இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை ஆணையத்தின் (SEBI) தலைவர் மாதபி புச், முறைகேடாக அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டர்பர்க் முதலீட்டு நிறுவன குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில், அது பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. Hindenburg vs SEBI சர்ச்சையில் என்ன நடந்தது?
Hindenburg அறிக்கை
அமெரிக்க முதலீட்டு ஆய்வு நிறுவனமான Hindenburg, அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், முறைகேடு தொடர்பாக இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை ஆணையமான செபியே விசாரணை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தநிலையில், செபியின் தற்போதைய தலைவரான மாதபி புச் மற்றும் அவரது கணவரும் அதானி குழுமத்தில் விதிகளை மீறி முதலீடு செய்திருப்பதாக Hindenburg நிறுவனம் கடந்த 10-ம் தேதி பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் செபியின் ட்விட்டர் கணக்கு Protected Mode-க்குப் போனதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மாதபி புச்சின் விளக்கம்
இந்தநிலையில், Hindenburg நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மாதபி புச் மற்றும் அவரது கணவர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில், செபி தலைவராகப் பொறுப்பேற்பதற்கு 2 ஆண்டுகள் முன்பாக, அதாவது சிங்கப்பூரில் வசித்தபோது 2015-ல் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்ததாகக் கூறியிருந்தனர். குறிப்பாக, மாதபியின் கணவரான தவாலின் சிறுவயது தோழரான அனில் அஹூஜா தலைமை முதலீட்டு ஆலோசகராக இருந்ததாலேயே முதலீடு செய்ததாகவும் கூறியிருந்தார்.
இதேபோல், அதானி குழுமம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் Hindenburg நிறுவனம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை; தீய உள்நோக்கம் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Hindenburg எழுப்பிய கேள்விகள்
இந்தநிலையில், மாதபி மற்றும் அதானி குழும விளக்கங்களைத் தொடர்ந்து Hindenburg நிறுவனம் பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. `மதாபி குறிப்பிட்டப்படியே சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் அவர் தொடங்கிய இரண்டு முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள், 2017-ல் அவர் செபி உறுப்பினரான பின்னர் எந்தவொரு பரிவர்த்தனையும் இல்லாமல் அமைதியாகின.
2019-ல் மதாபியின் கணவர் தவால் அந்த நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார். Agora Advisory Limited எனப்படும் இந்தியாவில் செயல்படும் அந்த நிறுவனத்தின் 99% பங்குகள் இப்போதும் மதாபியின் வசமே இருக்கும் நிலையில், முதலீட்டு ஆலோசனை என்கிற பெயரில் அந்த நிறுவனம் தற்போதும் வருமானம் ஈட்டி வருகிறது. சிங்கப்பூர் நிறுவனமான Agora Partners Singapore நிறுவனத்தின் உரிமையாளராக 2022 ஆகஸ்ட் 16-ம் தேதி வரை மதாபி இருந்தநிலையில், செபியின் தலைவரான பின்னர் அதன் உரிமங்களை கணவர் தவால் பெயருக்கு மாற்றியிருக்கிறார்.
மதாபியின் இந்திய முதலீட்டு ஆலோசனை நிறுவனம் கடந்த் 2022, 2023, 2024 நிதியாண்டுகளில் ரூ.2.3,985 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது. இந்த காலகட்டங்களில் மதாபி செபியின் தலைவராக இருந்தார். இது, பதவியைப் பயன்படுத்தி இரட்டை ஆதாயம் பெற்றதையே குறிக்கிறது என ஹிண்டன்பர்க் நிறுவனம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
Also Read – IMAX-ல் வெளியாகும் விஜய்யின் GOAT – IMAX என்றால் என்ன தெரியுமா?