மாணிக்க விநாயகம்னா முதல்ல நியாபகம் வர்றது அந்த மணியோசைக் குரல்தான். கணீர் கணீர்னு ஒலிக்கும் அந்த்க் குரலை வச்சு அவர் பண்ண சம்பவங்கள் ஏராளம். தளபதி விஜய்க்கு ஹைபீட், நடிகர் ஷாம்க்கு சோகப்பாட்டு, கார்த்திக்கும், ஜெயம் ரவிக்கும் டூயட்னு கேமியோ அப்பியரன்ஸ்லயே கலக்க விட்டவர். சாதிக்க வயசு முக்கியம் இல்லனு நிரூபிச்சவர். மாணிக்க விநாயகம், தன்னோட முதல் சினிமா பாட்டையே 58 வயசுலதான் பாடியிருக்கார். இன்னொரு முக்கியமான விஷயம் சினிமாவுல பாட வர்றதுக்கு முன்னாடியே இவர் ஒரு இசையமைப்பாளர்… அதேமாதிரி இவரோட அப்பா பிரபலமான பரத நாட்டியக் கலைஞர், இவரது மாமா பிரபலமான இசை மேதை… அவங்கலாம் யாரு… இவரு சின்ன வயசுலயே இசைக்காகத் தேர்வு செய்த இசைக்கருவி எதுனு தெரியுமா… இப்படி பல விஷயங்களைத்தான் இப்போ பார்க்கப் போறோம்.
வெர்சடைல் வாய்ஸ்!
முதல் பாட்டுப் பயணமே விக்ரமின் அற்புதமான டூயட் பாடலோட தொடங்கிச்சு. 2001-ல விக்ரமோட ‘தில்’ படத்துல வித்யாசகர் இசையில ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி’ பாட்ட மாணிக்க விநாயகம் பாடினார். அந்தப் பாட்டு, ‘அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு’னு வர்ற இடத்துல அவர் கொடுத்த ‘ஏற்ற இறக்க ஹம்மிங்’ அப்படியே சொக்க வைக்கச்சதுனே சொல்லலாம்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறின விஜயகாந்தோட கட்சிக் கூட்டங்கள்ல ஒலிச்ச முதல் பாடல், மாணிக்க விநாயகம் பாடுனதுதான். 2001-ல விஜயகாந்தின் ‘தவசி’ படத்தில ‘ஏலே இமயமலை’ பாட்டுதான். அந்த பாட்டுல யானையோட கழுத்துல கட்டப்பட்ட மணியோட ஓசை மாதிரி ஓங்கி ஒலிக்கும். அதே விஜயகாந்துக்கு பொண்டாட்டியா நீ கிடைச்சானு ஒரு மசாலா பாட்டுல மனுஷன் ஹை-பிச்ல பெடலெடுத்திருப்பார்.
விஜய்க்கு மறக்க முடியாத படமான திருப்பாச்சியில ‘கட்டுகட்டு கீரைகட்டு’னு டூயட்ல மிரட்டவும் செஞ்சிருப்பார். மெளனம் பேசியதேல இவர் பாடின ‘அறுபது ஆயிடுச்சு, மணிவிழா முடிஞ்சிடுச்சு’ பாடல் காதலர்களோட ரிங்டோனாவே இருந்தது.
ட்ரெண்ட் செட்டர் மாஸ் பாடல்!
இவர் பாட்டுல ‘கொடுவா மீசை அருவா பார்வை’ ரொம்பவே முக்கியமான பாட்டு. இவ்வளவு வேகமா பாட முடியுமானு நினைக்குற அளவுக்கு வியக்க வச்சிருப்பார், மனுஷன். இந்த ஒப்பனிங் சாங் ஒரு ட்ரெண்ட் செட்டர் பாட்டுனுகூட சொல்லலாம். இந்த பாட்டுக்குப் பின்னால கதாநாயகன் என்ட்ரிக்கு இப்படி வகையான பாட்டுகள் வந்ததுனுகூட சொல்லலாம்.
