இளையராஜாவை மட்டும்தான தெரியும்.. இந்த 90’ஸ் மியூஸிக் டைரக்டர்களைத் தெரியுமா? 

80, 90 இசைஞானி இளையராஜா ராகதேவனாக வலம்வந்து கொண்டிருந்தக் காலகட்டம் அது. ஆனால் தான் வந்த தடயமே இல்லாமல் இளையராஜாவுக்கே டப் கொடுத்த மியூஸிக் டைரக்டர்களும் தன் அடையாளத்தைப் பாடல் மூலமாகப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதில் பரிதாபம் என்னன்னா?.. மற்ற இசையமைப்பாளர்கள் போட்ட பாட்டுகளை எல்லாம் இதுவரைக்கும் இளையராஜா இசை என நிறையப் பேர் நினைத்திருப்போம். அப்படி இளையராஜாவுக்கே டஃப் கொடுத்த இசையமைப்பாளர்கள் பற்றித்தா இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். 

செளந்தர்யன்!

1990-ல் தொடங்கிக் குறுகிய காலமே இவரது பயணம் தொடர்ந்திருந்தாலும், இவரது இசைக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது பாடல் இன்று ஹிப்ஹாப் ஆதி வரைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிறிய வயதிலேயே தானாக வரியெடுத்து பாடல் பாடும் திறமையை இயல்பாகக் கொண்டவர். அந்த ஆர்வம்தான் இவரை சினிமாவிற்கு இசையமைக்கத் தூண்டியிருக்கிறது. கல்லூரி நாட்களில் நடந்த விழாக்களில் தானே பாடல் வரிகள் எழுதி இசையமைத்துப் பாடுவார். ஆனால் சினிமாவிற்கு இதெல்லாம் போதாது என இசையை முழுவதுமாக கற்றுக் கொண்டு மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். பல சினிமாக் கம்பெனிகள் ஏறி இறங்கி செளந்தர்யன் சோர்ந்து போன நேரம், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இருவருக்கும் சந்திப்பு நடக்கும்போது ரவிக்குமார் புரியாத புதிர் படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தாலும், கமர்சியல் வெற்றியைப் பெறவில்லை. கே.எஸ் ரவிக்குமாரும், செளந்தர்யனும் பேசும்போது, தான் கல்லூரிக் காலங்களில் எழுதி, இசையமைத்திருந்த பாடல்களைப் பாடிக் காட்டுகிறார். அப்படியே கேட்டு உள்வாங்கி ரசித்த ரவிக்குமார், ‘ஒரு கதை எழுதிட்டு கூப்டுறேன்’ என அனுப்பி வைத்து விட்டார். பின்னர் சேரன் பாண்டியன் கதையை எழுதிவிட்டு, செளந்தர்யனை இசையமைப்பாளராக ஆக்கினார். பாடல்களையும் நீங்களே எழுதிவிடுங்கள் என கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அந்த இசை பதிவானது நடந்தது. 1991-ம் ஆண்டு படமும் வெளியானது. அந்த வரும் மட்டும் 109 படங்கள் வெளிவந்தன. இதயம், தர்மதுரை, தளபதி என அதிகமான படங்கள் இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இளையராஜாவுக்குப் போட்டியாகப் பட்டிதொட்டியெங்கும் சேரன் பாண்டியன் படப் பாடல்கள் நின்று விளையாடியது. அன்றைய வானொலியில் அதிகமாக ஆக்கிரமித்த பாடல்கள் சேரன் பாண்டியன் பாடல்களாகவே இருந்தன. ‘யார்ரா இவன் இளையராஜா மாதிரி இசையமைக்கிறான்’ என அக்காலத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள். இவர் இசையமைத்த முதல் சீதனம் படத்தில் எட்டுமடிப்பு சேலை, ஓ நெஞ்சமே பாடல்களும், சிந்து நதி பூ படத்தில் ‘ஆத்தாடி என்ன உடம்பு, மத்தாளம் கொட்டுதடி மனசு, அடியே அடி சின்னப்புள்ள’ என வெளுத்து வாங்கியிருந்தார், செளந்தர்யன். அந்தக் காலக்கட்டத்தில் இவரது பாடல்கள் ஒலிக்காத கிராம விஷேசங்களே இல்லை. இவ்வளவு மெனக்கெட்டும் அதன்பின்னர் இவருக்குச் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் இசைப் பயணத்தில் தேங்கினார், செளந்தர்யன்.

சந்திரபோஸ்!

