தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில், `ஒரு நூறு ரூபாய் கூட வைக்க மாட்டியா?’ என லிப்ஸ்டிக்கில் நக்கலாக எழுதிய கொள்ளையன் நவீத்தைத் தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். கொள்ளையன் சிக்கியது எப்படி?
துரைமுருகன் வீடு
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் அமைச்சரும் தி.மு.க பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்குச் சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது. 25 ஏக்கரில் இடத்தில் இருக்கும் அந்த சொத்தை பிரேம் குமார் மற்றும் அவரது மனைவியான சங்கீதா தம்பதியினர் பராமரித்து வருகிறார்கள். ஓய்வு எடுப்பதற்காக துரைமுருகன் அவ்வப்போது இந்த வீட்டுக்கு செல்வது வழக்கம். கொரோனா முதல் அலையின்போது பெரும்பாலான நாட்களை துரைமுருகன் இந்த வீட்டிலேயே கழித்திருக்கிறார். அந்த வீடு இருக்கும் வளாகத்தில் தனி வீட்டில் பிரேம்குமார் தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.
கொள்ளை முயற்சி
துரைமுருகனின் பண்ணை வீட்டில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது. பண்ணை வீட்டில் திருட்டு முயற்சி நடந்தபோது வீட்டில் எதுவும் சிக்காததால், சிசிடிவி ஹார்ட் டிஸ்கை மட்டும் திருடிவிட்டு கொள்ளையர்கள் தப்பினர். இதனால், அங்கு ஆய்வு செய்த டிஐஜி காமினி தலைமையிலான போலீஸார் அருகிலிருந்த தனியார் பள்ளி தாளாளர் செந்தில்குமார் என்பவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.
அதேபோல், துரைமுருகன் வீட்டில் பணம், நகைகள் எதுவும் கிடைக்காததால் சுவரில், ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்ட’ எனவும் அங்கு கிடந்த நோட்டு புத்தகத்தில்
ஒரு ரூபாய் கூட இல்ல… எடுக்கல’ எனவும் எழுதி வைத்திருந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையன் சிக்கியது எப்படி?
வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரி பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு தொடர்பாக திருப்பத்தூர் எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். தனிப்படை போலீஸார் விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த சூழலில், முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த அதாவுர் ரஹ்மான் என்பவர் வீட்டில் கடந்த 13-ம் தேதி கொள்ளை நடந்தது. இரும்புக் கம்பிகளை வளைத்து வீட்டில் புகுந்து 85 பவுன் நகை, 2.65 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்டது சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நவீத் என்பதை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் பெரியபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அவரைக் கைது செய்தனர்.
நவீத்திடம் நடத்திய விசாரணையில் ஆம்பூர், ஏலகிரி பகுதிகளில் தொடர் கொள்ளையில் அவர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும், கடந்த ஏப்ரலில் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்தும் அவர் போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார். நவீத்திடமிருந்து 20 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஜோலார்பேட்டை, வாணியம்பாடி நகர் காவல்நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.