தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர், ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில், உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகள் குழு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
குழுவில் இடம்பெற்றிருக்கும் நிபுணர்கள்!
ரகுராம் ராஜன்
மத்தியப்பிரதேசத்தில் தமிழ் குடும்பம் ஒன்றில் 1963ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்தவர் ரகுராம் ராஜன். உலகின் முன்னணி பொருளாதார நிபுணரான இவர், இந்திய அரசின் 15-வது தலைமை பொருளாதார ஆலோசகராகக் கடந்த ஆகஸ்ட் 10, 2021 முதல் செப்டம்பர் 4, 2013ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். 2003 – 2006 காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராகவும் ஆய்வுத் துறைத் தலைவராகவும் பதவி வகித்தவர். 2013 செப்டம்பர் 4 முதல் 2016 செப்டம்பர் 4-ம் தேதி வரையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது 2015-ல் சர்வதேச வங்கிகளுக்கான தீர்ப்பாயத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான இவர், 40 வயதுக்குள் சாதனை புரிந்த பொருளாதார வல்லுநர்களுக்கு வழங்கப்படும் Fischer Black Prize முதல் விருதை வென்றவர். அதேபோல், 2016-ல் டைம் இதழ் உலகின் பவர்ஃபுல்லான 100 மனிதர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்து கௌரவப்படுத்தியிருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்பு இருந்தும் அதிலிருந்து வெளியேறினார். தற்போது அமெரிக்காவின் சிகாகோ ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் இன்ஸ்டிடியூட்டில் கௌரவ பேராசியராக இருந்து வருகிறார்.
எஸ்தர் டஃப்லோ
வறுமை ஒழிப்பு தொடர்பான பொருளாதார விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் எஸ்தர் டஃப்லோ பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்டவர். புகழ்பெற்ற மசசூட்ஸ் இன்ஸ்டிடியூர் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியை மணந்துகொண்டவர். பொருளாதார அறிஞர்களுக்கு வழங்கப்படும் நோபல் நினைவுப் பரிசு இந்தத் தம்பதியினருக்குக் கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்டது. உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர்.
அரவிந்த் சுப்ரமணியன்
ரகுராம் ராஜனைப் போலவே அரவிந்த் சுப்ரமணியனும் இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பொறுப்பு வகித்த முன்னணி பொருளாதார நிபுணராவார். இந்தியாவின் 16-வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக அக்டோபர் 16, 2014 – ஜூன் 20, 2018 வரையில் பொறுப்பு வகித்தார். இந்திய – சீன பொருளாதார விவகாரங்களில் வல்லுநரான இவர், சர்வதேச நாணய நிதியத்தில் பொருளாதார நிபுணர் பதவி, பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இண்டர்நேஷனல் எகனாமிக்ஸ், சென்டர் ஃபார் குளோபல் டெவலப்மெண்ட் உள்ளிட்ட புகழ்பெற்ற பொருளாதார நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், சென்னை டி.ஏ.வி பள்ளியின் முன்னாள் மாணவர்.
ஜீன் ட்ரெஸ்
பெல்ஜியத்தில் பிறந்த ஜீன் ட்ரெஸ் தொடக்கம் முதலே இந்தியா தொடர்பான பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். 1959ம் ஆண்டு பெல்ஜியத்தின் பழமையான நகரான Leuven-ல் பிறந்த இவர் 1979ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வருகிறார். 2002-ல் இவர் இந்தியக் குடியுரிமை பெற்றார். நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென்னுடன் இணைந்து பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இவர் கௌரவ விரிவுரையாளராக இருக்கிறார். ராஞ்சி பல்கலைக்கழகத்திலும் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். டெல்லி, அலகாபாத்தில் வசித்த இவர், தற்போது ராஞ்சியில் வசித்து வருகிறார். அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் செயல்படும் இந்திய திட்ட கமிஷனின் திட்டம் மற்றும் மேம்பாட்டு அலகின் கௌரவத் தலைவராக இவர் இப்போது பதவி வகித்து வருகிறார்.
எஸ்.நாராயணன்
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.நாராயணன் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தவர். 1965 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் 2004ம் ஆண்டு ஓய்வுபெற்றார். நாற்பதாண்டு காலம் மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கும் இவர் 2003-2004 ஆண்டுகளில் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். 2000 – 2004 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மத்திய அரசின் நிதித்துறை செயலாளர், வருவாய்த் துறை, பெட்ரோலியம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். 1989 – 1995 ஆண்டில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்ததால், தமிழக கிராமங்களின் நிலை பற்றி நல்ல புரிதல் கொண்டவர்.