கொரோனாவால் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் OTT-யில்தான் அதிகளவில் படங்கள் வெளியாகின. சமீபத்தில் தியேட்டர்களும் திறந்துவிட்டன. படங்களும் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் OTT-யிலும் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. படங்கள் ஒரு பக்கம், சீரிஸ்கள் ஒரு பக்கம் என கோலாகலமாக போய்க்கொண்டிருக்கிறது. என்டர்டெயின்மென்ட்டுக்கும் பஞ்சம் இல்லை. அந்த வரிசையில் இந்த வாரம் எதைப் பார்ப்பது, எதை விடுவது என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு ஏகப்பட்ட படங்களும், சீரிஸ்களும் வெளியாக இருக்கிறது. அதன் லிஸ்ட் இதோ!
-
1 லாபம் (தியேட்டர்) :
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய கடைசி படம் லாபம். சமூக பிரச்னைகள் மீதான இவரது பார்வையே ஒவ்வொரு படத்திற்கும் மாறுபட்டிருக்கும். அந்த வகையில் லாபம் படத்தில் இவர் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் குறித்த பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பார்த்துப் புளித்த ஒரு கன்டென்ட்தான் விவசாயம். ஆனால், ஜனநாதனின் பார்வை என்னவாக இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அவரது கடைசி படமான லாபம் தியேட்டரில் வெளியாகட்டும் என்ற எண்ணத்தில்தான் தியேட்டரின் ஓப்பனிங்காக காத்திருந்தார்கள். வரும் வெள்ளிக்கிழமை (9/9/2021) தியேட்டரில் வெளியாகிறது லாபம்.
-
2 தலைவி (தியேட்டர்) :
குட்டி ஸ்டோரியை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். ஏற்கனவே குயின் வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜிஆர் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெயிலருக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் படமும், வரலாறும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிற எதிர்பார்ப்பில் அனைவரும் காத்திருக்கிறார்கள். அதுவும் தி.மு.க-வின் ஆட்சியில் இந்தப் படம் வெளியாவது சுவாரஸ்யமான விஷயம். லாபம் படத்தோடு சேர்த்து தலைவியும் வெளியாகிறது.
-
3 லூசிஃபர் சீசன் 6 (நெட்ஃப்ளிக்ஸ்) :
டாம் எல்லிஸ் நடிப்பில் உருவான வெப் சீரிஸ் லூசிஃபர். இதுவரை 5 சீசன்களும், 6-வது சீசனின் முதல் வால்யுமும் வெளிவந்த நிலையில் 6-வது சீசனின் 2-ம் வால்யும் 10-ம் தேதி வெளியாகிறது. இந்த சீரிஸை ஹீரோ டாம் எல்லிஸின் ஸ்டைலான நடிப்பிற்காகவே பல பேர் பார்த்தார்கள். போக கதைக்களமும் வித்தியாசமாக அமைந்திருந்தது. நரகத்தின் அரசனான லூசிஃபர், லாஸ் ஏஞ்சல்ஸிற்கு மனித உருவில் வெக்கேஷன் வந்தால் என்னவாகும் என்பதுதான் கதையின் ஒன்லைன். இந்த சீசனோடு மொத்த சீரிஸும் முடிவுக்கு வரப்போவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள். 6-வது சீசனின் முதல் வால்யும் அப்படியான செம டிவிஸ்டோடு முடிந்தது. மீதியிருக்கும் 10 எபிசோடுகளும் 10-ம் தேதி வெளியாகிறது.
-
4 துக்ளக் தர்பார் (நெட்ஃப்ளிக்ஸ்) :
விஜய் சேதுபதிக்கு தியேட்டரில் லாபம் வெளியாவது போல் OTT-யில் துக்ளக் தர்பார் வெளியாகிறது. லாபம் படத்தில் தொழிற்சாலைகள் வன்கொடுமைகளை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அப்படியே துக்ளக் தர்பார் பக்கம் வந்தால் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இந்த இரு படங்கள் இல்லாமல் எக்கச்சக்க படங்கள் இவரது லிஸ்ட்டில் இருக்கிறது ஒவ்வொரு படமும் வரிசையாக வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் டெல்லி பிரசாத். பார்த்திபன், பக்ஸ், சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, ராஜ்குமார், கருணாகரன் என பல நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். 10-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்புவதைத் தொடர்ந்து 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.
