சௌந்தர்யன், தேவேந்திரன், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், கங்கை அமரன், தேவா, மனோஜ்-கியான், கீரவாணி இப்படி பல மியூஸிக் டைரக்டர்கள் 80s-ல ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் இவங்க போட்ட நிறைய பாடல்களை இளையராஜா போட்டதுனுதான் நினைப்பாங்க. அப்படி ஒரு லிஸ்ட்தான் இது.
ஆத்தாடி என்ன உடம்பு
ரஞ்சித் நடிச்ச சிந்து நதிப்பூ படத்துல வந்த பாட்டு இது. இந்த பாட்டுக்கு இசையமைச்சது சௌந்தர்யன். இந்த படத்துல வந்த அடியே அடி சின்னபுள்ள, மத்தாளம் கொட்டுதடி பாட்டெல்லாம் ஒலிக்காத டவுன் பஸ்ஸே கிடையாது. சேரன் பாண்டியன் படத்துல இசையமைப்பாளரா அறிமுகமான சௌந்தர்யன் ரொம்ப கம்மியான படங்கள் பண்ணிருந்தாலும் நிறைய சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்திருக்காரு.
கண்ணுக்குள் நூறு நிலவா
கடலோரக் கவிதைகள் படத்துக்கு அப்பறம் பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு சின்ன விரிசல் வருது. அப்போ வந்த படம்தான் வேதம் புதிது. பாரதிராஜாவோட வேதம்புதிது படத்துல வந்த இந்தப் பாட்டுக்கு இசை தேவேந்திரன். அஜித் அறிமுகமான பிரேம புஸ்தகம் தெலுங்கு படத்தோட மியூஸிக் டைரக்டர் இவர்தான். இன்னைக்கும் நிறைய பேரு இந்தப் பாட்டை இளையராஜா ப்ளேலிஸ்ட்ல சேர்த்துடுவாங்க. முறைப்படி இசை கற்று மியூஸிக் டீச்சராவும் இருந்தவர் தேவேந்திரன். இளையராஜாவுக்கு ராகத்துல ஏதாவது டவுட்டுனா இவர்கிட்டதான் கேட்பாராம். அப்படிப்பட்டவர் சில படங்கள்தான் பண்ணினாரு. காணாமலே போய்ட்டார்.
தோல்வி நிலையென நினைத்தால்
ஊமை விழிகள் படத்துல வந்த இந்தப் பாட்டுக்கு இசை மனோஜ்-கியான். விஸ்வநாதன்-ராமமூர்த்தில ஆரம்பிச்சு விவேக்-மெர்வின் வரைக்கும் இரட்டை இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமால எப்பவும் கலக்கிருக்காங்க. அப்படி ஒரு காம்போதான் மனோஜ்-கியான். உத்திரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் பட்நாகர், பஞ்சாபை சேர்ந்த கியான் வர்மா இரண்டு பேரும் சேர்ந்து இசையமைச்ச படம்தான் ஊமை விழிகள். 1989-க்குப் பிறகு இந்த கூட்டணி பிரிஞ்சிடுச்சு. கியான் தனியா வந்து ‘இணைந்த கைகள்’ படத்துக்கு மியூஸிக் பண்ணாரு. மனோஜ் ‘குட்லக்’ படத்துக்கு மியூஸிக் பண்ணிருக்காரு.
Also Read – திருமலையை விஜய் தேர்ந்தெடுத்த கதை தெரியுமா..?
அம்மன் கோவில் வாசலிலே
கோகுலம் படத்துல வந்த இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் தமிழ்ல ஒரு முக்கியமான இசையமைப்பாளரான சிற்பி. இவர் நாட்டமை, உள்ளத்தை அள்ளித்தா, உன்னை நினைத்து இப்படி பல ஆல்பம் ஹிட் கொடுத்திருக்காரு. இவரோட நிறைய பாடல்கள் ஒண்ணு இளையராஜா லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க அப்படி இல்லைனா எஸ்.ஏ ராஜ்குமார் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க.
தூதுவளை இலை அரைச்சு
முன்னாடி எல்லாம் இளையராஜா பாடல்கள் கேசட்ல வந்தப்போ அந்த கவர்லயே இந்த பாட்டை மென்சன் பண்ணிருப்பாங்க. ஆனா இது இளையராஜா பாட்டே இல்ல. இந்தப் பாடலை உருவாக்கியவர் தேவா. தேவான்னாலே கானா பாட்டுதான் நம்ம மைண்டுக்கு வரும். ஆனா சென்னைல பிறந்து கிராமம்னாலே எப்படியிருக்கும்னு தெரியாம வளர்ந்த தேவா எக்கச்சக்க கிராமிய பாடல்கள் கொடுத்திருக்காரு. இந்தப் படம் தாய் மனசுங்குற படத்துல வந்தது.
