திலிப் குமார்

சாண்ட்விச் செல்லர் டு பாலிவுட் லெஜண்ட் – திலீப் குமாரின் அசாத்திய பயணம்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் திலீப் குமார் வயது மூப்பின் காரணமாக உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, மூச்சுத்திணறல் காரணமாக மும்பையின் கர் பகுதியில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதாவது ஜூலை மாதம் 7-ம் தேதி உயிரிழந்தார். நடிகர் திலீப் குமாரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் அசாத்தியமானது. திரையில் மட்டுமில்லாமல் ஆஃப் ஸ்கிரீனிலும் தன்னுடைய பல நடவடிக்கைகளின் வழியாக பலரின் நாயகனாக திகழ்ந்தார். அவரின் திரைப்பயணம், தனது வாழ்க்கையில் சமுதாயத்துக்கு செய்த நன்மைகள், தமிழகத்துக்கும் அவருக்குமான தொடர்பு, அவரது இழப்பைப் பற்றி பிரபலங்கள் கூறியவை ஆகியன பற்றி தான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

திலிப் குமார்
திலீப் குமார்

நடிகர் திலீப் குமார் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் பகுதியில் 1922-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முகம்மது யூசுப்கானாக பிறந்தார். இவரது தந்தை ஒரு பழ வியாபாரி ஆவார்.  1940-களில் தனது தந்தையுடனான வாக்குவாதங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறினார். இதன் பின்னர் புனேவுக்குச் சென்றுள்ளார். அங்கு ராணுவ முகாம் ஒன்றுக்கு வெளியே சாண்ட்வி விற்பவராகப் பணியாற்றினார். அங்குதான் தன்னுடைய முதல் வருமானத்தை ஈட்டினார். புனேவுடனான தனது உறவைப் பற்றி திலீப் குமார் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையின் முதல் வருமானமான ரூபாய் 100-ஐ இந்த நகரம்தான் எனக்கு கொடுத்தது. 1940-களில் புனேவில் இருந்து ராணுவ முகாம் ஒன்றுக்கு வெளியே சாண்ட்விச் ஸ்டால் ஒன்றை நான் வைத்திருந்தேன். எனது தந்தையுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளுக்குப் பின் நான் புனேவுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

திலிப் குமார்
திலீப் குமார்

மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு சுமார் ரூபாய் 5000 சேமித்த பின்னர் திரும்பினார். இதனையடுத்து பம்பாய் டாக்கீஸில் திரைப்படப் படப்பிடிப்பு ஒன்றை யூசுப் காம் பார்க்கப் போயிருந்தார். இந்திய சினிமாவில் அப்போது கொடிக்கட்டிப் பறந்த நடிகையும் பம்பாய் டாக்கீஸின் உரிமையாளருமான நடிகை தேவிகா ராணி யூசுப் கானிடம் நடிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் உருது தெரியுமா என்றும் அவர் கேட்டுள்ளார். இரண்டுக்கும் ஆம் என சொல்ல யூசுப் கான் நடிகராக உருவெடுத்தார். யூசுப் கான் என்ற பெயர் காதல் படங்களில் நடிக்கும் நடிகருக்கு பொருத்தமானதாக இருக்காது என்றெண்ணிய தேவிகா ராணி அவரது பெயரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பம்பாய் டாக்கீஸில் பணிபுரிந்த கவிஞர் நரேந்திர சர்மா அவருக்கு ஜஹாங்கீர், திலீப் குமார் மற்றும் வாசுதேவ் ஆகிய பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளார். யூசுப் கான், திலீப் குமார் என்ற பெயரை தேர்வு செய்துள்ளார்.

திலிப் குமார்
திலீப் குமார்

`ஜவார் பாதா’ (Jwar Bhata) என்ற திரைப்படத்தின் மூலம் 1944-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமாக சுமார் 60 ஆண்டுகள் திரைப்படத்துறையில் இருந்த திலீப் குமார் மொத்தமே 63 படங்களில்தான் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் சோகமான கதாநாயகனாக நடித்ததால் `சோக நாயகன்’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். திலீப் குமார் நடிப்பில் வெளியான Andaz, Aan, Daag, Azaad, Ram Aur Shyam, Mughal-E-Azam, Gunga Jumna ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் அவர் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்று தந்தது. அந்த வரிசையில் 1955-ம் ஆண்டு வெளியான தேவதாஸ் படமும் அவரின் கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் Bairaag என்ற படத்தில் 1976-ம் ஆண்டு நடித்தார். பின்னர், சுமார் ஐந்து வருடங்கள் ஓய்வுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு நடிக்கத் தொடங்கினார். கடைசியாக 1998-ம் ஆண்டு வெளியான Qila என்ற படத்தில் நடித்தார். தன்னுடைய முக பாவனைகளின் மூலம் அமைதியாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் என்ற பெயரையும் இவர் பெற்றிருந்தார். இதன்பிறகு, திரைத்துறையில் இருந்து முழுவதுமாக ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

