முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ராஜீவ் கொலை வழக்கும் தடயங்களும்
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமான தடயமாகக் கருதப்பட்ட போட்டோ ஒன்றை தடவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் மீட்டு சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தார். கொலையாளிகளுடன் இருந்த ஹரிபாபு என்பவர் எடுத்த அந்த போட்டோவே வெடிகுண்டை வெடிக்கச் செய்த தாணு, ஒற்றைக் கண் சிவராசன் உள்ளிட்டவர்களை அடையாளம் காண உதவியதாகச் சொல்லப்படுகிறது.
- மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர், அவர் அணிந்திருந்த ஷூ மற்றும் Gucci வாட்ச் ஆகியவற்றைக் கொண்டே உடல் அடையாளம் காணப்பட்டது. சம்பவ இடத்தில் அவரது உடலை ஜி.கே.மூப்பனார் தூக்கிப் பார்ப்பது போன்ற படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக 1991 தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்த ராஜீவ் காந்தி, 1991 மே 21-ம் தேதி மாலை 6 மணியளவில் விசாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்தார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் ஏற்பட்ட சின்ன கோளாறு காரணமாக திட்டமிட்டபடி சென்னை கிளம்ப முடியாத சூழலில், விசாகப்பட்டினம் அரசு விருந்தினர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் கார் விருந்தினர் மாளிகையை அடையும் முன்னர் ஹெலிகாப்டர் பிரச்னை சரி செய்யப்படவே, மீண்டும் திரும்ப வந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்தார். இரவு 10 மணியளில் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார். வெடிகுண்டு வெடித்த நேரம் 10.20 என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொலையாளிகளை நெருங்க முக்கியமான காரணம். ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு 11 மாதங்கள் முன்பு சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனியில் ஈழ விடுதலை அமைப்பைச் சேர்ந்த பத்மநாபா மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டும் ராஜீவ் கொலையில் பயன்படுத்திய வெடிகுண்டும் ஒரேபோன்றவை. சிபிஐ நடத்திய விசாரணையில் அந்த வெடிகுண்டு 60% ஆர்.டி.எக்ஸ் மற்றும் 40% டி.என்.டி பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருந்ததும், அதில், 0.2 மீ சுற்றளவு கொண்ட 2,800 சிறு உலோக குண்டுகள் இருந்ததும் தெரியவந்தது.
- ராஜீவ் கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் தஞ்சாவூர் அருகே போலீஸ் செக்கிங்கில் சங்கர் (எ) கோணேஸ்வரன் எனும் விடுதலைப்புலி சிக்கினார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துண்டுச் சீட்டில்
நளினி தாஸ் - 2419493,
சிவராசா – 2343402’ என்ற போன் நம்பர்கள் கைப்பற்றப்பட்டன. இதில், முதலில் இருந்தது நளினி வேலை பார்த்த சென்னை அடையாறில் இருந்த அனபான் சிலிக்கான்ஸ் நிறுவனத்தின் தொடர்பு எண். மற்றொரு எண் போரூரில் இருந்த எபினேசர் ஸ்டோர்ஸ் என்ற கடையின் போன் நம்பர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், நளினி கைது செய்யப்பட்டார்.
- பிரசாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தியை வெடிகுண்டோடு நெருங்க தாணு முதலில் முற்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி அனுசுயா என்பவர் தடுத்திருக்கிறார். பின்னர் ராஜீவ் போலீஸ் அதிகாரியைத் தடுக்கவே, தாணு அவருக்கு அருகே செல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த அனுசுயா, பின்னர் இந்தத் தகவலை சிபிஐயிடம் தெரிவித்தார்.
- விசாரணை அமைப்புகளுக்குக் கிடைக்கும் முன்னரே சம்பவ இடத்தில் ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தி ஹிந்து நாளிதழுக்குக் கிடைத்திருந்தது. 1991-ம் ஆண்டு மே 24-ம் தேதி அந்த புகைப்படம் நாளிதழில் வெளியானது. அதில், அனுசுயா குறிப்பிட்டிருந்த ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் அணிந்திருந்த பெண் இடம்பெற்றிருந்தார்.
- சிபிஐ-யின் விசாரணை இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. விசாரணை அதிகாரியாக ரகோத்தமன் இருந்தார். `சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மதுரம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தார். அதில், ராஜீவ் காந்தியும் சேர்ந்து 18 பேர் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது’ என்று ரகோத்தமன், தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
- சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கேமராவோடு, ஒரு விசிட்டிங் கார்டும் சிபிஐ குழுவுக்குக் கிடைத்தது. அந்த விசிட்டிங் கார்ட் மூலம் `வைட் ஆங்கிள்’ ரவிசங்கரனைப் பிடித்து, குண்டுவெடிப்பில் இறந்தது ஹரிபாபு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். வழக்கு விசாரணையின் முதல் அடியே இதுதான். அதன்பின்னர், ரவிசங்கரனுக்குச் சொந்தமான அந்த கேமராவில் இருந்த எக்ஸ்போஸ் ஆகாத பிலிம் சுருள் பிரிண்டுக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்து கிடைத்த 10 படங்கள்தான் வழக்கு விசாரணையின் திருப்புமுனையாக அமைந்தவை.
- ஹரிபாபுவின் குடிசை வீட்டில் சிபிஐ குழுவினர் இரண்டாவது முறையாகத் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பூம்புகார் எம்போரியத்தில் வாங்கிய சந்தன மாலைக்கான ரூ.65 பில், பாக்கியநாதன், முத்துராஜா, முருகன் உள்ளிட்டோர் குறித்த தகவல்கள் கிடைத்தன.
- விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் வந்த முருகன் – நளினி சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது ஹெட் கான்ஸ்டபிள் முத்தையா என்பவரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைதுக்குப் பிறகே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை வேகமெடுத்தது.