-
5 டிக்கிலோனா (ஜீ5) :
கவுண்டமணி - செந்தில் காமெடியில் எபிக்கான ஒரு கேம்தான் டிக்கிலோனா. கவுண்டமணி ஸ்டைலை ஃபாலோ செய்து வரும் சந்தானம் அதன் டைட்டில் கொண்ட படத்தில் நடிக்கிறார் என்பதே மிகுந்த எதிர்பார்ப்பை கொடுக்கிறது. கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மூன்று ரோல்களில் நடிக்கிறார் சந்தானம். தவிர, சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் டிராவல் போன்ற விஷயங்களும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு எக்ஸ்ட்ரா போனஸ். ஜீ5-யில் வரும் 10ம் தேதி வெளியாகிறது இந்தப் படம்.
-
6 நெட் (ஜீ5) :
அர்ஜூன் ரெட்டி, ஜதிரத்னாலு போன்ற படங்களில் நடித்த ராகுல் ராமகிருஷ்ணா லீடு ரோலில் நடித்திருக்கும் படமே நெட். இன்டர்நெட்டில் ஒருவருடைய ப்ரைவசி எந்தளவிற்கு அம்பலமாகிறது என்பதில் ஆரம்பித்து ஒரு த்ரில்லர் சப்ஜெக்ட்டையும் பேச இருக்கிறது நெட். வரிசையாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் கவனம் பெற்று வருகிறது அந்த வரிசையில் இந்தப் படமும் இவருக்கு ஒரு மைல்ஸ்டோனாகவே அமையும். செப்டம்பர் 10ம் தேதி ஜீ5-வில் வெளியாகிறது.
-
7 மும்பை டைரீஸ் 26/11 (அமேஸான் ப்ரைம்) :
நிக்கில் அத்வானி மற்றும் நிக்கில் கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் வெப் சீரிஸ் மும்பை டைரீஸ் 26/11. 2008 மும்பை தாக்குதல்தான் இதன் மையக்கதை. ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் இந்தப் படம் அரசியலாக சில விஷயங்களை பேசினாலும் மேஜரான கதை அந்த சமயத்தில் மருத்துவர்கள் எப்படி உழைத்தார்கள் என்பதுதான். அந்த தாக்குதலால் ஏகப்பட்ட அப்பாவி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். அந்த சமயம் அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், முதல் உதவி செய்தவர்கள் என முழுக்க மெடிக்கல் டிராமாவாக உருவாகியிருக்கிறது. அமேஸான் ப்ரைமில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது.
-
8 Kate (நெட்ஃப்ளிக்ஸ்) :
சாகப்போகும் படத்தின் நாயகி, தனது ஆசைகளை ரத்தத்தால் நிறைவேற்றிக் கொள்வதுதான் இந்தப் படத்தின் கதை. இதற்குள் ஒரு பலி வாங்குதல் கதை, அப்பா - மகள் கதை என கலந்துகட்டி நகரும் திரைக்கதை. True Detective, Zombieland போன்றவற்றில் நடித்த Woody Harrelson இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெமினி மேன், Birds of prey போன்ற படங்களில் நடித்த Mary Elizabeth Winstead இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார். வரும் 9ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
-
9 சர்வைவர் (டிவி ஷோ) :
அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியானது வரும் ஞாயிற்றுக்கிழமையில் (12/9/2021) இருந்து ஜீ டிவியில் ஒளிபரப்பாகிறது. விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, விஜயலட்சுமி, பார்வதி, காயத்ரி ரெட்டி, ஸ்ருஷ்டி டாங்கே, உமாபதி ராமையா ஆகியோர்கள் இந்த ஷோவில் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர். அதுவும் இதன் ஷூட்டிங் ஆப்ரிக்காவில் இருக்கும் வனப்பகுதியில் படமாக்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
10 டக் ஜகதிஷ் (அமேஸான் ப்ரைம்) :
நானி, ஐஷ்வர்யா ராஜேஷ், ஜகபதி பாபு, நாசர், ரீத்து வர்மா போன்றவர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் டக் ஜகதிஷ். கேங் லீடர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படம் இவருக்கு கமர்ஷியலாக வொர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments