சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 21 ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து நூதன முறையில் கொள்ளையடித்த ஹரியானா கொள்ளை கும்பலை தமிழக போலீஸார் நெருங்கியிருக்கிறார்கள். கொள்ளை நடந்தது எப்படி?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் கேஸ் டெபாசிட் வசதி கொண்ட ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து கடந்த 17-19 தேதிகளில் கொள்ளை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. பெரியமேடு ஏடிஎம் உள்பட சென்னையில் 15 ஏடிஎம்களிலும் கிருஷ்ணகிரியில் 3, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஏடிஎம்-மிலும் கொள்ளை நடந்தது குறித்து எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் ஐ.பி.எஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீஸார் ஏடிஎம் மையங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
ஹரியானா கொள்ளை கும்பல்
தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தமிழகம் முழுவதும் நடந்த இந்தக் கொள்ளையில் தொடர்புடையது 10 பேர் கொண்ட கும்பல் என்பதும் அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஹரியானா விரைந்த தனிப்படையினர் பால்லாபர்க் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வீரேந்தர் ராவத், அமீர் அர்ஷ் என இரண்டு பேரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு நபரையும் கைது செய்திருக்கும் போலீஸார், அவர் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. கொள்ளையில் மூளையாகச் செயல்பட்ட அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத் ஆகிய இருவரையும் போலீஸார் தமிழகம் அழைத்து வந்திருக்கிறார்கள்.
கொள்ளை எப்படி நடந்தது?
குறிப்பிட்ட நிறுவனத்தின் கேஸ் டெபாசிட் மிஷின்கள் நிறுவப்பட்டிருக்கும் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்கள்தான் இவர்களது முக்கியமான குறி என்கிறார்கள். எஸ்.பி.ஐ வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கணக்குத் தொடங்கியிருக்கும் இந்த கும்பல், கேஸ் டெபாசிட் மெஷின்களில் கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறது. கேஸ் டெபாசிட் மெஷின்களில் பணம் எடுக்கும் வசதியும் இருக்கும். பணத்தை டெபாசிட் செய்வதுபோல் ஏடிஎம் மெஷினின் சென்சாரை மறைத்து அதில் இருக்கும் ஒரு சின்ன குறைபாட்டைப் பயன்படுத்தி பணத்தை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். பணம் எடுக்கப்பட்டிருந்தாலும், அது கணக்கில் வராத வகையில் கொள்ளை நடந்திருக்கிறது. ஏடிஎம்-களில் நிரப்பப்பட்ட பணம், எடுக்கப்பட்ட பணம் ஆகியவை மொத்தமாகக் கணக்கெடும்போதுதான் இப்படி ஒரு கொள்ளை நடந்திருப்பதே வங்கி நிர்வாகத்துக்குத் தெரியவந்திருக்கிறது. கூகுள் மேப் உதவியோடு எஸ்.பி.ஐ வங்கி கேஷ் டெபாசிட் மெஷின்கள் இருக்கும் ஏடிஎம்களைக் கண்டுபிடித்து, அதன்பிறகு குறிப்பிட்ட நிறுவனத்தின் மெஷின்கள் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளையை இந்தக் கும்பல் அரங்கேற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
லைவ் டெமோ
சென்னை பெரியமேடு எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் வளாகத்துக்கு அமீர் அர்ஷைக் கூட்டி வந்த போலீஸார் கொள்ளையடித்தது எப்படி என்பதை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்ட போலீஸார், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க இருக்கிறார்கள். இந்த ஒரு ஏடிஎம்-மில் மட்டும் ஜூன் 15-17 இடைப்பட்ட தேதிகளில் 190 முறை ஏடிஎம்மைப் பயன்படுத்தி சுமார் 16 லட்ச ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே இந்த கும்பல் ரூ.48 லட்சம் அளவுக்கு நூதனமுறையில் கொள்ளையடித்திருக்கிறது. ஜூன் 18-ம் தேதி சைதாப்பேட்டை ஏடிஎம்-மில் ரூ.5 லட்சமும், ராஜா அண்ணாமலைபுரம் ஏடிஎம்-மில் ரூ.1.18 லட்சமும் இந்த முறையில் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. இதேபோல், 14 வழக்குகள் எஸ்.பி.ஐ சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் கைது செய்யும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். கொள்ளை கும்பலுக்கு ஹரியானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் உதவி செய்திருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.