’சக்கு சக்கு வத்திக்குச்சி’க்கு மட்டுமில்ல… 90’ஸ் கிட்ஸின் சோக கீதத்துக்கும் இவர்தான் மியூசிக் டைரக்டர்!

விக்ரம் படம் வந்து ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சு. அந்தப் படத்துல வந்த ஒரு பாட்டு இன்னைக்கும் சோஷியல் மீடியாவையே ரூல் பண்ணிட்டு இருக்கு. அதாங்க… ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’. 1995-ல வேலு பிரபாகரன் இயக்கத்தில் நெப்போலியன், மன்சூர் அலிகான், அருண் பாண்டியன், ராதா ரவி போன்ற நட்சத்திரங்களோட நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்துல இடம்பெற்ற பாட்டுதான் இது. இந்தப் பாட்டைக் கம்போஸ் பண்ணவரு ஆதித்யன். சரி… யாரு இந்த ஆதித்யன்? 90’ஸ் கிட்ஸ் அடிக்கடி வாட்ஸ் அப்ல வைக்கிற சோக ஸ்டேட்டஸ் பாட்டும் இவர் போட்டதுதான். அது என்ன பாட்டு? எந்த முன்னணி மியூசிக் டைரக்டர்கூடலாம் இவரு வொர்க் பண்ணியிருக்காரு தெரியுமா? மியூசிக் மட்டுமில்ல, இன்னொரு நிகழ்ச்சி மூலமாவும் மக்கள்கிட்ட இவர் பிரபலமானாரு. அது என்னனு நியாபகம் இருக்கா? இதையெல்லாம் பற்றிதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

இன்னைக்கு ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’யோட மியூசிக் டைரக்டர் ஆதித்யன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவரோட உண்மையான பெயர் டைட்டஸ். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சவுண்ட் இஞ்சினீயரிங் படிச்சிருக்காரு. இவரும் நடிகர் லிவிங்ஸ்டனும் சேர்ந்து படிக்கும்போதுல இருந்தே ஆர்கெஸ்ட்ரா குழு ஒண்ணை வைச்சிருந்தாங்க. இளையராஜாவோட ஏராளமான படங்கள்ல தலைமை சவுண்ட் ரெக்கார்டிஸ்ட்டாவும் ஆதித்யன் வேலை பார்த்துருக்காரு. இசையமைப்பாளரா அவரோட முதல் படம் ‘அமரன்’. ‘அமரன்’ படத்துல அவரை மியூசிக் டைரக்டரா அறிமுகப்படுத்துனது ராஜேஸ்வர்தான். அவர்தான் டைட்டஸுன்ற பெயரையும் ‘ஆதித்யன்’னு மாத்தியிருக்காரு. ராஜேஸ்வர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல டைரக்‌ஷன் கோர்ஸ் படிக்கும்போது, ஆதித்யன் அவரோட ஜூனியர். அப்படித்தான் ரெண்டு பேருக்கும் இடையில் ஃப்ரெண்ட்ஷிப் தொடங்கியிருக்கு.

அமரன் படத்துக்கு அவர் இசையமைக்க வந்த கதையே கொஞ்சம் வித்தியாசமான கதை. முதல்ல அமரன் படத்துக்கு ‘விஸ்வகுரு’ன்றவருதான் மியூசிக் கம்போஸரா இருந்துருக்காரு. அந்தப் பாடல்கள்ல சவுண்ட்ல கொஞ்சம் வெரைட்டி வேணும்னு ராஜேஸ்வர் ஃபீல் பண்ணியிருக்காரு. அப்போ, ரஹ்மான்கிட்ட வேலை பார்த்துட்டு இருந்த ஆதித்யனையும் எமியையும் கூப்பிட்டு சவுண்ட் இஞ்சினீயரா நியமிச்சிருக்காரு. அமரன் படத்துல கார்த்தி பாடுற ‘வெத்தலை போட்ட சோக்கிலே’ பாட்டை விஸ்வகுரு ரெக்கார்ட் பண்ணதுல கொஞ்சம் அதிருப்தியோட ராஜேஸ்வர் இருந்துருக்காரு. இதை பட்டி டிங்கரிங்லாம் பார்த்து ஆதித்யன் செமயா கொடுத்துருக்காரு. உடனே, செம ஹேப்பியாம ராஜேஸ்வர், விஸ்வகுருக்கிட்ட பேசி ஆதித்யனையே மியூசிக் டைரக்டரா போட்ருக்காரு. படத்துல எட்டுப் பாட்டுகள் வரும். எல்லாமே அதிரி புதிரி ஹிட்டுதான்.

‘அன்னக்கிளி’ படம் வந்ததுக்கு அப்புறம் ‘ரோஜா’ படம் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் தமிழ் சினிமால இளையராஜாவோட ஆட்சிதான். இளையராஜாவை, ஏ.ஆர்.ரஹ்மான் ஓவர்டேக் பண்ண காரணம், ஏ.ஆர் கொண்டு வந்த சவுண்ட்தான். ஏ.ஆர்.ரஹ்மானின் தாக்கத்தால் பாதிப்படைந்து அவரோட ஸ்டைல ஃபாலோ பண்ண ஸ்டார்ட் பண்ணவங்க நிறைய பேர். அதுல ஆதித்யனும் ஒருத்தர்னு சொல்லலாம். அவரோட பாடல்களைக் கேட்டாலே போதும், அந்த சவுண்ட் டிஃபரண்ட் அவ்வளவு பெர்ஃபெக்டா தெரியும். அமரன் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் பங்களிப்பும் இருக்குனு சொல்றாங்க. ஆனால், எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை. அதுக்கப்புறம் சில படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும் எதுவும் பெருசா பேசப்படலை. திரும்ப ராஜேஸ்வர்கூட ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துல சேர்ந்து ஆதித்யன் வொர்க் பண்ணாரு. பாட்டுலாம் செம ஹிட்டு.

