டெட் மேன், ஸ்லீப்பி ஹாலோவ், ஃபிரம் ஹெல், சீக்ரெட் விண்டோ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜானி டெப். இவர் கடந்த 2003-ம் ஆண்டு ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: த கர்ஸ் ஆப் தி பிளாக் பேர்ல்’ என்ற படத்தில் ஜாக் ஸ்பேரோவாக நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்தார். இதையடுத்து, பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களின் பாகங்களில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். இந்த பாகங்களும் அவருக்கு ஹிட்களை கொடுத்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜானி டெப்புக்கும் அவரது மனைவி ஆம்பர் ஹெர்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விவாகரத்துப் பெற்றனர்.

ஆம்பர் ஹெர்ட் விவாகரத்து பெற்ற பிறகு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஜானி டெப்பைக் குறித்து அவதூறாக தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த புகார் காரணமாக ஜானி டெப், `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆம்பர் ஹெர்ட் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாகவும் இதனால் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறி சுமார் 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜானி டெப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த சம்பவம் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறி தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் இடையேயான பிரச்னையால் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாகத்தில் இருந்து ஜானி டெப்பை நீக்கியதாக தகவல்கள் வெளியாகின. ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் திரைப்படத்தில் ஜானி டெப் க்ரிண்டல்வால்ட் கதாபாத்திரத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதையை ஜே.கே.ரௌலிங் எழுதியுள்ளார். ஸ்டீவ் க்ளோவ்ஸ் மற்றும் ஜே.கே.ரௌலிங் ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர். ரௌலிங், டேவிட் ஹேய்மேன மற்றும் லியோனல் விக்ராம் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டராக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஜானி டெப் வெளியிட்ட அறிக்கையில், “வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தால் க்ரிண்டல்வால்ட் கதாபாத்திரத்தில் இருந்து விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
வார்னர் ப்ரோஸ் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஜானி டெப் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் திரைப்படத்தில் இருந்து விலகுவார். அவர் இதுவரை இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு நன்றி” என்று ஜானி டெப்பின் தகவலை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் ஜானி டெப்பை மீண்டும் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் ஊடகங்களில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். கடந்த சில நாள்களாக #JusticeforJohnny என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்கள் ஜானி டெப்பின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அகுவாமேன் 2 திரைப்படத்தில் ஆம்பர் ஹெர்ட் நடிப்பதற்கு எதிராகவும் தங்களது குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்திய அளவிலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.

ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் திரைப்படத்தில் ஜானி டெப்புக்கு பதிலாக மேட்ஸ் மிக்கெல்சன் நடிக்கவிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, “ஜானி டெப்பின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருக்கு நடந்தது நியாயமா என்றும் தெரியவில்லை. ஜானி டெப் இந்தப் படத்தை விட்டு வெளியேறிய பின்னர் வார்னர் பிரதர்ஸ் என்னை அவசரமாக அழைத்தனர். எனக்கு ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது. இதனால், படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன். இந்த விஷயம் சர்ச்சைக்கு உள்ளாகும் என்றும் எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
Also Read : ஒன்றிய அரசு வார்த்தை ஏன்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகை கொடுத்த விளக்கம் – என்ன நடந்தது?
0 Comments