Murali – இதய நாயகன் முரளி.. ஏன் தெரியுமா?

இன்னைக்கு இருக்குற 2கே கிட்ஸ்க்கு நடிகர் அதர்வாவோட அப்பா முரளினுதான் நியாபகம் இருக்கும். தனி ரசிகர் பட்டாளத்தோட ஆர்ப்பாட்டம்னு எதுவும் இல்லாம மக்கள் இதயத்துல இடம்பிடிச்சவர் முரளி. மக்கள் இதய நாயகன்னு கொண்டாடுன காலக்கட்டம் அது… சிவாஜி-எம்.ஜி.ஆர், கமல் – ரஜினி என ரசிகர்கள் இருந்த காலக்கட்டம் அது. ஒருவரைப் பிடித்தால் மற்றொவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள். ஆனால், அந்த ஹீரோ நடிகர்கள், இந்த ஹீரோ நடிகர்கள் என ஹீரோ நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர்… முரளி.

முரளி
அதர்வா – முரளி

அசிஸ்டெண்ட் டைரக்டர் டு நடிகர்!

முதன்முதலா அசிஸ்டெண்ட் டைரக்டரா தன்னோட கரியரை ஆரம்பிச்சார். ஆரம்பகாலங்களில் 14 படங்கள் அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை பார்த்தார். முதல் கன்னடப் படமான ‘பிரேம பர்வா’ங்குற படம் ரிலீஸான முதல் நாள், முதல் ஷோ… மக்களோட மக்களா தியேட்டர்ல படம் பார்க்கப் போனவர், மக்கள் ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்ங்குற பயத்தால கதவுக்குப் பக்கத்துல இருக்குற ஸ்கிரீனுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டாராம். படம் முடிஞ்சு எல்லோரும் வெளியே வரும்போது முரளி அப்பாவோட பி.ஏ அவரை இழுத்து ரசிகர்கள் கூட்டத்துக்குள்ள விட்டுட்டிருக்கிறார். அப்போ பயந்து நின்ன முரளியை ரசிகர்கள் தோள்ல தூக்கி உட்கார வச்சுக்கிட்டாங்களாம்.

முரளி
முரளி

நிஜவாழ்க்கை ட்விஸ்ட்!

தன்னோட நண்பன் கந்தாவோட காதலுக்கு ஹெல்ப் பண்ண துணையா போனார், முரளி. அந்த நண்பனோட காதலி கிருபா கூட துணைக்கு வந்த பொண்ணு ஷோபா. கடைசியில துணைக்கு வந்த முரளி – ஷோபா ஜோடி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அந்த கந்தா-கிருபா ஜோடி கல்யாணமே பண்ணிக்கல. சினிமாவுல காதலைச் சொல்ல முடியாம தவிச்ச அவரோட வாழ்க்கையில செம ட்விஸ்ட்டான சம்பவம் நடந்தது. தன்னோட அம்மாகிட்ட தான் காதலிக்கிற விஷயத்தைச் சொல்லியிருக்கார். உடனே, சாயங்காலம் 6 மணிக்கு கோயிலுக்குக் கூட்டிட்டு போய் கல்யாணமே பண்ணி வச்சுட்டாங்களாம் அவரோட அம்மா.

முரளி
முரளி

சினிமாவும் மக்களும் சேர்ந்து கொண்டாடிய நாயகன்!

முரளியா… சம்பளக் கெடுபிடி செய்யமாட்டார்னு தயாரிப்பாளர்கள் தரப்பும், முரளியா… எந்தக் கேரக்டரா இருந்தாலும் நடிச்சுக் கொடுப்பார்னு இயக்குநர்கள் தரப்பும் ஒன்னா சொன்னாங்க. அதே மாதிரி முரளியோட படங்கள்… முதலுக்கு மோசம் செய்யாதுனு விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியாவும், முரளி படங்கள் குடும்பத்தோட பார்க்கலாம்னு மக்கள் கொண்டாடுனாங்க அவரை… இப்படி எல்லா தரப்பும் கொண்டாடுன ஒரு ஹீரோ.

இடம் கொடுத்த இதயம்!

91-ம் வருஷம் இதயம் சினிமா மூலமா மக்கள் மனசுல ஆழமா ஒரு இடத்தை பிடிச்சார், முரளி. காதலைச் சொல்லமுடியாத ஏக்கம், துக்கம், வலி, வேதனை, இயலாமைனு தன் முகபாவங்களிலேயே எல்லாத்தையும் அழகா வெளிப்படுத்தினார் முரளி. இந்த படத்துல சோகம் கலந்து வர்ற இவரோட குரலும் சேர்ந்து நடிச்சிருக்கும். நிச்சயமா இந்தப் படத்துல முரளியைத் தவிர யாரும் நடிக்கவே முடியாது என தன் நடிப்பை நிரூபித்தார்.

முரளி
முரளி

அதிரடி நாயகன்!

பின்னாளில் அமைதியின் உருவமாக இருந்த முரளியின் முதல் தமிழ்ப்படமான பூவிலங்குல ‘முரட்டுத்தனம் கொண்ட கல்லூரி இளைஞன்’ கதாபாத்திரம்ங்குறது முரணான விஷயம்தான். இதயம் படத்தோட இமேஜ்ல இருந்து திரும்பி வர முரளி ரொம்பவே கஷ்டப்பட்டார். அதனால, இதயம் படத்துக்கு பின்னால `இரணியன்’, ‘அதர்மம்’, ‘வீரத்தாலாட்டு’, ரத்னா, தேசியகீதம், வெற்றிக்கொடிகட்டு, மனுநீதினு அதிரடியாவும் நடிச்சார், முரளி. அப்பவும் அதை மக்கள் ஏத்துக்கிட்டாங்க.

எமோஷன் கோட்டையின் ராஜா!

பொற்காலம் மாணிக்கத்தை அவ்ளோ ஈஸியா யாரும் மறந்திருக்க முடியாது. இறந்த தன்னோட தங்கச்சியைத் தூக்கிட்டு அழுதுகொண்டே நடந்துபோன அந்த சீன்ல தியேட்டர்ல கண்ணீர் மழையாவே இருந்தது. ஆனந்தம் படத்துல, `ஆளாளுக்கு பீரோல கை வைக்காதீங்க’னு மம்முட்டி சொல்ற அந்த சீனுக்கு முரளி காட்டிய ரியாக்‌ஷனில் மொத்த தியேட்டரும் கலங்கியது. காமெடியும் எப்படி ரொம்ப கஷ்டமோ, அதுக்கு நிகரானது எமோஷன்.. மனுஷன் ஒருவார்த்தை கூட பேசாமல் முகபாவனைகளிலேயே ஸ்கோர் பண்ணியிருப்பார். எமோஷன் கோட்டையின் ராஜா எப்பவுமே முரளிதான்…

காமெடியும் வரும்!

எதுக்கெடுத்தாலும் எமோஷன் ஆகுற கேரெக்டரா நடிச்சிட்டிருந்த நேரத்துல, எனக்கு காமெடி வராதுனு யார்ரா சொன்னாங்குற ரேஞ்சுல `சுந்தரா டிராவல்ஸ்’ படத்துல, வடிவேலு, விணுசக்கரவர்த்தியோட சேர்ந்து முரளி அடித்த லூட்டிய இன்னைக்கு நினைச்சாலும் சிரிப்பை அடக்கமுடியாது. சொல்லப்போனா வடிவேலுவுக்கு இணையா தன்னோட இன்ட்ரோ சீன்ல இருந்தே காமெடியில பின்னியிருப்பார், மனுஷன்.

முரளி
முரளி

நம்மவீட்டுப் பிள்ளை!

முரளி ஹீரோ, அண்ணன், தம்பி, நண்பன், காலேஜ் ஸ்டூடண்ட்னு பல கேரெக்டர்களுக்கும் பொருந்தக்கூடிய எவர்கிரீன் நாயகன் ‘முரளி’ மட்டும்தான். பெரும்பாலும் நடிகர்களுக்கு பக்கத்துவீட்டு பையன் மாதிரி கேரெக்டர்தான் ஒத்துப்போகும். ஆனா, முரளியை திரையில பார்க்குற ஒவ்வொருத்தரும் தன் வீட்டுப் பிள்ளையாவே கொண்டாடினாங்க.

தரமான சம்பவம்!

முதல் படம் கல்லூரி இளைஞனாக அறிமுகமாகி, கடைசியா வந்த பாணாகாத்தாடியில கூட அசல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியே வந்தார் முரளி. அந்த அளவுக்கு இளமையாகவே இருந்தார் முரளி. அநேகமா தமிழ் சினிமாவுல அதிகமா புத்தகத்தை தூக்கிட்டு காலேஜ் ஸ்டூடண்ட்டா நடிச்சவரும் நம்ம முரளிதான். ஆனா, நிஜ வாழ்க்கையில காலேஜ் போனதே இல்லை. 10-ம் வகுப்பு பெயில்ங்குறது நம்மில் எத்தனை பேருக்கு மாலும் ஹே.. புதுசா இருக்குல்ல…

Also Read: Singampuli: ரஜினி சிபாரிசு… அசிஸ்டண்ட் டைரக்டர் டு Innocense comedian- சிங்கம்புலியின் திரைப் பயணம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top