ஷாரூக்கான்

ஷாருக்கான் பாலிவுட்டுக்கு மட்டுமல்ல… பாக்ஸ் ஆபிஸுக்கும் `பாட்ஷா’தான் ஏன் தெரியுமா?

இதெல்லாம் ஒரு முகமா?, நீயெல்லாம் நடிகனா? போய் ரோட்ல தூங்கு, உனக்கெல்லாம் 50 ரூபாய் சம்பளமே அதிகம்… மும்பையில இப்படியெல்லாம் ஷாருக்கானை பார்த்து கேட்டாங்க.

டெல்லியில் பிறந்திருந்தாலும் தந்தை, தாய் இழப்புக்கு பின்னால நடிகனாகுற ஆசையில மும்பைக்கு குடியேறினார். அப்போ இவர் பட்ட அவமானங்கள்தான் இதெல்லாம்.. இன்னைக்கு பாலிவுட் பாட்ஷானு ரசிகர்கள் கொண்டாடுற ஷாருக்கான் அன்னைக்கு 50 ரூபாய்க்காக கூலி வேலை செய்தார். இன்னைக்கு சொத்து மதிப்பை கணக்குப் போட ஆட்களை வேலைக்கு வைப்போம்னு ஷாருக்கானே நினைச்சிருக்க மாட்டார். அவர் ஏன் பாலிவுட் பாட்ஷா அப்படிங்குறதைத்தான் பார்க்க போறோம்.

ஷாருக்கான்

‘எஸ்ஆர்கே’னு உலகம் முழுக்க ரசிகர்களால கொண்டாடப்படுற ஷாருக்கான் சினிமாவுல அடியெடுத்து வச்சு 30 வருஷங்கள் முடிஞ்சிருக்கு. சினிமாவுல 30 வருஷங்கள்ங்குறது அவ்ளோ சாதாரணமான விஷயம் இல்ல, கையில தடியை வச்சுக்கிட்டு கயித்துமேல நடக்குற மாதிரி. பேலன்ஸ் ரொம்ப முக்கியம். தவறினா தடியோட சேர்ந்து நடப்பவரும் காலி. இந்தியாவின் பெரிய இன்டஸ்ட்ரின்னா அது பாலிவுட்தான். டெல்லியின் பின்தங்கிய குடும்பத்துல இருந்து பாலிவுட் சினிமாவை கட்டி ஆண்ட கதைதான் ஷாருக்கோடது. 1988-ம் வருஷம் தில் தரியானு ஒரு நாடகத்துல நடிச்சார், துரதிர்ஷமா அது பண சிக்கலால நின்னுபோக ராசியில்லாத நடிகன்னு முத்திரை குத்தப்பட்டார் ஷாருக். அடுத்த ஒரு வருஷம் இவர் எங்க போனாலும் மதிக்கலை. 1989-ம் வருஷம் ஃபாஜிங்குற சீரியல் மூலமா அறிமுகம் ஆகிறார். அப்போ சீரியல்ல கிடைச்ச ஃபேமை வைச்சு 1992-ம் வருஷம் திவானா படம் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். அன்னைக்கு இவரை திரையுலகம் பெரிசா கண்டுக்கவே இல்லை. ஏன்னா அன்னைக்கு பாலிவுட் குகைக்குள்ள ஏற்கெனவே ரெண்டு சிங்கங்கள் முட்டி மோதிக்கிட்டிருந்தன. ஷாருக்கானோட முதல் படம் வெளியாகுறப்போ சல்மான் கான் சுமார் 10 படங்கள்ல நடிச்சு முடிச்சுட்டார். அமீர்கான் 15 படங்கள் நடிச்சு முடிச்சிருந்தார். அதனால பெரிசா இவரை கவனிக்கலை. ஆனா யாரோ ஷாருக்கானாம்… பார்க்க நல்லாருக்கான்னு பெண்கள் பேசிக்கிட்டாங்க. ஆனா அடுத்த 30 வருஷம் பாலிவுட்ல ஷாருக் கொஞ்சம் கொஞ்சமா தன் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினார்.

பலம்!

