தேவா

’தேனிசைத் தென்றல்’ தேவா பாட்டுல இந்த 4 விஷயங்களைக் கவனிச்சிருக்கீங்களா?

சென்னைனு சொன்னதும் நமக்கு நினைவுக்கு வர்ற விஷயங்கள்ல ஒண்ணு, கானா பாட்டு. கானா பாட்டுனு சொன்னதும் 2 கே கிட்ஸ்க்குலாம் சந்தோஷ் நாராயணனனோட சில பாட்டு, கானா பாலாவோட பாட்டு, அசல் கோளாறோட ஜோர்த்தாலேயா, உருட்டாத பாட்டு, கானா ஸ்டீஃபனோட கும்பலாகச் சுத்துவோம் ஐயோ அம்மானு கத்துவோம் பாட்டு, ஜூனியர் நித்யாவோட ஸ்டவ்வு மேல கடாயி பாட்டு இதெல்லாம்தான் டக்னு பாடுறதுக்கு தோணும். ஆனால், இதுக்குலாம் விதை போட்டது 90’ஸ் கிட்ஸோட ஆல்டைம் ஃபேவரைட் மியூசிக் டைரக்டர் தலைவன் தேனிசைத் தென்றல் தேவாதான். சென்னைல மனுஷன் போட்டப் பாட்டு கிராமத்து குழாய் ஸ்பீக்கர் வரைக்கும் பிச்சிக்கிட்டு ஒலிச்சதுக்கு தேவா மட்டுமே காரணம்னு மஜாவா சொல்லலாம். அப்படிப்பட்ட தேவாவோட பாட்டுல இந்த 4 விஷயங்களை கவனிச்சிருக்கீங்களா? அந்த விஷயங்கள் என்னன்றதைப் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

காமிக்கல் மியூசிக்!

இசை நமக்கு கொண்டாட்டத்தைத் தரும், அழுகையைத் தரும், சந்தோஷத்தைத் தரும், இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத உணர்வுகளையும் தரும். ஆனால், இசை அதன் வரிகளோட சேர்ந்து நம்மள சிரிக்க வைக்கும்னு சொன்னா… தேவாவைக் கேட்காதவங்க யாராவது நம்புவாங்களா? நிச்சயம் நம்ப மாட்டாங்க. ஏன், நாம தேவாவோட பாட்டுலாம் கேக்கலைனா, நாமளும் நம்பியிருக்க மாட்டோம். ஆனால், அதுதான் உண்மை. அப்போ, அது மேஜிக் தான? அந்த மேஜிக்கை நிகழ்த்தியது தேவாதான். கூட இருக்குறவங்கலாம் பாட்டு கேட்டு உருகிட்டு இருக்கும்போது தேவா கன்னிகளாகிய நாம மட்டும் சில பாட்டுக் கேட்டு சிரிச்சிக்கிட்டு இருப்போம். ‘டேய், என்னடா தனியா உட்கார்ந்து சிரிச்சிக்கிட்டு இருக்க?’னு நம்மள பார்த்து கேப்பாங்க. அப்போ, ‘உம் பணம் பணம், எம் பணம் பணம், உம் பணம் என் பணம், தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, காத்தடிக்குது காத்தடிக்குது, குலுக்கி வைச்ச கொக்க கோல போல’ பாட்டுலாம் சும்மா சாம்பிள்க்கு அவங்களுக்கும் போட்டுக் காமிங்க. சில வரிகள், இடைல வர்ற கோரஸ், மியூசிக் எல்லாம் நினைச்சு தானா சிரிப்பு வரும். கானா பாட்டுலலாம் திடீர் திடீர்னு நடுவுல நம்மை சிரிக்க வைக்குற அளவுக்கான காமிக்கலான நோட்ஸ்லலாம் மனுஷன் புகுந்து விளையாடியிருப்பார். முதல் முதல்ல சாக்லேட் படத்துல ‘கோக்கரகிரி’ பாட்டுல எல்லாம் என்னய்யா பண்ணி வச்சிருக்கன்னு தான் இருக்கும். அவ்வளவு ரகளையான காமிக்கலான சவுண்ட்ல விளையாடி இருப்பாரு.

நீயும் பாடலாம் சகோதரா!

ஒரு ட்விட்டர் ஸ்பேஸ்ல மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் ஒருதடவை பேசும்போது, “யுவன்தான் நான் பாட ஆரம்பிச்சதுக்கு காரணம். யார் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் பாடலாம்னு ஒரு ஃபீல் இருக்குல அதை எனக்கு கொடுத்து நம்பிக்கை கொடுத்தவரு அவர்தான்” அப்டினு சொல்லுவாரு. ஆனால், தேவா யுவனுக்கு முன்னாடியே பலருக்கு நாமளும் பாடலாம்னு நம்பிக்கை கொடுத்துருக்காரு. அதுக்கு முக்கியமான காரணம் தேவாவோட பாடல்களில் இருக்கக்கூடிய எளிமை. ஒருதடவை அவரோட பாட்டக் கேட்டாப் போதும் அப்புறம் கொஞ்ச நாளைக்கு அந்தப் பாட்டு நம்மக்கூட ஒட்டிக்கிட்டு இருக்கும். நம்மள அறியாமலேயே ஹம் பண்ணி கூட இருக்குறவங்களையும் அவர் பாட்ட பாட வைச்சிருவோம். ’கவலைப்படாதே சகோதரா’ன்னு நம்மளை அவ்வளவு அழகா அமைதியா கூடவே பாடவைக்குற எளிமைன்ற மந்திரம் தேவாவுக்கு கைவந்த கலை.

