ராஜேஷ்குமார்

`எம்.டி நேரில் வந்தால்தான் காரணம் சொல்வேன்’ – சத்தியம் டிவி ஆபிஸை சூறையாடிய கோவை நபர்!

சென்னையில் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பட்டாக்கத்தி, கேடயம் மூலம் அலுவலகத்தை மர்ம நபர் ஒருவர் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு நேற்று இரவு 7 மணியளவில் கிடார் பேக்குடன் மர்ம நபர் ஒருவர் வந்திருக்கிறார். குஜராத் பதிவெண் கொண்ட மாருதி சுசூகி ஷிஃப்ட் காரில் வந்த அவரிடம் நிறுவன ஊழியர்கள் விசாரித்திருக்கிறார். அலுவல்ரீதியாக வந்திருப்பதாக ஊழியர்களிடம் கூறிவிட்டு சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் சென்றிருக்கிறார் அந்த நபர். அலுவலகத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் என்று நினைத்து ஊழியர்கள் அவரை அனுமதித்திருக்கிறார்கள்.

ராஜேஷ்குமார்

சத்தியம் டி.வி ஆபிஸ்

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் வரவேற்பரையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென தனது கிடார் பேக்கில் இருந்து பட்டாக்கத்தி, கேடயத்தை அந்த மர்ம நபர் எடுத்திருக்கிறார். அவற்றைக் கொண்டு வரவேற்பரையில் இருந்த கண்ணாடி மேசை, டிவி, கம்ப்யூட்டர், சோபா, கதவு என அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த தொலைக்காட்சி ஊழியர்கள் ராயபுரம் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

சத்தியம் டிவி ஆபிஸ்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார், அந்த மர்ம நபரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து பட்டாகத்தி, கேடயம் மற்றும் குஜராத் பதிவெண் கொண்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவரது தந்தை தர்மலிங்கம் என்பவர் கோவை அரசு மருத்துவமனை மண்டல மருத்துவ அலுவலராகப் (RMO) பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

குஜராத்தில் இருக்கும் தனது சகோதரரைப் பார்ப்பதற்காக சமீபத்தில் சென்ற ராஜேஷ்குமார், அங்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை வாங்கியிருக்கிறார். அதன்பின்னர், காரில் சென்னை வந்து சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தை சூறையாடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. என்ன காரணத்துக்காக இந்த செயலில் அவர் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. போலீஸார் விசாரணையில், சத்தியம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் நேரில் வந்தால், எதற்காக சேதப்படுத்தினேன் என்பதைச் சொல்ல முடியும் என்று ராஜேஷ்குமார் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read – தக்க சமயத்தில் குருவுக்காக பாக்யராஜ் செய்த கைமாறு… `ஒரு கைதியின் டைரி’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top