துடிப்பான இளைஞர்களின் டீ ஷர்ட்டுகளில், ஸ்கார்ஃப்களில், ஆட்டோக்களின் பின்னால், கீ செயின்களில் எனப் பல இடங்களில் பாப் மார்லியின் புகைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுருள் சுருளாக இருக்கும் நீண்ட தலைமுடி, வாயில் புகையிலை, மென்மையான சிரிப்பு என இருக்கும் ஜமைக்காகவைச் சேர்ந்த அந்த இசைக்கலைஞனின் முகம் சம்பந்தமே இல்லாத நமக்கும் நெருங்கிய உணர்வை ஏற்படுத்தும். மக்களுக்கான விடுதலையை, அன்பை ரெக்கே இசையின் வழியாக பாடிய அந்த இசைக்கலைஞனின் நினைவு தினம் இன்று. பாப் மார்லி பற்றிய 9 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்.
Also Read : நெட்ஃபிளிக்ஸ்க்கு வந்த சோதனை, கோடி ரூவா புராஜெக்ட், குக்கூ… குக்கூ… #TNNTop10 #TopVirals 10/05/2021
-
1 `வொயிட் பாய்’னு கேலி பண்ணுவாங்க!
நெஸ்டா ராபர்ட் மார்லி என்ற இயற்பெயருடைய பாப் மார்லி இங்கிலாந்தைச் சேர்ந்த நார்வல் சிங்ளேர் மார்லி என்பவருக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செடெல்லா என்பவருக்கும் பிறந்தவர். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மகனாகப் பிறந்ததால் பாப் மார்லி `வொயிட் பாய்’ என்று கேலியாக அழைக்கப்பட்டார். இப்படி அழைக்கப்பட்டது பின்னாளில் தனக்கென ஒரு தத்துவத்தை வளர்த்துக்கொள்ள உதவியது என மார்லி தெரிவித்துள்ளார். அந்த தத்துவம் என்னனா.. ``நான் வெள்ளையின மக்களின் பக்கமோ அல்லது கறுப்பின மக்களின் பக்கமோ இல்லை. நான் கடவுளின் பக்கம் நிற்கிறேன்” என்பது தான்.
-
2 சிறுவயதிலேயே கைரேகை பார்க்கக்கூடியவர்!
பாப் மார்லி பற்றிய விசித்திரமான விஷயங்களில் ஒன்று இது. அவர் தன்னுடைய ஏழு வயதில் நண்பர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களின் கைரேகைகளைப் பார்த்து எதிர்காலத்தை துல்லியமாக கணித்து சொல்லுவாராம். கிங்ஸ்டன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்த பிறகு மார்லி பாடகராக இருப்பதே தனது விதி என்று மக்களிடம் கூறியுள்ளார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் மார்லி கைரேகைகளைப் பார்த்து எதிர்காலத்தை கணிப்பதைத் தவிர்த்துவிட்டார்.
-
3 `வெஜிட்டேரியன்’ பிரியர்!
பாப் மார்லி அதிகமான இறை நம்பிக்கை உடையவர். ஆரம்ப நாட்களில் கத்தோலிக்க பிரிவில் இருந்த மார்லி, பின்னர் அதில் இருந்து பிரிந்து ராஸ்தஃபாரி (Rastafari) எனும் பிரிவில் இணைந்துகொண்டார். இதனால், இட்டால் எனும் உணவு முறையை பின்பற்றி வந்தார். இட்டால் என்பது ஹலால் மற்றும் கோஷர் மாதிரியான உணவு முறைகளைப் பின்பற்றுவது போன்றதாகும். இதனால், அவர் சைவ உணவுகளையே அதிகம் விரும்பினார்.
-
4 சுருள் சுருளான முடியின் ரகசியம்!
