சென்னை ராயப்பேட்டையில் 72 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 6 மணி நேரத்தில் கொலையாளிக் கைது செய்தனர்.
ராயப்பேட்டை ரோட்டரி காலனி 3வது தெருவில் 72 வயது மூதாட்டி வசித்து வந்தார். திருமணம் செய்துகொள்ளாத அவர், அரசு தரும் ஓய்வூதியம் மற்றும் சின்ன சின்ன கூலி வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்தார். வழக்கமாக, அதிகாலையிலேயே எழுந்துவிடும் மூதாட்டியின் வீடு நேற்று காலை நீண்டநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது மூதாட்டி காயங்களுடன் சடலமாகக் கிடந்திருக்கிறார். அவர் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மைலாப்பூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கூவம் ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது. விசாரணை நடத்தியதில் மெரினாவில் குதிரை ஓட்டும் இளைஞர்கள் அப்பகுதியில் மது அருந்துவது வழக்கமானது என்று அப்பகுதியினர் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரித்ததில், நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற 21 வயது இளைஞர் கொலையைச் செய்திருப்பது தெரிந்தது.
அவரிடம் விசாரித்ததில், மது அருந்திக்கொண்டிருந்தபோது மூதாட்டியின் வீட்டுக் கதவு திறந்திருந்ததாகவும் இதனால் கொள்ளையடிப்பதற்காக அந்த வீட்டுக்குள் சென்றதாகவும் கூறியிருக்கிறார். அப்போது மூதாட்டி கூச்சலிட்டதால், வாயைப் பொத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்துக் கொன்றதாக வசந்தகுமார் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் கொலையாளியை போலீஸார் 6 மணி நேரத்தில் பிடித்திருக்கிறார்.