திருப்பூரில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட பனியன் கம்பெனி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற இருவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பகுதியில் இருக்கும் பயன்படுத்தப்படாத கல்குவாரியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பது குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றிய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், திருவாரூர் மாவட்டம் ஆரணியம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காணாமல் போனதாக வழக்குப் பதியப்பட்டிருந்தது தெரியவந்தது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் மனைவி கீதா, இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சந்தோஷ்குமார், அருகிலிருந்த பனியன் கம்பெனியில் பிரிண்டிங் செக்ஷனில் வேலை பார்த்து வந்திருக்கிறார். கீதா மூலமாக சடலமாகக் கிடந்தவர் சந்தோஷ் குமார்தான் என்பதையும் போலீஸார் உறுதி செய்தனர். அதன்பின்னர், சந்தோஷ் குமாருக்கு நெருக்கமானவர்கள் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில் சந்தோஷ் குமாருடன் பழக்கத்தில் இருந்த முருகேஸ்வரி என்பவர் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. அவரைப் பிடித்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. தேனியைச் சேர்ந்த முருகேஸ்வரி கணவரைப் பிரிந்து மகன் ஆரோக்கிய தாஸூடன் திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். முருகேஸ்வரியுடன் சந்தோஷ் குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருக்கமாகப் பழகிவந்த நிலையில், சந்தோஷ் குமாரிடம் இருந்து முருகேஸ்வரி பல தவணைகளாகப் பணம் வாங்கியிருக்கிறார். கடனாகக் கொடுக்கும்படியும் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்றும் கூறி முருகேஸ்வரி பணம் வாங்கியதாகத் தெரிகிறது.
இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி முருகேஸ்வரி வீட்டுக்குச் சென்ற சந்தோஷ் குமார் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பேச்சு முற்றி வாய்த்தகராறான நிலையில், முருகேஸ்வரியின் மகன் ஆரோக்கிய தாஸ் மற்றும் அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சந்தோஷ்குமாரைத் தாக்கியிருக்கிறார்கள். தலையின் பின்புறம் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில், சந்தோஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
சந்தோஷ்குமாரின் உடலை டூவீலரில் எடுத்துச் சென்று பயன்படுத்தாத கல்லாங்காடு பாறைக்குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அங்கே அடிக்கடி குப்பைகளுக்குத் தீ வைப்பது வழக்கம் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மறுநாள் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸுக்குத் தகவல் சொல்லவே விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து, முருகேஸ்வரி, ஆரோக்கிய தாஸ் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகள் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.