தமிழகத்தில் ஆன்லைன் மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. இதுபற்றி போலீசில் புகாரளிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று சூழலில் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் சம்பாதிப்பதற்கான வழிகள் பற்றி பலரும் சிந்தித்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து ஆன்லைனில் மோசடி செய்யும் கும்பல்கள் தங்கள் வலையில் வீழ்த்தி விடுகின்றன. ஆன்லைன் சூதாட்ட செயலிகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட தொகையை லாபமாகப் பார்க்கலாம் என்ற வகையில் ஆசைகாட்டி மோசடி நடப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. சூதாட்ட செயலிகளுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், சட்டவிரோதமாக அவை இயங்கி வருகின்றன என்கிறார்கள்.
ஆன்லைனில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினசரி 2 ரூபாய் சம்பாதிக்கலாம். முதலீட்டு தொகைக்கு ஏற்ப ஒருநாளைக்கு ரூ.1,000 – ரூ.3,000 வரை லாபம் பார்க்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, அதில் முதலீடு செய்ய தூண்டப்படுகிறார்கள். லக்கி ஸ்டார், ஜெனிசிஸ் என்ற இரண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே தமிழகத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார்கள் குவிந்து வருகின்றன.
லக்கி ஸ்டார் – ஜெனிசிஸ்
லக்கி ஸ்டார் – ஜெனிசிஸ் என்ற இரண்டு செயலிகளில் லக்கி ஸ்டார் என்ற செயலியை அங்கீகரிக்கப்படாத இணையதளம் ஒன்றின் மூலம் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த செயலில் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதலீடு செய்யலாம் என்றும் முதலீடு செய்யப்பட்ட பணத்தை அந்த செயலியை நடத்தும் கும்பல் ஆன்லைன் லாட்டரிகள் ஆன்லைன் கேம்கள் என பல்வேறு விதமான விஷயங்களில் முதலீடு செய்து சூதாட்டம் நடத்துகின்றனர். லக்கி ஸ்டார் செயலியில் செய்யப்படும் முதலீடுகள், கிடைக்கும் லாபம் போன்றவற்றை ஜெனிசிஸ் செயலி மூலம் கண்காணிக்கலாம் என்று பயனாளர்களுக்குக் கூறப்பட்டிருக்கிறது. இதில் கிடைக்கும் மொத்த லாபத்தில் 40% அளவுக்கு அவர்கள் எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை பயனாளர்களின் வாலெட்டில் சேர்த்து விடுவார்களாம். அந்தப் பணத்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எடுக்க முடியாதாம்.
இதில், அடுத்தகட்டம் என்னவென்றால் வாடிக்கையாளர் ஒருவர் முதலீடு செய்யும் பணம், லாபம் செய்யும் பணம் என மொத்த பணத்தையும் டிராகன் முதலீடு என்ற பெயரில் செயலி நடத்துபவர்களால் எடுத்துக்கொள்ள முடியுமாம். மொத்தப் பணத்தின் மதிப்பு நிகரான பணத்தை முதலீடு செய்தால் மட்டுமே பணத்தை வாடிக்கையாளரால் எடுக்க முடியுமாம். இப்படியாக போட்ட பணத்தை எடுக்க மீண்டும் மீண்டும் பணத்தை பலர் முதலீடு செய்திருக்கிறார்கள். லாபம் கிடைத்தவுடன் நண்பர்கள், தெரிந்தவர்கள் என இதில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்துக்கு லாபம் கிடைத்து வந்த நிலையில், திடீரென ஜெனிசிஸ் நிறுவனம் திவாலாகிவிட்டதாகக் கூறி மொத்த பணத்தையும் சுருட்டியிருக்கிறார்கள்.
வாட்ஸ் அப் குழுக்கள்
செயலிகளைப் பதிவிறக்கம் செய்பவர்களை வாட்ஸ் அப் குழுவில் இணைத்து அதில் தகவல்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார்கள். இப்படியாக நூற்றுக்கணக்கான வாட்ஸ் அப் குழுக்களில் அட்மின் மட்டுமே தகவல்களைப் பகிர முடியுமாம். குறிப்பிட்ட அட்மின் நம்பர்கள் எல்லாம் வெளிநாட்டு எண்களாகவும், விர்ச்சுவல் எண்களாகவும் இருப்பதால் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேச முடியாத சூழல். அப்படியே புகார் கூறும்பட்சத்தில் வங்கிக் கணக்கை முடக்கிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இப்படியாக பல கோடி ரூபாய் பணத்தை இழந்திருக்கிறார்கள் மக்கள். இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
Also Read – காதலித்து ஏமாற்றிய கணவர்… 36 ஆண்டு சட்டப் போராட்டத்தில் வென்ற பெண்! சென்னை நெகிழ்ச்சி