவலின்படி, ஜெய் சௌத்ரியின் மொத்த மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 271 சதவிகிதம் உயர்ந்து 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா சூழலால் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு உலகின் பல்வேறு தொழில்துறைகளும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இது இஸட் ஸ்கேலர் நிறுவன வளர்ச்சிக்கு உதவி செய்திருக்கின்றன. ஜூம் போன்ற வீடியோ கான்ஃபரஸ் செயலிகளின் பயன்பாடு அதிகரிப்பு, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களின் வளர்ச்சியும் ஜெய் சௌத்ரியின் இஸட் ஸ்கேலர் நிறுவன மதிப்பு வெகுவாக உயரக் காரணம்.
2021ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 157 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமான இலக்கை நிர்ணயித்திருப்பதாகச் சொல்கிறது இஸட் ஸ்கேலர். இது முதல் காலாண்டு வருமானத்தை விட 10 சதவிகிதமும் ஆண்டுக் கணக்கில் 55 சதவிகிதமும் அதிகமாகும். `உலகின் எந்தமூலையில் இருந்துகொண்டும் பணியாற்றலாம் என்ற நிலையை நோக்கி பல்வேறு துறைகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த உலகத்துக்காகத்தான் இஸட் ஸ்கேலர் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்கிறார் ஜெய் சௌத்ரி.
ஜெய் சௌத்ரி, இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் பனோ (Panoh) கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். குழந்தைப் பருவத்தில் மின்சார வசதி இல்லாத நிலையில் மரத்தடியில் படித்து வளர்ந்தவர் ஜெய். “உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்காக அருகிலுள்ள துசாரா கிராமத்துக்கு தினசரி 4 கி.மீ நடந்து சென்றுதான் பள்ளி சென்று வீடு திரும்புவேன்’’ என்று பழைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகிவிட்ட ஜெய் சௌத்ரியின் மொத்த சொத்து மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.9.53 ஆயிரம் கோடி).
“பணத்தின் மீது ஈடுபாடு குறைவு என்பதுதான் என்னுடைய சக்ஸஸுக்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன். இன்டர்நெட்டும் கிளவுட் ஸ்டோரேஜும் அனைவருக்கும் பாதுகாப்பானதாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று கடந்த 2019ல் பிசினஸ் ஸ்டாண்டர்டு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஜெய் சௌத்ரி.