ஷாருக் சீரியல்ல நடிச்சதாலயோ என்னமோ ஷாருக் நடிச்ச 10 படங்கள்ல 8 படங்கள் காதல், ரொமான்ஸ், குடும்ப பின்னணி படங்களா இருக்க மாதிரி பார்த்துக்கிட்டார். அது பெண்கள் சைட்ல இருந்து ரசிகைகளை ஆக்கிரமிக்க ஆரம்பிச்சார். ஒரு கட்டத்துல எல்லோரோலாயும் கிங் ஆஃப் ரொமான்ஸ்னு புகழப்பட்டார் ஷாருக். பெண்களையும், தன் ரசிகர்களையும் மனசுல வைச்சே எல்லா பட கதைகளையும் செலக்ட் பண்ணார். அமிதாப்பச்சனுக்கு கிடைச்சதை விட பெண் ரசிகர்கள் ஷாருக்கானுக்கு கிடைச்சாங்க. இது என்னடா அதிகமா சொல்றானேனு நீங்க நினைக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை. ரொமான்ஸ்கூட சேர்ந்த காமெடிதான் ஷாருக்கிற்கு கிடைச்ச பலம்னே சொல்லலாம். அந்த நேரத்துலதான் ஷாருக்கிட்ட ‘தில்வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே’ (1995) படம் வந்து சேர்ந்தது. ஒட்டுமொத்த பாலிவுட்டையும் மிரட்டியது, அந்தப் படம். மும்பையின் மராத்தா மந்திர் தியேட்டர்ல 1,274 வாரங்கள் ஓடியது, அதாவது 25 வருடங்கள். படம் வேற லெவல் ஹிட். குடும்பம் குடும்பமா வந்து பார்த்தவர்களை கடைசியில ஆனந்தக் கண்ணீருடன் அனுப்பிவைச்சார், ஷாருக்கான். இந்தப் படம் அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கடைக்கோடியில இருக்கிற ஒருத்தர்கிட்ட உங்களுக்கு தெரிஞ்ச இந்திப் படத்தை சொல்லுங்கனு கேட்டா, ‘தில் வாலே துல் ஹனியா’னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு பாலிவுட்டின் அடையாளமா மாறிச்சு, அந்த படம். இன்னும் சொல்லப்போனா1995-2005 வரைக்கும் 10 வருஷங்கள் போட்டிக்கு ஆளே இல்லாம தனி சாம்ராஜ்யமே நடத்தினா பாட்ஷாவா வலம் வந்தார். நடிக்க வந்த 5 வருஷங்கள்ல பெயர், புகழ், வருமானம், ஆளுமைனு உச்சம் தொட்ட ஒரே நடிகர் ஷாருக் மட்டுமே. இந்திய சினிமாவை உலக நாடுகள்ல மார்க்கெட்டிங் பண்ண ஷாருக் முகத்தைத்தான் விளம்பரமா கொடுத்தாங்க.

ஷாருக்கான்

‘பாஸிகர்’, ‘பர்தேஸ்’, ‘குச் குச் ஹோதா ஹை’, ‘தில் தோ பாகல் ஹை’, ‘தில் சே’, ‘மொஹப்பத்தீன்’, ‘கபி குஷி கபி கம்’, ‘கல் ஹோனா ஹோ’, ‘மே ஹீ னா’, ‘ரப் னே பனாதி ஜோடி’னு இனி காதல் கதைகளே இல்லைங்குற அளவுக்கு தேடிதேடி காதல் கதைகள்ல நடிச்சார். நடுவுல கொஞ்சம் வித்தியாசங்களைக் காட்டினாலும், காதல்ல இருந்து அவர் மீளவே இல்லை. சொல்லபோனா அது அவருக்கு பெரும்பலமா இருந்ததுன்னே சொல்லலாம். குறிப்பா கைகளை விரிச்சு, உடலை வளைக்குற அவரது சிக்னேச்சர் போஸ் ரசிகர்களுக்கு உற்சாக டோஸ்னே சொல்லலாம். அதேபோல ‘சாம்ராட் அசோகா’, ‘ஸ்வதேஷ்’, ‘சக் தே இந்தியா’, ‘டான்’, ‘டியர் ஜிந்தகி’, ‘பெஹலி, வீர் ஸாரா’, ‘தர்’, ‘கபி ஹல்விதா நா கெஹனா’, ‘மை நேம் ஈஸ் கான்’ படங்கள் மூலம் காதல் சப்ஜெக்ட்களுக்கு லீவ் கொடுத்துட்டு தன்னோட தனித்துவத்தைக் காட்டினார். தனக்கென தனித்துவமான பாதையை வகுத்ததாலதான் அவர் ‘பாலிவுட்டின் பாட்ஷா’வா உயரம் தொட்டிருக்கார்.