ராஸ்தஃபாரி பிரிவினர் தலை முடி வெட்டுவதில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. உடலின் இயற்கையான வளர்ச்சியை அவர்கள் மாற்ற விரும்புவதில்லை. இதனால்தான், பாப் மார்லி தன்னுடைய முடியை ட்ரெட்லாக்ஸ் ஸ்டைலில் வளர்க்கத் தொடங்கினார். ஆனால், அவரது பெர்சனல் ஸ்டைல் உலக அளவில் பிரபலமானது.
-
5 எத்தனை குழந்தைகள் என்பதில் கன்பியூஷன்!
பாடல்களை எழுதுவதிலும் பாடுவதிலும் எவ்வளவு திறமையானவரோ அதேபோல குழந்தைகளை பெற்றெடுப்பதிலும் திறமையானவர்னு பாப் மார்லிய கிண்டல் பண்ணுவாங்களாம். எட்டு பெண்களுடன் சேர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் இவருக்கு பிறந்தது என்கிறார்கள். ஒன்பது குழந்தைகள் இல்லை 11 குழந்தைகள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அட... 2 குழந்தைகளை தத்தெடுத்துருக்காரு பாஸ். அதையும் சேர்த்தா மொத்தம் 13 குழந்தைகள்னும் சொல்றாங்க. அவரது குழந்தைகளில் ஷாரோன், செடெல்லா, ஜிகி, ஸ்டீபன், ஜூலியன், கி மணி மற்றும் டாமியன் ஆகியோர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள்.
-
6 தி வெய்லர்ஸ்!
சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பாப் மார்லி தனது நண்பர்களுடன் இணைந்து வெய்லர்ஸ் என்ற இசைக்குழுவைத் தொடங்கினார். ஆனால், இந்த இசைக்குழுவானது முதலில் `தி டீனேஜர்ஸ்’ என்றே அழைக்கப்பட்டது. மேலும், சில பெயர்களை யோசித்த பின்னர் அவர்கள் தங்களை `தி வெய்லர்ஸ்’ என்று அழைத்துக் கொண்டனர். பாப் மார்லி தலைமையிலான இந்த இசைக்குழு உலக அளவில் ஃபேமஸ். `கெட் அப் ஸ்டாண்ட் அப்’, `குட் யூ பி லவ்ட்’, `இஸ் திஸ் லவ்’, `ஸ்லேவ் டிரைவர்’, `ஸ்மைல் ஜமைக்கா’, `நோ வுமன் நோ க்ரை’ போன்ற இவருடைய பல பாடல்கள் சர்வதேச அளவில் ஹிட்.
-
7 சுட்டது யாருனே கண்டுபிடிக்கல!
1976-ம் ஆண்டில் `ஸ்மைல் ஜமைக்கா' நிகழ்ச்சிக்கு சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய ஒருவர் பாப் மார்லியின் வீட்டுக்குள் நுழைந்து அவரது கையில் சுட்டார். எனினும், பா்ப் மார்லி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
-
8 கடைசி வார்த்தைகள் மற்றும் கிடார்!
புற்றுநோயால் இறந்த பாப் மார்லி தன்னுடைய மரணக் கட்டிலில் இருந்தபோது மகனிடம், ``பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது” என்றும் ``On your way up, take me up. On your way down, don’t let me down.” என்றும் தெரிவித்துள்ளார். ராஸ்தஃபாரி முறைப்படி அவரது இறுதி சடங்கு செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது கிட்டாரும் அவருடன் தகனம் செய்யப்பட்டது.
-
9 வருமானம் ஈட்டும் மறைந்த பிரபலங்களில் ஐந்தாவது இடம்!
ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டும் இறந்த பிரபலங்களின் பட்டியலில் பாப் மார்லி ஐந்தாவது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மார்லி நேச்சுரல்ஸ் பிரான்டைத் தவிர அவரது குடும்பத்தினர் காஃபி, ஆடியோ பொருள்கள், ஆடை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களுக்கான உரிமத்தைப் பெற்றுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் பாப் மார்லியின் ஆல்பங்கள் 75 மில்லியனுக்கும் அதிகமாக விற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments