சஞ்சய் தத்

சஞ்சய் தத் நடிப்பை தொலைத்த கதை!

1993-ம் வருஷம் மும்பையே அல்லோகல்லப்பட்டது. தொடர் குண்டுவெடிப்புகளால நகரமே உருக்குலைஞ்சு கிடந்தது. இந்த தொடர் குண்டுவெடிப்புகளால இந்து – முஸ்லீம் பிரச்னை வெடிக்க இன்னும் நிலை மோசமானது. அதன் பின்னர் குண்டுவெடிப்பு குறித்து காரணம் தேடியது மும்பை போலீஸ். அப்போது விசாரணையில் மும்பை குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்தது தாவுத் இப்ராஹிம் என தெரியவர, அந்த சர்க்கிளை சுற்றி வளைத்தது, மும்பை போலீஸ். அதில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவராக இருந்தது போலீஸையே அதிர வைத்தது. மும்பையில் நிகழ்ந்த கலவரம் தன் குடும்பத்தை பாதிக்குமோ என நினைத்து வருத்தப்பட்ட சஞ்சய்தத், தாவூத் தம்பியிடமிருந்து ஏ.கே 56 ரக துப்பாக்கியை வாங்கினார். அதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார், சஞ்சய்தத். இந்த கைது ஏப்ரல் மாதம் நடந்தது. அடுத்ததாக ஜூன் மாதம் அவர் நடித்த கல்நாயக் படம் ரிலீஸானது. படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அந்தப்படத்தில் அவர் நடித்திருந்தது தீவிரவாதி கதாபாத்திரம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். நடிகர் சஞ்சய்தத் போதைக்கு அடியானது எப்படி? அதுல இருந்து எப்படி மீண்டு வந்தார், ஏன் சர்ச்சையில் சிக்கினார், அவர் செஞ்ச சம்பவங்கள் என்ன அப்படிங்குறதைத்தான் பார்க்கப்போறோம்.

சுனில் தத்- நர்கீஸ் தத் தம்பதியின் மகன்தான் சஞ்சய்தத். சுனில் தத் அந்தக்காலக்கட்டத்தில் மிகப்பெரிய நடிகராகவும், காங்கிரஸ் எம்.பியாகவும் இருந்தார். 1981-ம் வருஷம் ராக்கி சினிமா மூலம் பாலிவுட்ல கால் பதிச்சார். இந்தப்படத்துக்கு பின்னாலும் சஞ்சய் தத்துக்கு சோகமான விஷயம் ஒன்று நடந்தது. ராக்கி ரிலீஸ்க்கு முன்னால் அவர் அம்மா நோய்வாய்ப்பட்டு படுக்கையாக கிடந்தார். முதல்படத்தை ஸ்ட்ரச்சரிலேயாவது போய் பார்க்கணும்னு தாயோட ஆசை. ஆனா ரிலீஸ்க்கு 5 நாட்களுக்கு முன்னால அவங்க இறந்துபோக, உடைஞ்சு போயிட்டார். ராக்கி ரிலீஸ் ஆகுது, ஆஜானுபாகுவான தோற்றம், கதைக்கு ஏற்ற நடிப்புனு முதல்படத்திலேயே அசைக்க முடியாத சக்தியாக மாறியிருந்தார். தாயின் மரணம் சஞ்சய் தத்தை ரொம்பவே பாதித்தது. ஒரு கட்டத்தில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானார். காலேஜ் படிக்குறப்போ உருவான பழக்கம் தீவிரமா பிடிச்சுக்கிச்சு. அவருக்கு 10 வயசுலயே புகைபிடிக்கிற பழக்கம் ஆரம்பிச்சது. அவரின் அப்பா சுனில் தத் அவர் வீட்ல நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதை வழக்கமா வைச்சிருக்கார். அப்போ புகைத்த சிகரெட்டுகள் அங்க இருந்திருக்கு. அதை எடுத்துட்டு போய் திருட்டுத்தனமா புகைபிடிக்க பழகியிருக்கார். ஒருநாள் தந்தை அதை பார்த்துட்டு கண்டிக்க, நிலை கைமீறிப்போயிருந்தது. அதற்குள் தாயின் மரணம் நிகழ போதைப்பழக்கத்தை ஆரம்பிச்சார்.

காலேஜ்ல இவரோட தங்கச்சியை பார்க்கிற எல்லோரும் போதைக்காரனின் தங்கச்சினு சொல்லித்தான் கூப்பிட்டிருக்காங்க. இதை பின்னாள்ல அவரே சொல்லி வருத்தப்படவும் செஞ்சார். இதுபோக படங்கள்ல நடிக்க ஆரம்பிச்ச பின்னால எல்லா இடங்களுக்கும் போதை மருந்துகளை எடுத்துக்கிட்டு போக ஆரம்பிச்சார். தான் போடுற ஷூவுக்குள்ள சுமார் அரைகிலோ அளவுக்கெல்லாம் எடுத்துட்டு போன சம்பவக்காரன். ஒருகட்டத்துல அவரோட அப்பா அமெரிக்காவுக்கு போய் மகனைக் காப்பாத்த வழி தேடுறார். அப்போ மருத்துவர்கள் அவருக்கு என்ன போதை மருந்து பிடிக்கும்னு தெரியணும். அப்போதான் ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு சொல்ல, தன் மகன்கிட்ட ஒரு லிஸ்ட்டைக் கொடுத்து இதுல என்ன போதை பொருட்கள் எல்லாம் வேணும்னு டிக் பண்ண சொல்றார். சஞ்சய் தத்தும் டிக் பண்ணி கொடுக்கிறார், அதை வாங்கி பார்த்த சுனில் தத் அரண்டே போறார். எல்லா பொருட்களையும் டிக் செய்திருந்தார்.. அந்த லிஸ்டை அமெரிக்காவுக்கு அனுப்புறார். அமெரிக்க மருத்துவர்களும் அதிர்ச்சியில உறையுறாங்க. மிகப்பெரிய போதை ஆசாமியா இருப்பான் போலயேனு நினைச்சு, டிரீட்மெண்ட்க்கு கூட்டிட்டு வரச் சொல்றாங்க. ஆனால், மறுக்கிறார். இடையில் போதை மருந்து எடுப்பதால் ஷூட்டிங் வர மாட்டேங்குறார்னு குற்றச்சாட்டுகள் வர ஆரம்பிச்சது. இன்னும் சில தயாரிப்பாளர்களோ அவரை நடிக்க வைக்க அவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்லயே போதை பொருட்களை கொடுத்து நடிக்க வைக்கிறாங்க. முழுமையான அடிமையா மாறினார்.

ஒரு நாள் தூங்கி எழுந்தபோது மூக்கில் ரத்தம் வழிய ஆரம்பிச்சிருக்கு, அப்பாகிட்ட போய் கதறியிருக்கார். அப்போதான் அப்பா சொல்லியிருக்கார். போதை மருந்து சாப்பிட்டு மூணு நாளா நீ தூங்கிட்டு இருக்க, ஏதும் சாப்பிடலைனு சொல்ல, சஞ்சய் தத்துக்கு இப்போதுதான் உயிர் பயம் வர ஆரம்பிச்சது. இனி இதுபோல இருக்கக் கூடாதுனு முடிவெடுத்து அமெரிக்கா கிளம்பிபோய் சிகிச்சை எடுத்துக்கிறார். சிகிச்சை நேரங்கள்ல அர்னால்ட் படங்களா பார்க்கிறார். நாமும் இதுமாதிரி உடலை கொண்டுவரணும்னு முடிவு பண்ணி இந்தியா திரும்புறார். அப்படியே மாறவும் செய்தார். அடுத்ததாக 1991-ல் வெளியான சாஜன் சினிமா சஞ்சய் தத்தோட வாழ்க்கையில ஒரு மைல்கல் சினிமாவா மாறியிருந்தது. பட்டிதொட்டியெல்லாம் ஓடி சாதனையே நிகழ்த்தியது சாஜன்.

‘சாஜன்’க்கு பிறகு 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மும்பையே குண்டு வெடிப்பால் அல்லோலப்பட்டது. எங்கு பார்த்தாலும் கதறல்கள், ஓலங்கள் கேட்க, நகரமே இந்து -முஸ்லிம் மோதலால் பற்றி எரிந்தது. மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து சஞ்சய் தத் நடிப்பில் அதே ஆண்டு மே மாதம் ‘கல்நாயக்’ திரைப்படமும் வெளியானது. இந்த படத்தில் சஞ்சய்தத் தீவிரவாதியாகத்தான் நடித்திருந்தார். இந்தி திரைப்படத்தை பொறுத்த வரை, சஞ்சய் தத் நடிக்காத கதையே கிடையாது. கேங்ஸ்டரில் இருந்து காமெடி ரோல் வரை சஞ்சய் தத் கை வைக்காத ரோல்களும் கிடையாது. முன்னாபாய் எம்.பி.பி.எஸ். சில் காமெடி ரோலில் சஞ்சய் தத் வெளுத்து வாங்கியிருப்பார். சஞ்சய் தத் மட்டும் இதே போன்று சர்ச்சைகளில் சிக்கியிருக்கா விட்டால், மூன்று கான் நடிகர்களும் கூட இந்தி திரையுலகில் சஞ்சய் தத்துக்கு பின்னால்தான் இருந்திருக்க முடியும்.

