தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள்தான் ஒட்டுமொத்த திரையுலகமே பொறாமைப்படும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை அடையும். அப்படியொரு வெற்றிப்படம்தான் 1991-ஆம் ஆண்டு வெளிவந்த `சின்னத்தம்பி’
`சின்னத்தம்பி’ என்றவுடனே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கன்னக்குழி அழகுடன் சிரிக்கும் பிரபுதான். ஒரு குழந்தையின் மனநிலையில், தாலியே என்னவென்று தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வித்தியாசமான கேரக்டர் பிரபுவுக்கு. இன்னும் சொல்லப்போனால் பிரபுவின் அப்பாவான சிவாஜிக்குக்கூட இப்படியொரு ரகளையான ஒரு கேரக்டர் அமையவில்லை. படம் முழுக்க அவர் மட்டும் ஜாலியாக சிரித்துக்கொண்டு மற்ற கேரக்டர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் இப்படியொரு கேரக்டரில் பின்னி பெடலெடுத்திருப்பார் பிரபு.
குஷ்புவுக்கு கோவில் கட்ட காரணமாக இருந்த முக்கிய காரணிகளில் ஒன்று ‘சின்னத்தம்பி’. ஒரு பேச்சுக்கு சொல்லும் `பொத்தி வைச்சு’ வளரும் கேரக்டர் அவருக்கு. அப்போது பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்ட பிரபு – குஷ்பு காதல் விளைவாக, படத்திலும் இவர்களுக்குள் செம்ம கெமிஸ்டரி வொர்க் அவுட் ஆகியிருக்கும். அதிலும் பிரபு ஊரைவிட்டு செல்லும்போது, இங்கு குஷ்பு தன் வீட்டில் உடைந்த கண்ணாடி மீது நடந்தபடி பாடும் கிளைமேக்ஸ் பாடலின்போது தியேட்டரே கண்ணீரில் மூழ்கியது.
தன் தங்கையை பார்த்தாலே மொட்டையடித்து விடும் வில்லத்தனம் மிக்க ஐந்து அண்ணன்கள், தாலியே தெரியாத ஹீரோ, கழுத்தில் இருக்கும் தாலியை மறைக்கும் ஹீரோயின் என மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் படம் முழுக்க நிறைந்திருந்தாலும் அவை குறித்த எந்தக் கேள்வியும் ஆடியன்ஸுக்கு எழாதவகையில் மேஜிக் திரைக்கதை செய்து அசத்தியிருப்பார் பி.வாசு. இந்த மேஜிக்தான் இந்தப் படத்தை தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி ஏன் நேபாளம் வரை எல்லைகளைக் கடந்து, கலாசாரங்களைக் கடந்து வெற்றிவாகை சூடியது. சென்டிமென்ட், காமெடி, காதல், பாடல் என அனைத்து உணர்வுகளையும் கச்சித கலவையில் விருந்து வைத்த பி.வாசுவின் ‘சின்னதம்பி’, அவரது கரியரில் நிச்சயம் ஒரு மணிமகுடம்தான். மேலும் தன் மகன் ஷக்தியை சின்ன வயது பிரபுவாக `தூளியிலே ஆடவந்த’ பாடலில் அறிமுகப்படுத்தவும் செய்திருப்பார் பி.வாசு.
‘சின்னத்தம்பி’ வெற்றிக்கு இளையராஜாவுக்கும் பெரும்பங்கு கொடுத்தே ஆகவேண்டும். ‘போவோமா ஊர்கோலம்’, ‘தூளியிலே ஆடவந்த’, ’அரைச்ச சந்தனம்’, ‘குயில புடிச்சு’ என கதையின் போக்கிற்கேற்ப முத்தான பாடல்களை தந்திருப்பார் ராஜா. பிரபு – குஷ்புவுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்திய ‘போவோமா ஊர்கோலம்’ பாடலையே அவர்கள் பிரிய நேரிடும்போது அதே டியூனில் சோக பாடலாகவும் ரசிகர்களை கலங்கடிக்க ராஜாவைத் தவிர வேறு யாரால் முடியும்?
ஆறு மணிக்கு மேல் கண் தெரியாத தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான காமெடி கேரக்டர் கவுண்டமணிக்கு. படத்தில் வரும் அனைவருமே பார்த்து பயந்து நடுங்கும் வில்லன்களை சந்தடி சாக்கில் கலாய்க்கும் செம்ம கேரக்டரில் கவுண்டர் மகான் கலக்கியிருப்பார். ‘சூப்பரப்பு’, ’30 ரூபாய் கொடுத்தா மூணு நாள் கண்ணு முழுச்சி வேலைபார்ப்பேன்டா’ ‘உன்னால ஒண்ணேயொன்னு மிச்சம்டா, கரண்ட் பில்லு கட்டுனதே இல்லடா’ போன்ற கவுண்டமணியின் ஹிட் கவுண்டர்கள் எல்லாம் இந்தப் படத்தில்தான்.
இன்றைக்கும் கோடம்பாக்க ஸ்டோரி டிஸ்கஷன்களில் லாஜிக் குறித்த விவாதம் வரும்போது அங்கு ரெஃபரன்ஸுக்கு வரும் முதல்படம் ‘சின்னத்தம்பி’தான். அந்த அளவுக்கு லாஜிக் இல்லா மேஜிக் படைத்த ‘சின்னதம்பி’ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் வாழ்வில் இருந்து அழியாது.
Also Read : `Magus’ நிக் நேம்… முதல் முதலீடு – ஷிவ் நாடார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!