பாம்பே ஜெயஸ்ரீ

வசீகரா, உனக்குள் நானே, ஒன்றா ரெண்டா ஆசைகள்… இதெல்லாம் பாம்பே ஜெயஸ்ரீ பாடுனதா?!

பாம்பே ஜெயஸ்ரீ… இவங்க கிட்ட இருக்குற யூனிக்னஸ், நிறைய மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட பாடியிருக்காங்க. ஆனால், எப்பவுமே ஹாரிஸ் – பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி ஸ்பெஷல் ஏன்? என்னென்ன பெஸ்ட் பாடல்கள் இந்தக் கூட்டணில வந்துருக்கு? ஹாரிஸ் மியூசிக் தவிர்த்து இவங்க பாடுன வேற பெஸ்ட் பாடல்கள் என்னென்ன? வசீகரா பாடல் உருவான சுவராஸ்ய கதை என்ன? பாம்பே ஜெயஸ்ரீயில் ரெண்டு பாடல்களுக்கு நடனமாடிய சில்க் ஸ்மிதா… – இப்படி பல விஷயங்களை இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கலாம்.

பாம்பே ஜெயஸ்ரீ

தந்தை சுப்ரமணியன், தாய் சீதாவிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கிய பாம்பே ஜெயஸ்ரீ, பின்னர் டி.ஆர்.பாலாமணியம், லால்குடி ஜெயராமன் முதலான மேதைகளிடம் இசை பயின்றவர். வீணை இசைப்பதிலும் வல்லவர். இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞரும் கூட. இப்படி பல்கலை வித்தகரான இவருக்கு புகழ்பெற்ற இசை விமர்சகர் சுப்புடு கொடுத்த பட்டம்… கர்னாடக இசையின் ஸ்டெஃபி கிராஃப்!
கர்னாடக இசையில் தன்னிகரற்றவராகத் திகழும் இவர், இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீயைப் பெற்றவர்.

கர்னாடக இசைப் பாடகர்களில் நட்சத்திர அந்தஸ்து மிக்கவர், திரைப்பட பாடல்கள் மூலம் பரவலாக கவனிக்கப்படுகிறவர் என்றுதான் நம்மில் பலருக்கும் இவர் பற்றி தெரியும். கலைகளைத் தாண்டி எப்போதுமே ஏதாவது சமூகப் பணிகளில் சத்தமின்றி ஈடுபட்டுக் கொண்டிருப்பார். எளிய பின்னணி கொண்ட குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி, தனது ‘இதம்’ என்ற அறக்கட்டளை மூலம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் கர்னாடக இசையைக் கொண்டு செல்லும் பணி என இவரது இன்னொரு பக்கம் என்பது எளிய மக்கள் மீது அக்கறை மிகுந்தது.

சரி, இப்போது பாம்பே ஜெயஸ்ரீயின் திரைப் பாடல்களுக்கு வருவோம். 2001-க்கு அப்புறம் தமிழ் சினிமாவில் பாடுவதில் அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கினாலும், கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பாம்பே ஜெயஸ்ரீ எத்தனைப் பாடல்களைப் பாடியிருப்பாருன்னு தோரயாமா கணக்குப் போட்டா, வருஷத்துக்கு பத்து இருபது பாட்டுனா கூட ஐநூறு கிட்ட தேறும்னு நமக்கு தோணும். ஆனா, அவர் தமிழ் சினிமாவில் நூறு பாடல்களைக் கூட தொடவில்லை என்பதுதான் உண்மை. ஆனா, இந்த இருபது ஆண்டுகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஏதாவது ஒரு பாடலை நாம் கடக்காத நாளில்லை என்பதும் நிஜம். ‘கலைகளில் குவான்ட்டி மேட்டரில்லை… குவாலிட்டிதான் மேட்டர்’ என்பதற்கு இதுதான் சான்று.

1997-ல் வியட்நாம் காலனி படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘கையில் வீணை ஏந்தும்’ பாடல் பாடியிருக்கிறார். அதற்கு அடுத்த ஆண்டு 1997-ல் ரஹ்மான் இசையில் ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே’ பாடல்தான் தமிழ்த் திரையுலகில் முதலில் அதிகம் கவனம் ஈர்த்த பாடல். 2000-ல் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ‘ஜேம்ஸ் பாண்டு’ படத்துல ‘கண்ணென்ன மின்சாரமா’ன்ற தாறுமாறான பாடல் பாடியிருப்பாரு. அதுக்கு நேர்மாறா அதே வருஷத்துல ‘பாரதி’ படத்துல ‘நின்னைச் சரணடைந்தேன்’ன்ற பாரதியார் பாடலை பாடி உருக வெச்சிருப்பாரு. ஆனா, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாம்பே ஜெயஸ்ரீயை கொண்டு சேர்த்த பாடல்னா… யெஸ்… நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச 2001-ல் வெளிவந்த ‘மின்னலே; படத்தின் வசீகரா’தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனாலதான், பாம்பே ஜெயஸ்ரீன்னாலே ‘வசீகரா’தான் நம் நினைவுக்கு முதலில் வரும். இந்தப் பாட்டுதான் தமிழ் சினிமால பாம்பே ஜெயஸ்ரீ பாடிய முதல் பாடல்னும் நம்மில் பலரும் நினைப்பது உண்டு. இங்கதான் ஒரு ட்விஸ்ட்…

