தங்கம் விலையைப் பொறுத்தவரை இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் விற்கப்படும் விலையில் வித்தியாசம் காணப்படும். இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்… விலையை எப்படி நிர்ணயிக்கிறார்கள் ஜூவல்லரி உரிமையாளர்கள்?
நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கலாசார ரீதியிலான பிணைப்பைக் கொண்டது தங்கம். குழந்தை பிறப்பு தொடங்கி திருமணம் வரையில் தங்கத்துக்கென பிரத்யேக இடம் இருக்கிறது. தனிமனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகியிருக்கும் தங்கம், முதலீடு என்ற வகையிலும் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. பொதுவாக பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றின் ஏற்றமும் தங்கத்தின் விலை ஏற்றமும் எதிர்மறையாகவே காணப்படும். ஏனென்றால், பங்கு சந்தை முதலீடுகள் இறக்கத்தில் இருக்கும்போதும், அதன் மதிப்பு குறையும்போதும் அதற்கு மாற்றாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுவது வழக்கம்.
தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

பொதுவாக தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்ய இந்தியாவில் ஒரு நிலையான வழிகாட்டுதல் நெறிமுறை இல்லை. சர்வதேச சந்தை விலை நிலவரத்தைப் பொறுத்தே அன்றைக்கான தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படிப் பார்த்தால் லாஜிக்கலாக எல்லா நகரங்களிலும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், ஒவ்வொரு நகரைப் பொறுத்தவரையிலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை மாறுபாடுக்கு என்ன காரணம்?
போக்குவரத்து செலவு
சந்தைகளில் கிடைக்கும் மற்ற எல்லா பொருட்களைப் போலவே தங்கத்தின் விலையிலும் போக்குவரத்து செலவு சேர்க்கப்படுகிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், தங்கம் விலை உயர்ந்த பொருள் என்பதால் அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான செலவும் அதிகம். இதனால், தங்கத்தை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது விற்பனை விலையில் போக்குவரத்து செலவும் சேர்க்கப்படுகிறது.
குவாண்டிட்டி
பொதுவாகவே ஒரு பொருளை அதிக அளவில் நாம் வாங்கும்போது நமக்கு அது சலுகை விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சந்தைகளில் பெரும்பாலான வியாபாரிகள் பயன்படுத்தும் உத்தி இது. தங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட வியாபாரி அதிக அளவில் கொள்முதல் செய்யும்போது, மற்ற வியாபாரிகளுக்குக் கிடைக்கும் விலையை விட குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும். அப்படி மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வியாபாரி, மற்றவர்களை விட குறைந்த விலையில் தங்கத்தை விற்கவும் வாய்ப்பு உருவாகிறது.

கோல்டு புல்லியன் அசோசியேஷன்
ஒவ்வொரு பகுதியிலும் தங்க நகை வியாபாரிகளுக்கென தனித்தனியாக சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்கள் சர்வதேச சந்தை விலை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலையை தினசரி நிர்ணயம் செய்கிறார்கள். இந்த விலை நிர்ணயம் தினசரி இரண்டு முறை செய்யப்படுகிறது. பொதுவாக EOD எனப்படும் முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருக்கும் விலையைப் பொறுத்து இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதோடு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட மற்ற செலவுகளைக் கணக்கிட்டு தத்தமது நகரங்களில் இதுபோன்ற சங்கங்கள் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
அரசின் இறக்குமதி வரி
தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவதில் அரசு முக்கியமான பங்காற்றுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் கோலார் தங்க வயல் போன்ற தங்க சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் உண்டு. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியும் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரி என்பது வெளிநாட்டுப் பணம் கையிருப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கையிருப்பு குறைகையில் தங்கத்துக்கு அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படும். அதேநேரம், கையிருப்பு அதிகரித்தால் இறக்குமதி வரி குறையும்.
இந்திய ரூபாயின் மதிப்பு
சர்வதேச சந்தையில் டாலர் அல்லது மற்ற நாடுகளின் பணத்துக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவதில் முக்கிய காரணியாகிறது. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வு காணும். அதேநேரம், ரூபாயின் மதிப்பு அதிகரித்தால், தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். சமீபகாலமாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதைப் பார்த்திருப்பீர்கள். திடீரென விலை உயர்வதையும் பின்னர் கணிசமாகக் குறைவதையும் நம்மால் பார்க்க முடியும். இதனால், தங்கத்துக்கான சந்தை பேலன்ஸாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

விலை என்ன?
தங்கம் 24 கேரட், 22 கேரட் என தூய்மையின் அடிப்படையில் சந்தை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் 13-07-2021 காலை 10 மணி நிலவரப்படி ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.4,881 எனவும், ஒரு பவுன் எனப்படும் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.39,048 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,521, எட்டு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36,168 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – பண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க!
0 Comments