தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னராகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், முதன்முதலில் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் நாடோடி மன்னன். தமிழ் சினிமாவில் பல `முதல்’ சாதனை படைத்த அந்தப் படம் உருவான பின்னணி ரொம்பவே சுவாரஸ்யமானது.
எம்.ஜி.ஆர்
தமிழ் சினிமாவில் 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில் ரங்கய்ய நாயுடு என்ற போலீஸ்காரர் வேடம் மூலம் அறிமுகமானவர் எம்.ஜி.ஆர் என்று மக்களால் அன்ப்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன். அதன்பிறகு ஏறக்குறைய சுமார் 11 ஆண்டுகளில் 14 படங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று நடித்துக் கொண்டிருந்தவர், ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். கருணாநிதி வசனத்தில் வெளியான அந்தப் படம் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. அவரை ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குநர் எஸ்.ஏ.சாமி தயங்கினாலும், தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு விடாப்பிடியாக நின்றதால் ஹீரோவானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த 30 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். அ.தி.மு.க-வைத் தொடங்கி 1977-ல் தமிழக முதல்வாரானர். அவர் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் 1978-ல் வெளியானது.
நாடோடி மன்னன்
எம்.ஜி.ஆரின் கரியரில் முக்கியமான இடத்தைப் பிடித்த படம் நாடோடி மன்னன். தி.மு.க-வில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், 1958-ல் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மிக பிரமாண்டமாய் அந்தப் படத்தைத் தயாரித்தார். டபுள் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல், தயாரிப்பு, இயக்குநர் பொறுப்பையும் அவர் ஏற்றிருந்தார். கரியரின் தொடக்கம் முதலே நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்த அவர், முதல்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்தது இந்தப் படம் மூலமே.
நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து தயாரித்தார். அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த பல படங்களைத் தள்ளிவைத்து விட்டு முழுமூச்சில் இந்தப் படத்துக்காகப் பணியாற்றினார். கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்ததோடு, தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் பெற்று படத்துக்கான வேலைகள் பிரமாண்டமாக நடைபெற்றன. மன்னர் மார்த்தாண்டன் மற்றும் போராளி வீராங்கன் என இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் கலக்கினார்.
ஸ்டார் காஸ்டிங்
படத்தில் எம்.ஜி.ஆரோடு எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜா தேவி உள்ளிட்ட 3 கதாநாயகிகள் என அப்போது முன்னணியில் இருந்த நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நூற்றுக்கணக்கில் துணை நடிகர்கள், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், பிரமாண்ட அரங்குகள் என படத்தின் தயாரிப்பு செலவு ஏகத்துக்கும் எகிறியது. ஒரு கட்டத்தில் ஏவிஎம் நிறுவனத்திடமே கடன் வாங்கும் நிலை. அந்த சூழலில் நாடோடி மன்னன் போன்றே உத்தமபுத்திரன் படத்தை அந்த நிறுவனம் தயாரித்து வந்தது. எம்.ஜி.ஆருக்குப் பணம் பற்றிய கவலை ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன். அவர் பல இடங்களில் இருந்து பணத்தைப் புரட்டினார்.
எம்.ஜி.ஆர் வீணாக இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்கிறாரோ என்ற விமர்சனம் எழுந்தது. படத்தில் நடித்துக் கொண்டிருந்த பானுமதி உள்ளிட்ட கலைஞர்களுக்கும் அந்த சந்தேகம் எழுந்தபோது, `படம் ஓடினால் நான் மன்னன்; இல்லையென்றால் நாடோடி’ என்று பதில் சொன்னார். படத்தில் இரண்டு எம்.ஜி.ஆர்களுக்கு அரண்மனை படிக்கட்டுகளில் இறங்கியபடியே சண்டை போடும்படியாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரமாண்ட பொருட்செலவில் அரண்மனை செட் போட வேண்டிய சூழல். ஆனால், இரண்டு எம்.ஜி.ஆர்கள் சண்டை போடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஆர்.எம்.வீரப்பன் எதிர்ப்புத் தெரிவித்தார். அரண்மனை செட் போடுவதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனின் கருத்தை ஏற்று எம்.என்.நம்பியாருடன் சண்டை போடுவது போல் காட்சியமைத்தார்.
Also Read: எம்.ஜி.ஆரை ஏன் சுட்டார் எம்.ஆர்.ராதா – 1967 ஜனவரி 12-ல் என்ன நடந்தது?