சஞ்சய் தத்தை பொறுத்தவரைக்கும் தனக்கு கொடுக்கப்படுகிற கேரக்டர்கள்ல மிளிரணும்தான் ஆசை. தனக்காக கேரக்டர்கள் எழுதாமல், கேரக்டரை உருவாக்கி அதுல தன்னை பொருத்தினாத்தான் சரியா இருக்கும்னு நம்புறார். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாத்தான் என்னோட கேரக்டர் இருக்கணும்னு ஒரு டிசைனை வடிவமைச்சவர். கேரக்டருக்கு இறங்கிட்ட இயக்குநர்கள் என்ன கேட்குறாங்களோ அதைவிட 10 மடங்கு தன்னோட நடிப்பு இருக்கணும்னு நினைக்கிறவர். அதனாலதான் ஹீரோ, தீவிரவாதி, காமெடியன்னு எல்லா ரோல்களும் நடிச்சிருக்கார். இன்னைக்கும் மற்ற நடிகர்களை ஒப்பிடுறப்போ இவர் நடிச்ச படங்கள் கொஞ்சம் குறைவா இருக்கலாம். ஆனா, எல்லா படங்களும் தெறி ஹிட் ரகம்தான்.

அப்போதுதான் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து 18 மாதங்கள் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1995-ம் ஆண்டு அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. இனி சஞ்சய் தத் அவ்வளவுதான், நடிக்க மாட்டார் என எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் வெளிவந்த பிறகும் சில படங்களில் நடித்தார். அதில் ஒரு படம்தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சஞ்சய் தத்துக்கு மற்றுமொரு ஹிட்டாக அமைந்தது. ஏறத்தாழ இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு மும்பை தடா நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் மேல்முறையீடு செய்ய, தடா நீதிமன்றம் விதித்த தண்டனையில் ஒரு வருஷத்தைக் குறைச்சு 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் புனே எரவாடா சிறையில் இருந்தார், சஞ்சய் தத் . நல்லொழுக்கம் காரணமாக தண்டனை காலம் முடிவடையும் முன்னரே சிறையில் இருந்து சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சஞ்சய் தத் உதிர்த்த வார்த்தைகள் இதுதான், ‘இனிமேல் சுதந்திரமாக நடப்பது கடினமான விஷயம்’.

Also Read – லோகேஷ்.. விஜய்.. அனிருத்… லியோ-வுக்கு என்னென்ன சவால்கள் இருக்கு?!

அதேபோல சஞ்சய் தத்துக்கு அவரது வாழ்க்கையில் பிரிக்க முடியாத விஷயம் காதல் சுமார் 10 பேரையாவது காதலித்திருப்பார் சஞ்சய் தத். மாதுரி தீட்ஷித்திலிருந்து ஆரம்பித்து சுமார் 10 நடிகைகளுடன் காதல் ஏற்பட்டது. மூன்று முறை திருமணம் செய்திருக்கிறார். இப்படி எத்தனை சர்ச்சைகள் அவரைச் சுற்றி வந்தாலும் நடிப்புஎன வந்துவிட்டால் பின்னி பெடல் எடுப்பார். 1999-ம் ஆண்டு வெளியான வாஸ்டவ் படத்தின் ரகு கேரக்டரின் ஒரு காட்சியை உதாரணமாக சொல்லலாம். என்னை கொன்னுடுங்கனு தாய்கிட்ட கெஞ்சுற மாதிரியான காட்சி அது. இந்த காட்சியை ஒரு டேக்ல ஓகே பண்றேன், சுத்தி 7 கேமராவை வைச்சு எடுத்துக்கங்கனு சவால் விட்டிருக்கார். இப்போ மொத்தப் படக்குழுவும் தயாராகுது. சிங்கிள் டேக்கில் நடிச்சு முடிச்சு அசத்தினார், சஞ்சய் தத். அடுத்த வருஷம் வெளியான மிஷன் காஷ்மீர் படம் விருதுகளை அள்ளிக் குவிச்சது. இதுவரை 19 விருதுகளை குவிச்சிருக்க அவர், சர்ச்சைகள்ல மட்டும் சிக்காம இருந்திருந்தால், பாலிவுட்ல முன்னணி நடிகரா இன்னைக்கு இருந்திருப்பார். தண்டனைக் காலத்துக்குப் பின்னால கே.ஜி.எஃப்ல ஆரம்பிச்சு நிறைய படங்கள்ல நடிச்சார். இப்போ லியோவுல முக்கியமான வில்லன் ரோல் பண்றார். இன்னைக்குக் காலக்கட்டத்துல போதைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்கள்ல கலந்துகிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திகிட்டு வர்றார்.

சஞ்சய் தத் கேரக்டர்ல உங்களுக்கு எது பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top