என்னது… ஒரு ஆல்பம் முழுக்க ஒருத்தரே பாடுனாரா..!?

ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் ஒரே பாடகர் பாடுவது என்பது தமிழ் சினிமாவில் எப்போதாவது நடக்கும் அபூர்வம். பெரும்பாலும் ஹீரோ ஒரு பாடகர் வேடத்தில் நடித்தால் அந்தப் படத்தின் பாடல்களை எல்லாம் ஒரே பாடகரை வைத்தே ரெக்கார்ட் செய்திருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வந்த வெகுசில ஆல்பங்களைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

சிந்து பைரவி

கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுஹாசினி நடித்த சிந்து பைரவி படத்தில் ஹீரோ ஒரு கர்னாட்டிக் சிங்கர் என்பதால், படத்தில் ஹீரோ பாடுவதைப் போல் வரும் 7 பாடல்களையும் கே.ஜே.யேசுதாஸை பாட வைத்திருப்பார் இளையராஜா. அதேப்போல் ஹீரோயின் பாடுவதைப் போல் வரும் இரண்டு பாடல்களையும் சித்ரா பாடியிருப்பார். இது இசைக்கு முக்கியத்துவமான படம் என்பதால் படத்தின் ஒவ்வொரு பாடலையும் பார்த்து, பார்த்து இசையமைத்திருப்பார், இளையராஜா. அது பாடகர் யேசுதாஸுக்கு சவாலாகவே அமைந்திருக்கும். படம் முழுக்க ஒரே டோன் என்றாலும் தண்ணித்தொட்டி பாடலில் மட்டும் சேட்டை செய்திருப்பார் சேட்டன். 

காசி

சிந்து பைரவி படத்தை போலவே காசி படத்திலும் அதே டெக்னிக்கை ஃபாலோ செய்திருப்பார் இளையராஜா. விக்ரமின் கரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான காசியில், பார்வை குறைபாடுள்ள பாடகராக இருப்பார் ஹீரோ. இதில் ஹீரோ பாடும் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன்தான் பாடியிருப்பார். நான் காணும் உலகங்கள், என் மன வானில், புண்ணியம் தேடி காசிக்கு என இந்தப் படத்தின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம். அனைத்தையுமே ஹிட் பாடலாக கொடுத்ததில் இளையராஜா – ஹரிஹரன் கூட்டணியே மிக முக்கியமான காரணம். 

கந்தசாமி

விக்ரமின் காசி படத்தில் மொத்த பாடல்களையும் ஹரிஹரன் பாடியதைப் போல், விக்ரம் நடித்த கந்தசாமியின் மொத்த  பாடல்களையும் விக்ரமே பாடியிருப்பார். இதில் விக்ரம்தான் மொத்த பாடல்களையும் பாட வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லையென்றாலும், ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை செய்திருப்பார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். விக்ரமும் டி.எஸ்.பி.யின் இந்த முயற்சியை சீரியஸாக எடுத்துக்கொண்டு தமிழ் மட்டுமில்லாது தெலுங்கியில் மொத்தப் பாடல்களையும் பாடியிருப்பார். அதிலும் குறிப்பாக இதெல்லாம் டூப்பு பாடலில் மூச்சு விடாமல் பாடியிருப்பார்.

கிடார் கம்பி மேலே நின்று

மணிரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா சீரிஸில் கெளதம் மேனன் இயக்கிய கிடார் கம்பி மேலே நின்று எபிசோடில் சூர்யா ஓர் இசை கலைஞராக நடித்திருப்பார். கதைப்படி அவரே இசையமைத்து பாடுவது போல் இருப்பதால், இதற்கு இசையமைத்த பாடகர் கார்த்தியே எல்லா பாடல்களையும் பாடியிருப்பார். அரை மணி போர்ஷன் என்றாலும் ஐந்து பாடல்களை கொடுத்தார் கார்த்தி. அதிலும் குறிப்பாக தூரிகா, அலை அலையாய், அவள் பறந்து போனாளே போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்தப் படங்கள் போக ஒரு ஆல்பத்தில் ஒரு பாடலை மட்டும் வேறு ஒரு பாடகரையும் மற்ற பாடல்களை ஒரே பாடகரை வைத்து எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக காதல் ஓவியம் படத்தில் ஹீரோ ஒரு பாடகர்தான். அதில் அவர் பாடும் எழு பாடல்களில் ஒன்று மட்டும் யேசுதாஸ் பாடியிருப்பார்; மற்ற 6 பாடல்களையும் எஸ்.பி.பிதான் பாடியிருப்பார். இந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசை. அதேப்போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த காவியத்தலைவன் படத்தில் சித்தார்த் பாடுவதைப் போல் வரும் 5 பாடல்களில் 4 பாடல்களை ஹரிசரணும் ஒரு பாடலை மட்டும் முகேஷும் பாடியிருப்பார்கள். 

இந்த மாதிரியான ஆல்பங்களைக் கொண்ட வேறு படங்கள் இருந்தால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க. அடுத்த பார்ட்டுக்கு உதவும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top