திலிப் குமார்
திலீப் குமார்

திரைப்படங்களில் இறப்பது போன்ற கதாபாத்திரத்தில் ஒருகாலக்கட்டத்தில் தொடர்ந்து நடித்தார். இதுதொடர்பாக பிபிசியிடம் அவர் பேசும்போது, “இறக்கும் காட்சிகளில் தொடர்ந்து நடித்தபோது மிகுந்த மன அழுத்தங்களுக்கு ஆளானேன். இதனைக் கடந்து வர மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது. மருத்துவர்கள் சோகமான படங்களை விட்டுவிட்டு நகைச்சுவைப் படங்களில் நடிக்க எனக்கு அறிவுறுத்தினர்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து Azaad, Ram Aur Shyam போன்ற நகைச்சுவை அதிகம் உள்ள படங்களில் நடித்துள்ளார். சோகமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவாராகதிலீப் குமார் இருந்தாலும் இவரது ஸ்டைலான மேனரிசங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்தன. இவரது சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசானது தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண், பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசும் இவருக்கு `நிஷான்-இ-இம்தியாஸ்’ என்ற விருதினை வழங்கியது. அதிக முறை ஃபிலிம்பேர் விருது வென்றவர் என்ற சாதனையையும் திலீப்குமார் தன் வசப்படுத்தியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநரான சத்ய ஜித்ரேவிடம் இருந்தும் பாராட்டைப் பெற்றார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் நல்லுறவுக்கு பாலமாகவும் திலீப் குமார் இருந்துள்ளார். மும்பையில் 1990-களில் மதக்கலவரங்கள் நடந்தபோது அமைதியின் தூதுவராக இருந்தார். பாதிப்படைந்தவர்கள் தங்குவதற்காக தனது இல்லத்தை அவர் திறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிட இயக்க தலைவர்களுடனும் அவர் நட்புடன் பழகி வந்துள்ளார். 1969-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தார். அப்போது, கலைவானர் என்.எஸ் கிருஷ்ணனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிதான் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நடிகர் திலீப் குமாரும் கலந்துகொண்டார். அண்ணா, கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் திலீப் குமார் நிற்கும் புகைப்படம் மிகவும் பிரபலமானது. அண்ணா மறைந்தபோது அவரது இறுதி சடங்கிலும் திலீப் குமார் கலந்துகொண்டார். ஆங்கிலம், உருது, இந்தி, பஞ்சாபி, ஆவாதி, போஜ்பூரி, மராத்தி மற்றும் வங்காளம் என பல மொழிகளில் பேசக்கூடியவர், திலீப் குமார். இவருடைய திரைப்படங்களில் வருவது போலவே தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவரது காதல் வாழ்க்கை மிகவும் பேசப்பட்டது. சில சமயங்களில் சர்ச்சைக்கும் ஆளாக்கப்பட்டது. 

திலீப் குமார் - சைரா பானு
திலீப் குமார் – சைரா பானு

பிரதமர் மோடிதன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திலீப் குமாரின் மறைவு கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் திரைத்துறை ஜாம்பவானாக என்றும் நினைவு கூறப்படுவார்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “இந்திய சினிமாவில் திலீப் குமார் செய்த பங்களிப்பு அடுத்த தலைமுறையினரின் நினைவுகளில் எப்போதும் இருக்கும்” என்று கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உங்களைப் போன்ற இன்னொருவர் இனி கிடையாது. இந்திய சினிமாவுக்கு நீங்கள் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது” என்று தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தியத் திரையுலகின் ஜாம்பவானும் திரை வழியே மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவருமான நடிகர் திலீப் குமார் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்குமே பேரிழப்பு! என்னுடைய சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : டீம் மேனேஜ்மெண்ட் Vs செலக்டர்ஸ்… ஓபனர் அபிமன்யூ ஈஸ்வரன் செலக்‌ஷன் சர்ச்சை பின்னணி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top