இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்… 11 சுவாரஸ்ய தகவல்கள்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய 11 சுவாரஸ்ய தகவல்களைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.

  • 1990-களில் சென்னை சாலிகிராமத்தில் இருந்த ‘கவிதை இல்லம்’ என்ற ஒரு மேன்சன்தான் உதவி இயக்குநர்களின் சரணாலயம். அதில்தான் முருகதாஸூம் தங்கியிருந்தார். யாரிடமும் அதிகம் பேசாத குணம் கொண்ட இவர், காலையில் கிளம்பிப்போனால் ராத்திரி பரோட்டா பார்சலோடு திரும்பி மொட்டை மாடியில் போய் படுத்துக்கொள்வாராம்.
  • தீவிர வாசிப்பு பழக்கம் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அப்படியாக அவர், உதவி இயக்குநராக ஆவதற்கு முன்பே 25-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவைதான் அவரை கதாசிரியர் கலைமணியிடம் உதவியாளராகக் கொண்டு சேர்த்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ்
  • இயக்குநர் பிரவீன் காந்தியிடம் ‘ரட்சகன்’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது உடன் பணியாற்றியவர்தான் எஸ்.ஜே.சூர்யா. பிறகு அவர் இயக்குநரானதும் அவருடைய ‘வாலி’ படத்திலும் பணியாற்றினார். அங்குதான் அஜித்தின் பரிச்சயம் முருகதாஸுக்கு கிடைத்தது. 
  • ஏ.ஆர்.முருகதாஸின் தந்தை மறைந்து அதற்கான இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகளின்போது இவருக்கு அரசு அலுவலகங்களில் நடந்த முறைகேடுகளும் அலைகழிப்புகளும்தான் ‘ரமணா’ படக்கதை உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது.
ரமணா
ரமணா
  • ‘துப்பாக்கி’படத்தின் கதையை முதலில் ஆர்யாவை மனதில் வைத்துதான் எழுதினார் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகுதான் அதில் விஜய் உள்ளே வந்தார்.
  • ஒருமுறை முருகதாஸூக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து காய்ச்சலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு முதல் படமான ‘தீனா’ கதையை அதன் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தியிடம் சொல்லும் வாய்ப்பு வந்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ்
  • தீவிர கடவுள் பக்தி கொண்டவர். அவரது கைகளில் எப்போதும் விதவிதமான கயிறுகளை காணலாம். அடிக்கடி முடி காணிக்கை செலுத்தும் பழக்கமும் கொண்டவர் இவர்.
  • ஷூட்டிங் ஸ்பாட்டில் பசி, தூக்கம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர் முருகதாஸ். இப்படி‘கத்தி’ கடைசிக்கட்ட படப்பிடிப்பில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென ஸ்பாட்டில் மயங்கியே விழுந்துவிட்டார். 
  • ‘ஹிந்தி’ கஜினி படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இல்லை. ஒரிஜினல் இயக்குநரை மரியாதை நிமித்தமாக சந்திக்க மட்டுமே அழைத்திருக்கிறார் அமீர்கான். அப்போது இவரது தோற்றத்திலும் பேச்சிலும் இம்ப்ரெஸ் ஆன அமீர்கான் பின் இவரே ஹிந்தியிலும் அந்தப் படத்தை இயக்கட்டும் என சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் அப்போது முருகதாஸுக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலமும் ஓரளவுக்குதான் தெரியுமாம்.
கஜினி
கஜினி
  • விக்ரமுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணையப்போகிறார் என இப்போது தகவல்கள் வந்துகொண்டிருக்க, இந்த கூட்டணி ஏற்கெனவே ஒருமுறை இணைவதாக இருந்து பின் தள்ளிப்போயிருக்கிறது. ‘ரமணா’ படத்தைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன விக்ரம் இவரை அழைத்து கதைக் கேட்டு ‘வரதன்’ என தலைப்பும் அந்தக் கதைக்கு முடிவானது. பின் அந்த ப்ராஜெக்ட் நடக்காமல் போக, அதன்பிறகு அந்த கதையை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ‘ஸ்டாலின்’ என்ற படமாக இயக்கி வெற்றி கண்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
  • ஏ.ஆர்.முருகதாஸுக்கு உதவி இயக்குநர்கள்தான் எல்லாமே. ஒரு நாளின்  பெரும்பாலான மணி நேரங்களை அவர்களுடன்தான் இவர் செலவிடுவார். தனது பட விழாக்கள் அனைத்திலும் தன் உதவி இயக்குனர்களை மேடையேற்றி கௌரவிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார். அதுபோல இவரிடம் பணியாற்றி முடித்து தனியே படம் இயக்க முயற்சி செய்யும் உதவி இயக்குநர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்ந்து சம்பளம் வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்போதுதான் அவர்கள் கவலையில்லாமல் முயற்சி செய்யமுடியும் என்பாராம்.

Also Read: சோதனையில் இருந்த ரஜினிக்கு சாதனையைக் கொடுத்த சந்திரமுகி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top