சீவலப்பேரி பாண்டி படத்துக்கு இவ்ளோ நாள் இளையராஜாதான் மியூசிக்னு நினைச்சிட்டு இருந்தேன். பார்த்தா ஆதித்யன் போட்ருக்காரு. இன்னைக்கு 90’ஸ் கிட்ஸ் சோகமானாங்கனா அவங்க ஸ்டேட்டஸ்ல இருக்குற பாட்டு ‘வாழ்க்கை நாடகமா, என் பொறப்பு பொய் கணக்கா, தினம்தோறும் வெறும் கனவா’ பாட்டுதான். இந்தப் பாட்டுக்கு மியூசிக் போட்டது ஆதித்யன்தான். இதுலயே 2, 3 வெர்ஷன் இருக்கும் எல்லாமே தரமா இருக்கும். அதேமாதிரி இந்தப் படத்துல வர்ற ‘ஒயிலா பாடும் பாட்டுல’ பாட்டு பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டு. ஆதித்யனுக்கு செமயான பேரும் வாங்கிக்கொடுத்துச்சு. இதைத் தொடர்ந்து, லக்கி மேன், மாமன் மகள், ஆசைத்தம்பி, அசுரன் என கொஞ்சம் படங்களுக்கு மட்டுமே இசையமைச்சாரு. கடைசியா சிம்ரன் நடிச்ச ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்துக்கு இசையமைச்சாரு. மைக்கேல் ஜாக்சன் அவருக்கு ரொம்பவே புடிக்கும்னு நினைக்கிறேன். அவரோட பாதிப்புல சில இண்டிபெண்டண்ட் ஆல்பம்லாம்கூட பண்ணியிருக்காரு. ரீமிக்ஸ், பாப் இசையெல்லாம்கூட ட்ரை பண்ணியிருக்காரு.

ஆதித்யன் சினிமால நிறைய பாடல்களையும் பாடியிருக்காரு. உண்மை என்னனா… விக்ரம்ல வர்ற ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாட்டு ஆதித்யன் பாடுனதுதான். இதேமாதிரி ஒருசில படங்கள்ல எனர்ஜியான பாடல்களை பாடியிருக்காரு. கொஞ்சம் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து பின்னர் அதிலிருந்து விலகிய ஆதித்யன் பல வருடம் சின்னத்திரையில், ‘ஆதித்யன் கிச்சன்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரொம்பவே எனர்ஜியான ஒரு ஆள். மக்கள் அவரை தலைல தூக்கி வைச்சு கொண்டாடலை, சினிமா அவரை கைவிட்டதுனு நிறைய பேர் புலம்புவாங்க. ஆனால், ஆதித்யனுக்கு கடைசி வரைக்கும், யார் மேலயும், எந்தவிதமான புகாரும் இல்ல. கடைசி வரைக்கும் ரொம்ப ஜாலியான மனுஷனாவே வாழ்ந்தாரு. எஸ்.பி.பி, உன்னிக்கிருஷ்ணன், மலேசியா வாசுதேவன், சித்ரா, சுஜாதானு எல்லாப் பாடகர்களும் இவரோட மியூசிக்ல பாடியிருக்காங்க.

ஆதித்யன்
ஆதித்யன்

சக்கு சக்கு வத்திக்குச்சிப் பாட்டு செம வைரலானதும் ஹாரிஸ் ஜெயராஜ் தன்னோட ட்விட்டர் பக்கத்துல, ”சக்கு சக்கு வத்திக்குச்சின்ற வின்டேஜ் பாட்டு இப்போ வைரலா இருக்குறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இதை கம்போஸ் பண்ணது மிஸ்டர். ஆதித்யன். இதுக்கு நான்தான் புரோக்ராம் பண்ணேன். வி.ஜி.பி ஸ்டுடியோலதான் இந்தப் பாட்டை ரெக்கார்ட் பண்ணோம்”னு போட்ருந்தாரு. அவரைப் போலவே ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், இளையராஜானு எல்லார்கூடவும் மனுஷன் வொர்க் பண்ணியிருக்காரு. சமீபத்துல மறைந்த கவிஞர் பிறைசூடனும் ஆதித்யனும் செம காம்போ. ரெண்டு பேரும் சேர்ந்து வொர்க் பண்ண பல பாடல்கள் ஹிட் ரகம்தான். துள்ளளான, மகிழ்ச்சியான இசையையும் என்கேஜிங்கான புரோகிராமையும் கொடுத்த ஆதித்யன் இன்னைக்கு நம்மக்கூட இல்லை. இருந்தாலும் அவரோட பாடல்கள் சோஷியல் மீடியால செம வைரலா இருக்கு. அதுதான் இசையோட சக்தி. இசை இருக்கும் வரை ஆதித்யனும் கண்டிப்பா எல்லார் மனசுலயும் இருப்பாரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top