கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, தனது சுழல் ஜாலத்தால் கவனம் ஈர்த்தார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கெதிராகக் கடந்த நவம்பரில் நடந்த டி20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரால் அந்தத் தொடரில் கலந்துகொள்ள முடியவில்லை. உடல்நலக் குறைவால் ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து விலகிய வருண் சக்கரவர்த்தி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 3 மாதங்கள் பயிற்சியில் இருந்தார்.
என்னதான் பிரச்னை?
வருண் சக்கரவர்த்திக்கு த்ரோ செய்வதில் பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. இதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிபுணர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட அவரது த்ரோவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இப்போது மும்பையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர்களுடன் பயிற்சியில் இருக்கிறார்.
த்ரோ பிரச்னையை சரி செய்த வருண் சக்கரவர்த்திக்கு இப்போது வேகமாக ஓடுவது சிக்கலாக மாறியிருக்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய சூழலில் இந்திய அணி நிர்வாகம் ஃபிட்னெஸ் விவகாரத்தை சீரியஸாகக் கையிலெடுத்திருக்கிறது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் உடற்தகுதித் தேர்வில் 8.5 நிமிடங்களில் 2 கி.மீ தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும் அல்லது யோயோ டெஸ்டில் 17.1 புள்ளிகளைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து டி20 தொடருக்குத் தேர்வாகியும் உடற்தகுதித் தேர்வில் வருண் சக்கரவர்த்தி சரியான புள்ளிகளைப் பெறவில்லை என்று தெரிகிறது. இதனால், வரும் 12-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமே என்கிறார்கள். ஆனால், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பும் தமக்குக் கிடைக்கவில்லை என பிரபல கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் வருண் கூறியிருக்கிறார். கடந்த ஐந்து மாதங்களில் இந்திய அணிக்காக அறிமுகமாகக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் வருண் தவறவிடும் சூழலில் இருப்பதாக தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
உள்ளூர் அணிகள் இடையிலான 50 ஓவர் ஒருநாள் போட்டித் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான அணித் தேர்வில் வருண் சக்கரவர்த்தியின் பெயரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பரிசீலிக்கவில்லை. அவர் டி20 ஸ்பெஷலிஸ்ட் என்று இதற்குக் காரணம் கூறிய அவர்கள், சையது முஸ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழக அணியிலும் வருண் சேர்க்கப்படவில்லை.