ஆல்பம் பாடல்கள்

`என்ஜாய் எஞ்சாமி’ முதல் `அடிபொலி’ வரை… 2021-ல் யூ டியூபில் கலக்கிய ஆல்பம் பாடல்கள்!

தமிழ் சினிமா பாடல்களில் பல ரசிகர்களை ஒருபக்கம் கவர்ந்திழுக்க, மறுபக்கம் தனி ஆல்பம் பாடல்களையும் மக்கள் ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டிருந்தனர். அவ்வகையில், இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பத்து ஆல்பம் பாடல்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்!

என்ஜாய் எஞ்சாமி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக தொடங்கிய மாஜா தளத்தில் வெளியான முதல் பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர் அறிவு மற்றும் தீ ஆகியோரது கூட்டணியில் உருவான இந்தப் பாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஒரு பாட்டி தனது பேரனுக்கு சொன்ன கதையில் இருந்து வரிகள் எடுக்கப்பட்டு இந்தப் பாடல் உருவாக்கப்பட்டதாக பாடகர் அறிவு தெரிவித்திருந்தார். இதுவரை யூ டியூபில் இந்தப் பாடலை 371 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

குட்டி பட்டாஸ்

சில நாள்களுக்கு முன்பு ஹாட் டாப்பிக்காக இருந்த சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்த அஸ்வின் நடித்த பாடல்தான் ‘குட்டி பட்டாஸ்’. காதலர்களுக்கு இடையே நடக்கும் சிறு சண்டைகளை மையமாக வைத்து இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். ரொம்பவே கியூட்டான பாடல். யூ டியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்த இந்தப் பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். அ.ப.ராசா பாடலின் வரிகளை எழுதியுள்ளார். இதுவரை யூ டியூபில் 144 மில்லியன் மக்கள் இந்தப் பாடலை பார்வையிட்டுள்ளனர்.

அஸ்க்கு மாரோ

‘அவளுக்கு சிங்கர்னா உயிரு. எனக்கு அவனா உயிரு’ அப்டினு காதலியை கரெக்ட் பண்ண காதலர் தனது நண்பரிடம் ‘வாய்ஸ் உந்து, லிப் எந்து’ என பாடும் பாடல்தான் அஸ்க்கு மாரோ. கவின், தேஜூ அஸ்வினி நடிப்பில் தரண் குமார் இசையமைப்பில் கு.கார்த்திக் வரிகளில் தரண் குமார் மற்றும் சிவாங்கி ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். இதுவரை 42 மில்லியன் மக்கள் இந்தப் பாடலை பார்வையிட்டுள்ளனர். அந்தக் காலத்து ஐடியாவா இருந்தாலும் பக்காவா பிளான் பண்ணி வொர்க் அவுட் பண்ணியிருக்காங்க `அஸ்க் மாரோ’ டீம்.

கிரிமினல் க்ரஷ்

அஸ்வின் மற்றும் தன்யா நடிப்பில் காட்சன் இசையமைப்பில் எம்.ஜி.எம் வரியில் உருவான இந்தப் பாடலை ராக் ஸ்டார் அனிருத் பாடியுள்ளார். வழக்கமான காதல் பாடலாக இந்தப் பாடல் அமைந்திருக்கும். யூ டியூபில் இதுவரை இந்தப் பாடலை சுமார் 6 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

வாடா ராசா

இதுவரைக்கும் நாம பார்த்த பாடல்களில் கொஞ்சம் மண் வாசனை மிஸ் ஆகுதுல. இந்தப் பாடல் அந்தக் குறையை தீர்த்து வைக்கும். கென், கிரேஸ் மற்றும் ஈஸ்வர் கூட்டணியில் இந்தப் பாடல் உருவானது. தமிழர்களின் பாரம்பரியத்தைக் கூறும் வகையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டிருக்கும். யூ டியூபில் இதுவரை 18 மில்லியன் பார்வையாளர்களை இந்தப் பாடல் பெற்றுள்ளது.

