சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு – யார் இந்த `கருக்கா’ வினோத்?

சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுவீசிய விவகாரத்தில் நந்தனத்தைச் சேர்ந்த ரவுடி கருக்கா’ வினோத்தை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். யார் இந்தகருக்கா’ வினோத்?

கமலாலயம்

கமலாலயம்
கமலாலயம்

சென்னை தி.நகர் வைத்தியராமன் தெருவில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயம் அமைந்திருக்கிறது. கமலாலயத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் பெட்ரோல் நிரப்பிய 3 பாட்டில்களை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர். அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மாம்பலம் காவல்நிலைய போலீஸார், விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, பைக்கில் வந்த ஒருவர் 3 பெட்ரோல் நிரப்பிய குண்டுகளை கமலாலயத்தில் வீசிச் சென்றதை உறுதிப்படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைமை நிலையச் செயலாளர் எம்.சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

`கருக்கா’ வினோத்

`கருக்கா’ வினோத்
`கருக்கா’ வினோத்

விசாரணையில் நந்தனம் பகுதியைச் சேர்ந்த ரவுடி `கருக்கா’ வினோத் என்கிற வினோத் குமார் ஈடுபட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரவுடி வினோத்தைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் மத ரீதியாகவோ, அரசியல்ரீதியாகவோ நடைபெறவில்லை என்பது தெரியவந்திருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். நந்தனம் எஸ்.எம். நகர்ப் பகுதியைச் சேர்ந்த வினோத், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வந்ததால் பெட்ரோல் குண்டுவீசியதாக விசாரணையில் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை போலீஸார் தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு விவகாரத்தில் பா.ஜ.க நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வினோத் பெட்ரோல் குண்டுவீசியதாக விசாரணையில் கூறியதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், குடிபோதையில் இந்த விவகாரத்தில் தாமாகவே தலையிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசும் மனநிலை கொண்டவர் ரவுடி வினோத் என்கிறார்கள் போலீஸார். அதேபோல், வினோத் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம். இவர், ஏற்கனவே கடந்த 2015-ல் மாம்பலம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெட்ரோல் நிரம்பிய பாட்டிலைக் கொளுத்தி வீசியதும், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த 2017-ல் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலைக் கொளுத்தி வீசியதும் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்குகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டதையும் போலீஸார் சுட்டிக் காட்டுகிறார்கள். விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

`கருக்கா’ வினோத்
`கருக்கா’ வினோத்

அதேபோல், இவர் பணத்தை வாங்கிக் கொண்டு பெட்ரோல் குண்டுவீசுவதையும் வழக்கமாகக் கொண்டவர் என்கிற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், அவர் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசினாரா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
Also Read – நீட் விலக்கு மசோதா: ஆளுநர் சட்டப்பேரவையின் முடிவை நிராகரிக்க முடியுமா- அடுத்தது என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top