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
கேப்டன் மகள் படத்துல வந்த இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் ஹம்சலேகா. இவர் 80ஸ்ல கன்னடத்துல முக்கியமான இசையமைப்பாளரா இருந்தவரு. கொடி பறக்குது, நாட்டுக்கு ஒரு நல்லவன் இந்த ரஜினி படங்களுக்கு மியூஸிக் பண்ணினாரு. கேப்டன் மகள் படம் மூலமா தமிழுக்கு வந்தாரு.
பட்டு வண்ண ரோசாவாம்
80s-ல தமிழ் சினிமா இசையை இளையராஜா ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்துக்க, கிடைச்ச கொஞ்ச கேப்ல தெறிக்கவிட்ட இசையமைப்பாளர்கள்தான் சங்கர் கணேஷ். இத்தனைக்கும் இளையராஜாவுக்கு முன்னாடியே ஆட்டுக்கார அலமேலு ஹிட் கொடுத்தவங்க. விஸ்வநாதன் ராமமூர்த்திகிட்ட தொழில் கத்துக்கிட்டு, கவிஞர் கண்ணதாசனால தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவங்கதான் சங்கர் கணேஷ். இந்த காம்போ நல்லா போயிட்டு இருக்கும்போதே சங்கர் இறந்திடுறாரு. ஆனாலும் கணேஷ், சங்கர் கணேஷ்ங்குற பேர்லயே இசையமைக்கிறாரு. இவங்களை பத்தி ஒரு தனி வீடியோவே பண்ணலாம். அப்போ விரிவா பேசுவோம்.
சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா
மரகதமணி, வீட நாராயணன், எம்.எம். கீரம் இப்படி பல பெயர்கள்ல வொர்க் பண்ணவர் இசையமைப்பாளர் கீரவாணி. தெலுங்குல நிறைய படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. தமிழ்ல சில படங்கள் பண்ணிருக்காரு. மம்முட்டி நடிச்ச அழகன் படத்துக்கு அவருடைய இசைதான். பாகுபலில இருந்து RRR வரைக்கும் இன்னமும் இவருடைய ராஜ்ஜியம்தான் தொடருது.
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
அண்ணா நகர் முதல் தெரு படத்துல வந்த இந்த பாட்டுக்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ். 70s, 80s ல செம்ம ஹிட் மியூசிக் டைரக்டரா இருந்தவர். மனிதன் படத்துல வந்த வானத்தை பார்த்தேன், சங்கர் குரு படத்துல வந்த காக்கி சட்டை போட்ட மச்சான் இப்படி நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்காரு. 90கள் வரைக்கும் மியூஸிக் பண்ணவர் அதற்குப் பிறகு டிவி சீரியலுக்கு நடிக்க வந்திட்டாரு.
வாழ்வே மாயம்
இந்த படத்துக்கு இசை கங்கை அமரன். இவருடைய பாடல்களும் நிறைய இளையராஜா லிஸ்ட்ல சேர்ந்துடும். ராஜாவோட தம்பிங்குறதால இவங்களுக்குள்ள இது பத்தி கான்வர்சேசன்லாம் போயிருக்கு. பாக்யராஜோட மௌனகீதங்கள் படத்துக்கு கங்கை அமரன்தான் இசை. அந்த படத்தோட டைட்டில் கார்டுல இளையராஜாகிட்ட இருந்து இவர் இசையை திருடுற மாதிரி வச்சி ஃபன் பண்ணிருப்பாங்க. ஒரு முறை ரேடியோ ஏதோ பாட்டு ஓடிட்டு இருந்திருக்கு. அதைக் கேட்ட ராஜா, ‘இந்த பாட்டு நான் எப்போ போட்டேன்? ஞாபகமே இல்லையே’னு கங்கை அமரன்கிட்ட கேட்டாராம். அதுக்கு அவர் சிரிச்சுட்டே ‘அண்ணே அது நான் போட்ட பாட்டு’னு சொல்லிருக்காரு.
இளையராஜா பீக்ல இருந்த டைம்ல ஒரு வருசத்துல 50+ படங்கள் ராஜா இசைல வெளிவந்திருக்கு. அதாவது வாரம் ஒரு படம். அவருக்கு கிடைச்ச மிகப்பெரிய இந்த புகழ் வெளிச்சத்துக்கு மத்தியில இந்த மாதிரி நிறைய மியூஸிக் டைரக்டர்ஸ் கவனிக்கப்படாமலே போயிட்டாங்க. நான் வேற எதாவது மியூஸிக் டைரக்டர் மிஸ் பண்ணிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.