தமிழக சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த மோசடித் தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஃபாஸ்டேக்
இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண வசூல் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே நடந்து வருகிறது. இதன்மூலம், முந்தைய காலங்களில் தமிழக சுங்கச் சாவடிகளில் புதிய ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆர்.டி.ஐ தகவல் இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
பரனூர் சுங்கச் சாவடி
குறிப்பாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டில் இருக்கும் பரனூர் சுங்கச் சாவடியை, கடந்த 2019 ஜூலை மாதத்தைவிட கடந்த ஜூலையில் 7.39 லட்சம் வாகனங்கள் அதிகமாகக் கடந்துசென்றிருக்கின்றன. இதனால், 2019-ம் ஆண்டு மட்டும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வாகனங்களைக் குறைத்துக் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
2008 தேசிய சுங்கக் கட்டண விதிப்படி, குறிப்பிட்ட சாலை திட்டத்துக்கு ஆகும் செலவு முழுவதும் வசூலிக்கப்பட்ட பின்னர், சுங்கக் கட்டணத்தை 60% அளவுக்குக் குறைத்துவிட வேண்டும். வாகனங்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டினால், மொத்த திட்ட செலவை வசூலிக்கும் கால அளவை அதிகரிக்க முடியும். இதன்மூலம், சுங்கக் கட்டணத்தைக் குறைக்காமலேயே அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இதுதொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றிருந்த தகவல்படி, பரனூர் சுங்கச் சாவடியில் கடந்த ஜூலை 2019-ல் 5.08 லட்சம் வாகனங்கள் மூலம் சுங்கக் கட்டணமாக ரூ.3.14 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், 2021 ஜூலையைப் பொறுத்தவரை 12.47 லட்சம் வாகனங்கள் மூலம் சுங்கக் கட்டண வசூல் ரூ.8.83 கோடியாக இருக்கிறது. அதேநேரம், 2019 ஜூலையில் 20% சுங்கக் கட்டணம் வசூல், மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையிலும் மற்றவை பணமாகவும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஃபாஸ்டேக் அறிமுகத்துக்குப் பின்னர் சுங்கக் கட்டண வசூல் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்திருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஃபாஸ்டேக் அறிமுகத்தால்தான் சுங்கக் கட்டணம் வசூல் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கம் போன்ற சில சங்கங்கள் இதைக் கண்டித்திருக்கின்றன. ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தாதற்கு முன்பு, சுங்கக் கட்டண வசூலில் முறைகேடு நடந்திருந்தால் மட்டுமே, இப்போது கட்டண வசூல் அதிகரித்திருக்க முடியும் என்பது அவர்களது வாதமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.
Also Read – சாதித்த சிவகார்த்திகேயன்.. சறுக்கும் சந்தானம் .. என்னதான் பிரச்சனை..?