டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் நடிப்புப் பயின்ற நடிப்பு அரக்கன்தான் நவாஸுதீன் சித்திக். பல்வேறு இடையூறுகளைத் தாண்டி தற்போது தனக்கான ஓர் இடத்தைப் பிடித்து உலகம் போற்றும் வெற்றிக் கலைஞனாக திகழ்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களிலும் பல வெரைட்டிகள் காட்டியிருப்பார். அதில் முக்கியமான ஐந்து படங்களைப் பார்ப்போம்!
-
1 Gangs of Wasseypur (Part 1 and 2)
அனுராக் இயக்கத்தில் வெளியான படம் `Gangs of Wasseypur'. ஒரு கேங்ஸ்டர் படமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்து எடுத்துக்காட்டுதான் இந்தப் படம். சில நிஜ சம்பவங்களை எடுத்துக் கொண்டு தனது ரைட்டிங்கில் மேலும் படத்தை மெருகேற்றியிருப்பார் அனுராக். நவாஸுதீனின் சினிமா பாதையில் மிக முக்கியமாக அமைந்த படம் இது. தமிழில் வெளியான `சுப்ரமணியபுரம்' எந்தளவிற்கு ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கான தாக்கத்தை பாலிவுட்டில் இந்தப் படம் வெளிக்காட்டியது. இன்னும் சொல்லப்போனால் `சுப்ரமணியபுரம்' படத்திலிருந்துதான் இன்ஸ்பையர் ஆனதாக அனுராக் சசிகுமாரிடமும், நிறைய பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார்.
-
2 Raman Raghav 2.0
சில படங்களில் ரைட்டிங் ஒரு கதாநாயகனை காப்பாற்றும், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். ஆனால் இந்தப் படம் அப்படியே தலைகீழ். படம் பார்த்து முடித்த பிறகு நவாஸுதீனால்தான் இந்தப் படத்திற்கு பெருமை என்ற எண்ணம் தோன்றும். தனுஷுக்கு எப்படி செல்வராகவன் இருந்தார்... அப்படித்தான் நவாஸுதீனுக்கு அனுராக் இருந்தார். இந்தப் படத்தையும் அனுராக்தான் இயக்கினார். மிடுக்கான போலீஸ் அதிகாரியான ராமனுக்கும் ராகவுக்கும் (நவாஸுதீன்) நடக்கும் Hide and Seek விளையாட்டுதான் இதன் கதை. இதில் நவாஸ் வெளிக்காட்டிய நடிப்பு, `உண்மையில் சில சீரியல் கொலைகளை செய்துவிட்டுதான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் போல' என்று தோன்றும் அளவுக்கு வெறித்தனமான சைக்கோவாக நடித்திருப்பார்.
-
3 Manto
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை எழுதியவர் சதாத் ஹசன் மன்டோ. அவரின் வாழ்க்கையை பற்றிய படம்தான் `மன்டோ'. எழுத்தாளர் மன்டோவாக நவாஸுதீன் நடித்திருப்பார். சரியாக வாராத தலை முடி, ரவுண்ட் கண்ணாடி, போதைப் பழக்கம் என மன்டோவை அப்படியே தன் நடிப்பு மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். மன்டோவின் எழுத்துகளில் புதைந்திருக்கும் அடர்த்தியை நேர்த்தியான முறையில் படமாக்கியிருப்பார் இயக்குநர். மன்டோவின் கதை, திரைக்கதையாக இந்தப் படம் முழுக்க விரிந்திருக்கும். அந்த ஆழத்தையும், அடர்த்தியையும் உணர்ந்த நவாஸ், மன்டோவை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
-
4 Raat Akeli Hai
ஒரு படத்தில் கேங்ஸ்டர், இன்னொரு படத்தில் சைக்கோ கில்லர், மற்றொரு படத்தில் நிஜ வாழ்க்கை ஹீரோ என கிடைக்கும் கேப்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கும் நவாஸ், இந்தப் படத்தில் போலீஸ் அவதாரம் எடுத்திருப்பார். பிரமாண்டமான ஒரு கூட்டுக் குடும்பத்தில் முக்கியமான ஒரு நிகழ்வின் போது அரங்கேறும் கொலையை விசாரிக்கும் ஆய்வாளராக இவர். இதன் கதை படத்தின் மீதான இம்ப்ரஷனை கூட்டியிருந்தாலும் `நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா' என்பதுபோல் நடித்திருப்பார் நவாஸ். க்ரிப்பிங்கான த்ரில்லர் கதை, நவாஸுதீனின் அசால்ட்டான நடிப்பு... இது இரண்டும் கலந்த கலவைதான் இந்தப் படம்.
-
5 Manjhi : The Mountain Man
இவர் நடித்த படங்களிலேயே இதைத்தான் தி பெஸ்ட்டாக சிலர் கொண்டாடுவார்கள். தஷ்ரத் மன்ஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான சம்பவம்தான் இந்தப் படம். பீகாரில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்தான் தஷ்ரத். மருத்துவ அவசரத்திற்கு ஒரு மலையைத் தாண்டிதான் செல்ல வேண்டும். அப்படி தன் மனைவியின் பிரசவத்தின் போது, மலையைத் தாண்டி மருத்துவமனை வந்து சேர்வதற்குள் தாய், சேய் இருவரும் இறந்துவிடுகிறார்கள். விரக்தியின் உச்சத்துக்கு செல்லும் தஷ்ரத், ஒற்றை ஆளாக 360 அடியுள்ள அந்த மலையைக் குடைந்து குறுக்கே ஒரு பாதையை உருவாக்குவார். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகுதான் இது இவருக்கு சாத்தியப்படும். தனது மனைவியைப் போல் இன்னொருவர் இவ்வாறு இறக்கக் கூடாது என்பதற்காக இப்படி செய்வார் இவர். இப்படிப்பட்ட ஓர் உன்னத மனிதரின் வாழ்க்கையை கொண்ட படத்தில்தான் நவாஸ் நடித்திருப்பார். தஷ்ரத் மன்ஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்திருப்பார் என்று சொன்னாலும் சரியாகதான் இருக்கும்.
0 Comments