மகனால் ஆபத்து வரலாம் என்று ஜோதிடர்கள் கூறியதால் ஐந்து வயது மகனைத் தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடந்திருக்கிறது.
திருவாரூர் அருகே நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராம்கி – காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயதில் சாய்சரண் என்ற மகனும், சர்வேஷ் என்ற மூன்று மாதக் கைக்குழந்தையும் உள்ளார்கள். ராம்கி வாடகை ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றை ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.
குறுக்குவழியில் சீக்கிரமே பணக்காரராக வேண்டும் என்பது ராம்கியின் ஆசை. ஆனால், உழைப்பை நம்பாமல் போலி ஜோதிடர்களிடம் எதிர்காலம் குறித்து கேட்டு அறிந்துகொள்வதிலேயே ஆர்வமாக இருந்திருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் ஒரு ஜோதிடரிடம் தான் விரைவிலேயே பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் என்று ராம்கி கேட்டிருக்கிறார். அதற்கு, மூத்த மகனும் தந்தையும் ஒன்றாக இருக்கும் வரையில் முன்னேற்றம் எதுவும் இருக்காது என்று ஜோதிடர்கள் சொன்னதாகத் தெரிகிறது.
இதையடுத்து, மூத்த மகனை 15 ஆண்டுகளுக்கு விடுதியில் சேர்த்து படிக்க வைக்கப் போவதாக மனைவி காயத்ரியிடம் ராம்கி சொல்லியிருக்கிறார். இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்தநிலையில், நேற்று இரவு மது போதையில் இருந்த ராம்கி, மனைவி காயத்ரியுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மகன் சாய்சரண் மீது ஊற்றி நெருப்பு வைத்திருக்கிறார் ராம்கி. இதனால், ஐந்து வயது சிறுவனான சாய்சரண் வலியில் அலறித் துடித்தபடி அங்குமிங்கும் ஓடியிருக்கிறார். காயத்ரி மற்றும் சாய்சரணின் அலறலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, ராம்கியையும் போலீஸில் ஒப்படைத்தனர். சாய்சரண் உயிரிழந்த நிலையில், ராம்கியைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி மன்னார்குடி கிளைச் சிறையில் அடைத்தனர். போலி ஜோதிடர்கள் பேச்சை நம்பி விரைவில் பணக்காரணாக வேண்டும் என்ற ஆசையில் மகனுக்குத் தீவைத்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ராம்கி.
இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கும் நிலையில் நரபலிகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர், “மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது! மெய்ப்பொருள் காண்பது அறிவு – என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்!’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.