இதயம் தொடும் வரிகள்!

தேவா பாட்டு நம்மள சுலபமா டச் பண்றதுக்கு அவர் பயன்படுத்துற வரிகளும் முக்கியமான காரணம். ஏன், அவர் பாட்டுக்கு வரிகள்லாம் ஒரு பிளஸ் பாயிண்டுனே சொல்லலாம். ஒருதடவை அவரோட பாட்டுக் கேட்டாப் போதும். அடுத்த தடவை முழுப் பாட்டையும் மனப்பாடமா தேவாகூடவே பாடிடலாம். பல வருடங்கள் கழிச்சு கேட்டாக்கூட பாடலுக்கு நடுவுல வர்ற வரிகள் ஆட்டோமெடிக்கா நம்ம முன்னாடி வந்து நிக்கும். ஏன்னா, தேவா பாடலாசிரியர்கள் கிட்ட வரிகள் வாங்கும் போதே அவ்வளவு எளிமையாதான் வாங்குவாரு. சென்னை மேல தேவாவுக்கு அவ்வளவு காதல்னு நினைக்கிறேன். ஏன்னா, சென்னைல இருக்குற பிரபல ஏரியாக்கள், பிரபல ஹோட்டல்கள், முக்கியமா பிரபல தியேட்டர்கள் எல்லாத்தையும் தன்னோட பாடல்கள்ல பயன்படுத்தியிருப்பாரு. தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா பாட்டுல ‘இதயத்தை கொடுத்திடு இந்தியாவே உனக்கு தான்’னு டோட்டல் இந்தியாவையும் இணைச்சிருப்பாரு. இத்தனைக்கும் அது ஒரு ஐட்டம் சாங். அந்தப் பாட்டைக் கேட்டா தண்ணி தராதவங்ககூட தருவாங்கனா பார்த்துக்கோங்க. அந்தப் பாட்டோட இன்னொரு ஹைலைட் என்னனா விஜய் அந்தப் பாட்டை பாடியிருப்பாரு. அல்டிமேட் வரி ஒண்ணு இருக்கு. குலுக்கி வைச்ச கொக்க கோலா போல பாட்டுல ‘வேளச்சேரி சரக்கடிச்சா, பாண்டிச்சேரி தெரியுதடா’னு ஒரு லைன் வரும். அல்டிமேட் வரி இதெல்லாம். தேவா பாடல் வரிகளை மட்டும் பத்தி பேசுறதுக்கு தனியா ஒரு வீடியோ போடலாம்னா பார்த்துக்கோங்க.

தேவான்னா கானா மட்டுமா?!

தேவான்னா கானா கிங்குனு ஒரு இமேஜ் இருக்குல்ல… ஆனா, தேவா கானாவுக்கு மட்டுமில்ல, இன்னொரு விஷயத்துக்கும் ஃபேமஸ். பெரும்பாலும் நம்ம மக்கள் அதை மறந்துடுறாங்க. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி நம்ம தேவாக்கு கொடுத்த ஒரு பட்டம் இருக்கு. அந்தப் பேர்தான் அவர் பின்னாடி எப்பவும் இப்பவும் இருக்கு. அதுதான் ‘தேனிசைத் தென்றல்’. கானாவுக்கு சமமா தேவா மெலடியிலயும் புகுந்து விளையாடி இருக்காரு. தேவாவோட மெலடியில் பெரிய ஹிட் காம்போ ஹரிஹரன் தான். ‘சின்ன சின்னக் கிளியே, வண்ண நிலவே, நலம் நலமறிய ஆவல், காதலா காதலா, என்னை நினைச்சேன், கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு, ஊதா ஊதா ஊதாப்பூ, மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்’ – இதெல்லாம் எவ்வளவு அழகான மெலடிகள். மெலடியோட மட்டும் தேவா நிக்கல. இன்னைக்கும் ரஜினிக்கு வர்ற டைட்டில்கார்டு பி.ஜி.எம் தேவா போட்டதுதான். இப்படி சில மாஸ் சம்பவங்களும் பண்ணியிருக்காரு.

இன்னும் நூறு, ஆயிரம் மியூசிக் டைரக்டர் தமிழ் சினிமாவுக்கு வரலாம். ஆனால், என்னைக்குமே எங்களுக்கு அமுக்கு டுமுக்கு அமால் டுமால் மியூசிக் டைரக்டர்னா அது தேவாதான்.

Also Read: உலகத்தோட முதல் ஐஸ் க்ரீம் ரெசிப்பி தெரியுமா?

1 thought on “’தேனிசைத் தென்றல்’ தேவா பாட்டுல இந்த 4 விஷயங்களைக் கவனிச்சிருக்கீங்களா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top