சந்திரபோஸ்
சந்திரபோஸ்

77ம் ஆண்டு ‘மதுரகீதம்’ எனும் படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்து ‘மச்சானைப் பாத்தீங்களா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். தொடர்ந்து ‘சரணம் ஐயப்பா’, ‘தரையில் வாழும் மீன்கள்’, ‘ஆடுகள் நனைகின்றன’ என்று தொடர்ந்து இசையமைத்து வந்தார். இவற்றின் மூலம் அடுத்த கட்டத்துக்குச் சென்ற சந்திரபோஸ், மனிதன், சங்கர் குரு படங்களுக்கு இசையமைத்தார். இரண்டு படங்களின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. ‘அண்ணாநகர் முதல்தெரு’, பாட்டி சொல்லைத்தட்டாதே’, ‘தாய்மேல் ஆணை’, ‘மாநகர காவல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘வசந்தி’ படத்தின் ‘ரவிவர்மன் எழுதாத கலையோ’ என இவர் இசையமைத்த பாடல் இன்று கேட்டாலும் உருக வைக்கும். 
’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’, ’மாம்பூவே  சிறுமைனாவே’, ‘பூஞ்சிட்டுக் குருவிகளா’, ’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’, ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ ஆகிய பாடல்கள் அக்காலகட்டத்தில் உச்சம் தொட்டவை. 

ஆதித்யன்!

ஆதித்யன்
ஆதித்யன்

சூஃபி, பஞ்சாபி பாங்ரா உட்பட பல்வேறு இசை வடிவங்களைத் தயக்கமின்றி தமிழுக்கு இறக்குமதி செய்தது, அந்தக் காலகட்ட இசைத் தலைமுறை. அவர்களில் முக்கியமானவர் ஆதித்யன். சவுண்ட் இன்ஜினியராக இளையராஜா உள்ளிட்டோரிடம் பணிபுரிந்துவந்த ஆதித்யன், இசையமைப்பாளராக அவதாரமெடுத்தது ‘அமரன்’ படத்தில். புகழ்பெற்ற கதாசிரியரும் இயக்குநருமான ராஜேஷ்வர், ஆதித்யனின் இசைப் பயணத்துக்குத் தொடக்கப்புள்ளி வைத்தார். திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவுத் துறையில் படித்துவந்த ஆதித்யன், இயக்குநரும் நடிகருமான லிவிங்ஸ்டனுடன் இணைந்து இசைக்குழு நடத்திவந்தவர். 

மணிரத்னத்தின் ‘ரோஜா’ வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அமரன்’ படத்தில், ஏற்கெனவே பணியாற்றிய விஸ்வகுருவுக்கு மாற்றாகவே ஆதித்யன் உள்ளே வந்தார். இளையராஜாவின் கொடி உச்சத்தில் பறந்த காலத்தில், புதிய இசை, ஒலி வடிவங்கள் மூலம் ‘அமரன்’ ஆல்பம் கவனம் ஈர்த்தது. அந்தப் படத்தின் இசையில் ரஹ்மான், வித்யாசாகர் எனத் திறமைசாலிகளின் பங்களிப்பும் இருந்தது.

ராஜேஷ்வர் இயக்கிய ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம்தான் ஆதித்யனின் தனி முத்திரையானது. ‘ஒயிலா பாடும் பாட்டிலே’, ‘கிழக்குச் சிவக்கையிலே’ போன்ற பாடல்கள் துல்லியமும், விரிவும் கொண்ட கற்பனை வடிவங்களாக ரசிக்கவைத்தன. 90-களின் தொலைக்காட்சி நேயர்கள் பலரும் விரும்பிக் கேட்ட பாடல்களில் ‘ஒயிலா’வும் ஒன்று. வனம் சார்ந்த நிலப்பரப்பின் உட்கூறுகளை இசைக்கு இசைவாகக் கோத்துத் தந்திருந்தார் ஆதித்யன். ‘ரோஜா’வின் ‘சின்னச் சின்ன ஆசை’ வகையறா பட்டியலில் அடங்கும் பாடல் என்றாலும், தனது பிரத்தியேக முத்திரையை அதில் பொதித்துவைத்தார். அதற்கு அவரது ஒலிப்பதிவு நுட்பமும் கைகொடுத்தது. ‘ஒயிலா’ பாடலின் தாக்கம் அவரது பிற பாடல்களிலும் எதிரொலித்தது. 

தொடர்ந்து, ‘லக்கி மேன்’, ‘மாமன் மகள்’, ‘ஆசைத்தம்பி’, ‘அசுரன்’ என சில படங்களுக்கு இசையமைத்த ஆதித்யன், ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்துடன் இசையமைப்பு பணிகளிலிருந்து ஒதுங்கி, தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினார். 

நாம் இன்று நினைப்பதுபோல 80, 90-களின் எல்லா பாடல்களும் இளையராஜா இசையமைத்தது இல்லை. 1976-ம் ஆண்டு இளையராஜா ‘அன்னக்கிளி’யில் அறிமுகமாகி தன் கொடியை நாட்டிய பிறகு 30-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் வந்ததாகச் சொல்லுவார்கள். அப்படி வந்தவர்களில், எல்லோரும் குறிப்பிடத்தக்க இசையை வழங்கித்தான் சென்றிருக்கிறார்கள். சொல்லப்போனால் சிலரின் திறமையைக் கண்டு இளையராஜாவே மிரண்டுபோனதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு. 
உங்களுக்கு தெரிந்த 80,90 கால இசையமைப்பாளர்களை கமெண்டில் சொல்லுங்கள்!

Also Read : சித் ஸ்ரீராம் பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top