தள்ளிப்போன ரிலீஸ்
நாடோடி மன்னனுக்கு ரிலீஸ் தேதி மட்டும் பலமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது. அந்த சமயத்தில் அதேபோன்ற கதையம்சம் கொண்ட உத்தமபுத்திரன் வெளியானது. அதை ஆர்.எம்.வீரப்பனோடு தியேட்டரில் சென்று பார்த்த எம்.ஜி.ஆர், முதல்முறையாக தனது படத்தின் பட்ஜெட் குறித்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். பெரிய வரவேற்புக் கிடைக்குமா என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியிருந்தாலும், தனது படத்தின் மீது நம்பிக்கை வைத்து வேலையை முடுக்கிவிட்டார். படத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் லோகோவே தி.மு.கவின் கட்சிக் கொடிதான். ஒரு ஆணும் பெண்ணும் திமுகவின் கொடியைத் தாங்கிப் பிடித்தபடி தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார். 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான நாடோடி மன்னன் படம் எம்.ஜி.ஆரைத் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக நிலைநிறுத்தியது. பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் கொண்டாடிய நாடோடி மன்னன் படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது.
அரசியல் சாணக்கியர்
நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் இன்னொரு மெசேஜையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருந்தார். அப்போது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியிருந்த தி.மு.கவில் திரையுலக பிரபலங்கள் பலரும் இருந்தனர். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனகர்த்தாவான கருணாநிதி, நடிப்புத் துறையில் கலக்கிக் கொண்டிருந்த வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் போன்றோர் தி.மு.கவில் இருந்தனர். ஆனால், இவர்கள் யாரும் நாடோடி மன்னன் படத்தின் குழுவில் இடம்பெறாதபடி பார்த்துக் கொண்டார். கருணாநிதி வசனம் எழுதினால், நாடோடி மன்னன் படம் முழுக்க முழுக்க அவரது படமாக மாறிவிடலாம் என்று எம்.ஜி.ஆர் நினைத்திருக்கலாம்.
நாடோடி மன்னன் படத்தின் முக்கியமான 15 சீன்களுக்கு மட்டும் கவிஞர் கண்ணதாசனை வசனம் எழுத வைத்தார். மீதமிருக்கும் காட்சிகளுக்கு வசனம் எழுதியது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் பணியாற்றி வந்த ரவீந்தர் என்பவர். இதனால், படத்தில் வசனம் என்ற இடத்தில் கண்ணதாசன் – ரவீந்தர் என்று வரும்படி பார்த்துக் கொண்டார். குறிப்பாக, மன்னன் மார்த்தாண்டனுக்குப் பதிலாக அவரைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட வீராங்கன் அந்த இடத்துக்குச் சென்ற பிறகு அறிவிக்கும் பட்ஜெட் திட்டங்கள் யாவும், தனது சிந்தனையில் உதித்தவையே என்பதை சொல்லாமல் சொன்னார். மன்னனாக நாட்டு மக்களுக்கு போராளி வீராங்கன் அறிவிக்கும் திட்டங்கள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன. படத்துக்கான பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 8 பாடலாசிரியர்கள் எழுதினர். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த `தூங்காதே தம்பி தூங்காதே, காடு வெளஞ்சென்ன மச்சான்’ என்ற 2 பாடல்கள் பட்டுக்கோட்டையாருக்கு நீங்காப் புகழைப் பெற்றுத் தந்தன. நாடோடி மன்னன் படம் முழுக்கவே திராவிட இயக்க சிந்தனை கொண்ட வசனங்கள் நிரம்பியிருந்தன. இதன்மூலம், திமுகவினரிடையே தனது இருப்பை வலுவாக நிரூபித்துக் கொண்டார். 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் படம் முழுக்கவே தன்னைச் சுற்றியே இருக்கும்படி எம்.ஜி.ஆர் பார்த்துக் கொண்டார். படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், விமர்சனம் எழுதிய பத்திரிகைகள், படத்தில் எங்கு நோக்கினும் எம்.ஜி.ஆர்தான் என்றாலும், ஒரு இடத்தில் கூட சலிப்புத் தட்டவில்லை என்று பாராட்டி எழுதின.
தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய் வசூல் சாதனை படத்த முதல் தமிழ் படம் என்ற சாதனை படைத்த நாடோடி மன்னன், எம்.ஜி.ஆரின் சினிமா கரியர் மட்டுமல்ல, அரசியல் கரியரிலும் முக்கியமான படம் என்றால் அது மிகையல்ல.
Also Read: TN Crimes: தமிழகத்தில் குபீர் ட்விஸ்ட் கொடுத்த 10 கிரைம்கள்!