Also Read : `இந்தப் படங்கள் எல்லாம் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு!’ – 2021-ன் டாப் 10 மாஸ் ஹிட்ஸ்!

நோ நோ நோ நோ

‘குக் வித் கோமாளி’-யில் சிவாங்கி சொன்ன ‘நோ நோ நோ நோ’னு டயலாக்க அப்படியே பாட்டா மாத்திடாங்க. கார்த்திக் தேவராஜ் இசையில் ஹெச்.கே. ரவூஃபா வரிகளில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. சிவாங்கி ரசிகர்களுக்காகவே இந்தப் பாடலை உருவாக்கியிருக்காங்கனு சொல்லலாம். வரிகளில் இருந்து நடனம் வரை சிவாங்கிதான் நிரம்பியிருக்காங்க. அப்படியே நடுவுல கொஞ்சம் கருத்தையும் சொல்லியிருக்காங்க. இதுவரை கேக்கலைனா கேளுங்க. நல்லாருக்கும். யூ டியூபில் இதுவரை 7 மில்லியன் மக்கள் இந்தப் பாடலை பார்வையிட்டுள்ளனர்.

கண்ணம்மா கண்ணம்மா

இன்ஸ்டா ரீல்ஸ கொஞ்சநாள் ‘கண்ணம்மா கண்ணம்மா பாடல் ஆக்கிரமிச்சிருந்தது. ரியோ ராஜ், பவித்ரா நடிப்பில் தேவ் பிரகாஷ் இசையில் தாவூத் வரிகளில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். கொஞ்சம் பப்ளியான பாடல் இது. யூ டியூபில் இதுவரை 4 மில்லியன் மக்கள் இந்தப் பாடலை பார்வையிட்டுள்ளனர்.

யாத்தி யாத்தி

அஸ்வின் ஃபேன்ஸ்க்கு மற்றுமொரு ட்ரீட்டாக அமைந்த பாடல் இந்த ‘யாத்தி யாத்தி’. அஸ்வின், ஹர்ஷடா ஆகியோரின் நடிப்பில் அபிஷேக் இசையமைப்பில் ராம் கணேஷ் வரிகளில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. `யாத்தி… யாத்தி’ இந்த வரிகளுக்கு அஸ்வின் ஆடும் ஸ்டெப் இன்ஸ்டாவில் செம ஃபேமஸ். இதுவரைக்கும் யூ டியூபில் இந்தப் பாடலை 20 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

அடிபொலி

இந்த வருஷம் ஆல்பம் பாடல்கள் பெரும்பாலனவற்றை அஸ்வின் குத்தகைக்கு எடுத்துகிட்டார்னு சொல்லலாம். அவ்வளவு பாட்டு வெளியாகியிருக்கு. அவருடைய நடிப்பில் வெளியான மற்றொரு பாடல் ‘அடிபொலி’. சித்துகுமார் இசையமைப்பில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சிவாங்கி குரலில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அஸ்வின், சிவாங்கி காம்பினேஷன் வந்தாலே பாட்டு ஹிட்டுதான் போல. இதுவரைக்கும் யூ டியூபில் 45 மில்லியன் மக்கள் இந்தப் பாடலை பார்வையிட்டுள்ளனர். இந்தப் பாட்டுல வர்ற ஸ்டெப்லாம்கூட ரொம்பவே ஃபேமஸ்தான். அடிபொலி!

என்ன வாழ்க்கைடா

விஜய் டி.வி புகழ் ரக்சன், டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து, சுனிதா, ஸ்வஸ்திகா ஆகியோரது நடிப்பில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. கணேசன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அ.ப.ராசா இந்தப் பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். பென்னி தாயாள் மற்றும் வ்ருஷா பாலு ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். இந்தப் பாடலை இதுவரை 5 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். `இது என்ன வாழ்க்கைடா’னு ஜாலியா ஒரு பாடலை இந்த டீம் கொடுத்துள்ளனர். இந்தப் பாடலை பார்க்கும் சிங்கிளா நீங்க? அப்போ உங்களுக்கும் இந்த டயலாக் தோணும். என்ன வாழ்க்கைடா?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top