இளையான்குடியைச் சேர்ந்த டெய்லர் ஒருவரை மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் நாகமலைப் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தியைத் தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். என்ன நடந்தது?
இளையான்குடி டெய்லர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். பேக் விற்பனை தொழில் செய்துவரும் இவர், மதுரையில் தொழிலுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காகக் கடந்த ஜூலை 5-ம் தேதி வந்திருக்கிறார். நாகமலைப் புதுக்கோட்டை அருகே வந்தபோது அங்கு பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலைப் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் அர்ஷத்தை மிரட்டி 10 லட்ச ரூபாயைப் பிடுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பணத்தைத் திரும்பக் கேட்டு அர்ஷத் அடிக்கடி நச்சரித்ததால், `தங்கம், கஞ்சா கடத்தல் கேஸில் உள்ளே தள்ளிவிடுவேன்’ என்று இன்ஸ்பெக்டர் வசந்தி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அர்ஷத்திடம், `என் பிள்ளை சத்தியமா நீ கொடுத்த பேக்கில் நோட் புக்ஸ்தான் இருந்துச்சு. பணம் எதுவுமில்லை’ என்று வசந்தி சொன்னதாகத் தெரிகிறது. பணத்தை இரட்டிப்பாக்கும் டபுளிங்குக்காக அர்ஷத் பணத்தைக் கொண்டுவந்ததாக மோப்பம் பிடித்த இன்ஸ்பெக்டர் வசந்தி, சட்டவிரோத செயலுக்காகக் கொண்டுவரப்பட்ட பணம் பறிபோனதை அர்ஷத் வெளியில் சொல்ல மாட்டார் என்று நினைத்திருக்கிறார். ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அர்ஷத் மதுரை எஸ்.பி-யிடம் ஜூலை 27-ல் புகார் அளித்தார்.
ஏ.டி.எஸ்.பி தலைமையில் விசாரணை
இதுகுறித்து மதுரை எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் கிரைம் பிராஞ்ச் ஏ.டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்தும் எஸ்.பி உத்தரவிட்டார். இதையடுத்து, தேனியைச் சேர்ந்த பால்பாண்டி, மதுரையைச் சேர்ந்த உக்கிரபாண்டி, திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீமைச்சாமி ஆகியோரைக் கைது செய்த தனிப்படை போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.2.26 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தியைத் தேடி வந்தனர். இந்தநிலையில், கோத்தகரி அருகே வசந்தி பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த தனிப்படை போலீஸார், அவரைக் கைது செய்தனர். மதுரை கொண்டுவரப்பட்டு வசந்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.