மன அழுத்தம்

பெட்ரோல் விலை ஏறிப் போச்சு; சம்பளம் கட்டுபடியாகலை – விபரீத முடிவெடுத்த கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஓட்டுநர்!

ஊதியம் போதவில்லை என்றும் அதனால், பெட்ரோல் போடக் கூடப் பணமில்லை என்ற மன உளைச்சலில் கோவில்பட்டி நகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணசாமி என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

கோவில்பட்டி நகராட்சியில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணசாமி. இவர் கோவில்பட்டி மந்தித்தோப்பை அடுத்த பழங்குடியினர் காலனியில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கும் ரோகிணிப் பிரபா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், ஒன்றரை வயதில் மனோஜ் என்ற ஆண்குழந்தை இருக்கிறது.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

இவர் கடந்த சில மாதங்களாகவே ஊதியம் போதுமானதாக இல்லை என்று மனைவி, நண்பர்களிடம் புலம்பி வந்திருக்கிறார். நகராட்சியில் தற்காலிக ஓட்டுநர் பணிக்குக் கிடைக்கும் ஊதியத்தில் பாதிக்கும் மேல் டூ வீலருக்கு பெட்ரோல் போடுவதற்கே செலவாகிவிடுவதாகவும் கூறி வந்திருக்கிறார். மேலும், பெட்ரோல் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து, குடும்பம் நடத்தவே சிரமமாக இருப்பதாகவும், அதனால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் புலம்பியபடியே இருந்திருக்கிறார்.

இந்தநிலையில், இன்று காலை தனது மனைவியிடம் டூ வீலருக்கு பெட்ரோல் போட பணம் கேட்டதாகச் சொல்கிறார்கள். அவர், தன்னிடம் பணம் இல்லையென்றும் தனது தந்தையிடம் வாங்கித் தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது. அப்போது, தனது ஊதியம் அதிகம் இருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று புலம்பியபடியே, பெட்ரோலும் விலையேற்றம் பற்றி பேசி புலம்பியபடியே அமர்ந்திருக்கிறார். மனைவி வேறு வேலைகளைப் பார்க்க அடுத்த அறைக்குச் சென்ற நிலையில், அவரது சேலையில் தூக்கு மாட்டி கிருஷ்ணசாமி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

சேலையில் கணவன் தூக்கில் தொங்குவதைக் கண்ட மனைவி ரோகிணி கதறியழுதிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஊதியம் போதவில்லை, பெட்ரோல் போடக் கூட காசில்லை என்ற காரணத்தால்தான் கிருஷ்ணசாமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read – கோவில்பட்டி: கட்டணம் செலுத்தாத பெற்றோரைத் தனி அறையில் அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்… என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top