கங்கனா: `ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்!’ – என்னதான் பிரச்னை?

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனுடன் கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவரது பதிவை நீக்கியுள்ளது. ஏற்கெனவே, அவருடைய ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக முடக்கியது. இதனால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார்.

கங்கனா ரனாவத்தின் பதிவை இன்ஸ்டாகிடாம் நிறுவனம் நீக்கியது ஏன்?

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் உடல் சோர்வாக இருந்தது. கண்களில் எரிச்சல் இருந்தது. ஹிமாச்சல் கிளம்பலாம் என்று இருந்தேன். எனவே, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எந்த சக்தியையும் நீங்கள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் கொரோனாவைப் பார்த்து பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்றை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டும்தான். ஊடகங்கள் இதற்கு அதிகமான வெளிச்சத்தைக் கொடுத்து பயமுறுத்தி வருகிறது” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் இந்தப் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியுள்ளது.

கங்கனா ரனாவத்

இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பதிவு நீக்கப்பட்டது தொடர்பாக கங்கனா ரனாவத், “என்னுடைய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. கொரோனா வைரஸை நான் அழிப்பேன் என்று கூறியதால் சிலர் காயமடைந்துள்ளனர். ட்விட்டரில் தீவிரவாதிகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கோவிட் ஃபேன் கிளப் அருமையாக உள்ளது. ஏற்கெனவே, இங்கு இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. இன்ஸ்டாவில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிப்பேன் என்று நினைக்கவில்லை” என்று நக்கலாக பதிவிட்டு சிரிக்கும் எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்தையும் பலரும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்தும் இங்கு நிகழும் அவலங்கள் குறித்தும் ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என்றும் நான் எப்போதும் முகக்கவசம் அணிய மாட்டேன் என்றும் ஆக்ஸிஜன் தேவையென்றால் மரத்தடியில் சென்று அமருங்கள் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கங்கனா ரனாவத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Also Read : அதிருப்திசாமியான ஐ.பெரியசாமி… சமாதானம் செய்த சக்கரபாணி! பின்னணியில் நடந்தது என்ன?

ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கப்பட்டது?

சமீபத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பா.ஜ.க அலுவலகத்துக்கு தீ வைத்ததாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க வெற்றி பெற்ற அசாம் மற்றும் புதுச்சேரியில் எந்தவிதமான வன்முறைகளும் நடக்கவில்லை. ஆனால், திரிணாமுல் வெற்றி பெற்ற மேற்கு வங்கத்தில் வன்முறை நடைபெற்றிருக்கிறது. எனவே, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல, ஊரடங்கால் பாதிப்படைந்த மக்கள் பலருக்கும் உதவி செய்து வந்த நடிகர் சோனு சூட்டை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

ட்விட்டரில் சர்ச்சைக் கருத்துகளைக் கூறி வருவதாகக் குறிப்பிட்டு அந்நிறுவனம் அவரது ட்விட்டர் கணக்கை சில நாள்களுக்கு முன்பு நிரந்தரமாக முடக்கியது. இதுகுறித்து தான் கவலைப்பட போவதில்லை என்றும் தன்னுடைய கருத்துகளை சினிமா மூலம் தொடர்ந்து எழுப்புவேன் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்தார். ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம் என சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் கங்கனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top