அதேபோல மசாலா பாட்டுகள்ல ‘சுப்பம்மா சுப்பம்மா’, ‘மன்னார்குடி கலகலக்க’ ‘சின்ன வீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா’, ‘புளிப்பா புளியங்கா அவ பொடவைக் கட்டுனா வெள்ளரிக்கா’னு பல பாடல்கள் இவர் தமிழ்நாட்டின் எல்லா திருவிழா கூட்டங்களிலும் ஒலிக்கும் முக்கியமான பாட்டுகள். திருவிழாக்கள்ல போடுற பாட்டுகள்ல இவர் குரல் இல்லாம ஒரு திருவிழாவே இருக்காது.
கெஸ்ட் அப்பியரன்ஸ் கிங்!
நேரா பாடுன பாட்டுகளை விட ஒரு பாட்டுல கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து அந்த பாட்டுக்கு பலம் சேர்க்குறதுல மாணிக்க விநாயகம் கில்லாடி. அதுல ‘விடை கொடு எங்கள் நாடே’ ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’னு ஏகப்பட்ட பாட்டுகள் இருக்கு. குறிப்பா அர்ஜூனரு வில்லு பாட்டுல வர்ற ஹம்மிங்கும் வாய்ஸூம் எனர்ஜி ரகம்னா, காதல் வந்தால் சொல்லியனுப்ப பாட்டுல வர்ற ஹம்மிங்கும் வாய்ஸூம் சோகமான ரகம்.
சூர்யாவுக்கு மாஸ் எண்ட்ரி பாடல்ல ஒன்னா இருக்குற ‘நானே இந்திரன், நானே சந்திரன்’ பாட்டுல பில்டப் வாய்ஸ், பருத்திவீரன்ல ‘ஐயய்யோ’ பாட்டோட ஆரம்ப வரிகள்னு அசத்தியிருப்பார், மாணிக்க விநாயகம்.
தேடி வந்த கலைமாமணி!
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே தானே இசையமைச்சும், சொந்த குரல்லயும் பாடுன பாட்டுகளோட எண்ணிக்கை மட்டும் 15,000. முழுக்க முழுக்க கடவுள், கிராமம் சார்ந்துதான் அந்த பாட்டுகள் இருந்தது. இதை கெளரவிக்கிற விதமா 2003-ம் வருஷம் தமிழக அரசு கலைமாமணி பட்டத்தை இவருக்கு கொடுத்தது.
நடிகராக…
‘திருடா திருடி’, ‘கம்பீரம்’, ‘பேரழகன்’, ‘கிரி’, ‘போஸ்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தோழி’, ‘வேட்டைக்காரன்’, ‘பலே பாண்டியா’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘யுத்தம் செய்’ மாதிரியான பல படங்கள்லயும் நடிச்சிருக்கார். பிரபலமான பரத நாட்டியக் கலைஞர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் இளைய மகன்தான் மாணிக்க விநாயகம். பத்மினி, லலிதா, வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியம் போன்றவர்கள் வழுவூர் ராமையா பிள்ளையின் சீடர்கள். அதேபோல், 1940கள் தொடங்கி 70கள் வரை தமிழ் சினிமாவில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் கோலோச்சிய சி.எஸ்.ஜெயராமன், இவரது உறவினராவார். ஒருவகையில் இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உறவுக்காரர். சி.எஸ்.ஜெயராமன் மூலமாகத்தான் ராஜகுமாரி பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி மூலம் திரைக்கதையாசிரியரானார் கருணாநிதி.
மாணிக்க விநாயகம்னா உங்களுக்கு என்ன நியாபகம் வருதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: சிங்கத்துக்கு வாலா.. எலிக்கு தலையா..? ஆர்.ஜே. பாலாஜி ஜெயிச்ச கதை