எல்லைகளை, கண்டங்களைக் கடந்து உலக அளவுல ரசிகர்களை வைச்சிருக்கும் நடிகர் ஷாருக்கான். அதனாலதான் கடந்த 2011-ம் ஆண்டு ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ அவருக்கு ‘தி வேர்ல்ட்ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’னு ஒரு பட்டமே கொடுத்தது. ஆனால், 2013-ல வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்குப் பின்னால பெரிய அளவில அவர் படங்கள் கவனம் பெறாமலே போயிடுச்சு. கடந்த 10 ஆண்டுகள் ஷாருக்கானுக்கும் அவர் ரசிகர்களுக்கும் திருப்தி இல்லாத காலகட்டம். கொரோனா காலக்கட்டத்துல பாதிப்புல இருந்து மீளமுடியாம நிறைய இன்டஸ்ரிக்கள் தடுமாறிச்சு. அதுல பாலிவுட் ரொம்பவே தடுமாறிச்சு. பாலிவுட் மாஸ் ஹீரோக்களோட படமே சரியா போகலை. இப்போதான் பதான்னு ஷாருக்கான் படம் ரிலீஸாகுது. இந்தி திரையுலகமே அதிர்ந்து போற மாதிரி 1000 கோடி க்ளப்ல அந்த படம் ஜாய்ன் பண்ணிச்சு. அந்தக்காலக்கட்டத்தை பத்தி தெளிவா சொல்லணும்னா, 2000 கோடி வசூலிச்ச அமீர்கான் சினிமா போட்ட காசை எடுக்கவே தள்ளாடிச்சு. இத்தனைக்கும் விமர்சகர்களால கொண்டாடப்பட்ட படம் வேற… மறுபடியும் நான்தான் வந்து ஆரம்பிச்சு வைக்கணும்போலங்குற மாதிரித்தான் பதானோட வேட்டை இருந்தது. இப்போ ஜவானும் ரெடியா இருக்கு. வர்ற 10-ம் தேதி ரிலீஸ் ஆக போகுது. பதான் படத்தோட வெற்றிவிழாவுல சினிமாவுல மறுபடியும் எனக்கு வழ்க்கை கொடுத்ததற்கு நன்றின்னு ஷாருக் குறிப்பிட்டார். அதுக்குக் காரணமும் இருக்கு..அது என்னனா பாலிவுட்டுக்கு மட்டும் அவர் உயிர் கொடுக்கலை. பத்து வருஷமா ஹிட்டே இல்லாத தன் சினிமா கரியருக்கும் பதான் மூலமா உயிர் கொடுத்துக்கிட்டார்.

Also Read – சஞ்சய் தத் நடிப்பை தொலைத்த கதை!

பல துறையில் பல முதலீடு

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்‘னு தொடங்கி அதன் மூலமா படங்களை தயாரிச்சுக்கிட்டு இருக்கார். இவர் தயாரிக்கிற படங்களுக்கு வெளில இருந்து எப்போவுமே பைனான்ஸ் வாங்குறது இல்லை. சொந்தக்காசை போட்டுத்தான் படம் எடுக்கிறார். யார்கிட்டேயும் பணம் வாங்கிட்டு படம் எடுக்கக் கூடாதுங்குறது இவரோட பாலிசி. அடுத்தவர் காசுல ரிஸ்க் எடுக்க எப்போவுமே விரும்ப மாட்டார். விஎஃப்எக்ஸ் நிறுவனம் ஒன்னை ஆரம்பிச்சு அதுலயும் கொடிகட்டிப் பறக்கிறார். ஐ.பி.எல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பார்ட்னர்கள்ல இவரும் ஒருத்தர். மெக்சிகோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமான கிட்சானியாங்குற நிறுவனத்தோட இந்திய கிளையிலேயும் முதலீடு செய்திருக்கார். ஆனால் பங்குச்சந்தையில ஷாருக்கான் இதுவரை முதலீடு செய்ததே இல்லை. அதுல அவருக்கு விருப்பமும் இல்லை.

இவ்வளவு கொண்டாடுற ஷாருக்கான் பத்தி அவர் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சா ஆச்சர்யமா இருக்கும். ‘நான் நடிச்ச பட காட்சிகளை முதன்முறையா திரையில பார்த்தேன். அப்போ என்னை அசிங்கமா இருந்ததா உணர்ந்தேன். என் தலைமுடி மோசமா இருந்துச்சு. அந்தக் காட்சிகளைப் பார்த்தபின்னால என்னால நடிகனாக முடியாதுனு மனசுக்குள்ள தோணிச்சு. என்னால இன்னைக்கும் நான் ஒரு நடிகன்ங்குறதை நம்ப முடியலை’ இது கடந்த 2018-ம் ஆண்டு பேட்டியில் ஷாருக் சொன்னது. இந்தப் பழைய வரலாறுகளை ஒதுக்கிட்டு, அவர் திரை ஆதிக்கத்தைப் பத்தி மட்டும் பேச நிறைய இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *