சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கே.எஃப்.சி உணவகத்தின் மொபைல் ஆப்பில் இருந்த பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி இலவசமாக உணவு ஆர்டர் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கிளைவிரித்துப் பரப்பியுள்ள கே.எஃப்.சி உணவகங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானவை. சீனாவின் ஜியாங்சு பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஜூ (Xu), கே.எஃப்.சி மொபைல் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்ய முயற்சித்திருக்கிறார். அப்போது, மொபைல் ஆப்பில் ஆர்டர் செய்துவிட்டு, கே.எஃப்.சியின் அதிகாரபூர்வ வி சாட் அக்கவுண்ட் மூலம் அதற்கான இலவச கூப்பன்களை ஜெனரேட் செய்துகொள்ளும் வகையிலான பிரச்னை அதில் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து கே.எஃப்.சி ஆப்பில் இருக்கும் இந்த பாதுகாப்புக் குறைபாட்டைத் தனது நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்திருக்கிறார். அத்தோடு, இலவச கூப்பன்கள் ஜெனரேட் செய்து உணவு ஆர்டர் செய்யத் தொடங்கியிருக்கிறார். 2018ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கி முதல் ஆறு மாதத்தில் மட்டும் கே.எஃப்.சி உணவகங்களை சீனாவில் நடத்தும் யுவான் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு இவரால், 58,000 யுவான்கள் (தோராயமாக ரூ.6.60 லட்சம்) இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், ஜூவின் நான்கு நண்பர்களால், 8,900 யுவான்கள் முதல் 47,000 யுவான்கள் (தோராயமாக ரூ.5.35 லட்சம்) இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜூ மற்றும் அவரது நண்பர்கள் கே.எஃப்.சி ஆப்பில் இலவசமாக உணவு ஆர்டர் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்தும் சம்பாதித்து வந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த சீனாவின் ஜூஹி மாவட்ட நீதிமன்றம், ஜூ மற்றும் அவரது நண்பர்கள் குற்றம் செய்ததை உறுதி செய்தது. `கே.எஃப்.சி மொபைல் ஆப்பில் இருந்த பாதுகாப்புக் குறைபாடுகளை வைத்து தெரிந்தே அதன்மூலம் பயனடைந்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியிருக்கிறது’ என தீர்ப்பளித்தது. மேலும், ஜூ-வுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6,000 யுவான்கள் (தோராயமாக ரூ.68,300) அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், அவரது நண்பர்களுக்கு 15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.
Also Read – ரூ.755 கோடிக்கு ஏலம் போன பிகாசோ ஓவியம்… என்ன சிறப்பு?