தமிழ் சினிமாவுக்கு ஒரு பாடகரா பாம்பே ஜெயஸ்ரீ 1993-லேயே அடியெடுத்து வெச்சுட்டாங்கன்றதுதான் டெக்னிக்கலா உண்மை. பாம்பேல ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கும்போது, இவர் மேடையில் பாடியதை முக்தா ஸ்ரீனிவாசன் நேரில் பார்த்து வியந்திருக்கார். அடுத்த சில மாதங்களிலேயே தன்னோட தயாரிப்பில் சிவகுமார் – பூர்ணிமா நடித்த ‘தம்பதிகள்’ன்ற படத்துக்காக பாட அழைச்சிருக்கார். அந்தப் படத்துக்கு இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். சென்னைக்கு ஒரு சின்ன டிரிப் அடிச்ச ஹையர் செகண்டரி ஸ்கூல் ஸ்டூடன்டான பாம்பே ஜெயஸ்ரீ, ‘தம்பதிகள்’ படத்துல நான்கு பாடல்களையும் பாடினாங்க. ரெண்டு பாடல்கள், எஸ்பிபி உடன் டூயட். ரெண்டு சோசோ சாங். இதுல நமக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் என்னென்னா, அந்தப் படத்துல அவர் பாடின ரெண்டு சோலோ சாங்ஸுமே சில்க் ஸ்மிதாவுக்கானது. ரெண்டுமே செம்ம பெப்பியான சாங்ஸ். யூடியூப்ல அவைலெபிளா இருக்கா. வீடியோ சாங்ஸ் பாருங்க.

சரி, மறுபடி ‘வசீகரா’வுக்கு வருவோம். ஆக்ச்சுவல்லி, ‘வசீகரா’ பாடல் உருவான விதமே பாம்பே ஜெயஸ்ரீக்கே வித்தியாசமான அனுபவம். அதை அவங்களே சில பேட்டிகள்ல ரொம்ப க்யூட்டா விவரிச்சு இருக்காங்க. ஒருநாள் கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிட்டு இருந்திருக்காங்க. அப்போ, இவருக்கு ஒரு தகவல் வருது. ‘ஜெயராஜ் உடனே உங்களை ரெக்கார்டிங்கு வரச் சொன்னாரு’ன்னு சொல்லப்படுது. இவரும் சென்னை வந்த கையோட கே.கே.நகர்ல ஆட்டோவுல போய் சேர்ந்திருக்கார். அங்க ‘இவர்தான் ஜெயராஜ்’னு ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தினதும் கொஞ்சம் ஷாக் ஆகுறாரு. காரணம், பாம்பே ஜெயஸ்ரீ நினைச்சது தனக்கு முன்பு நன்கு தெரிந்த, உடன் பணிபுரிந்த மலையாள திரைப்பட இயக்குநர் ஜெயராஜ். ஆனா, அவர் முன்னாடி நின்னது தனக்கு முன்பு அறிமுகம் இல்லாத ஹாரிஸ் ஜெயராஜ். அப்புறம் அங்கதான் கெளதம் மேனன் – தாமரை – ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீட்டிங் நடக்குது. பாடல் – வரிகள் விவரிக்கப்படுது. வெறும் ரெண்டே மணி நேரத்துல ரெக்கார்டிங் முடியுது. வீட்டுக்கு கிளம்புறாரு. கொஞ்ச நாட்கள் கழித்து பாடல் வெளியாகுது. பட்டித் தொட்டியெல்லாம் அந்தப் பாடல்தான். கர்னாடக இசைப் பாடலில் குயினாக இருந்த பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டலயும் வர்றாங்க.

ஸ்டெஃபி கிராஃப் களத்துல டென்னிஸ் ஆடும்போது, ஒட்டுமொத்த ஆடியன்ஸோட பார்வையும் அவர் மீதுதான் குவிந்திருக்கும். அவ்ளோ வசீகரமான ஆட்டம் அவரோடது. அதுபோலவே மேடையில் பாடும் பாம்பே ஜெயஸ்ரீ, பார்வையாளர்களை மெஸ்மரைஸ் செய்வார் என்பதால் சுப்புடு அப்படி ஓர் ஒப்பீடு வைத்தாரோ தெரியவில்லை. அது கர்னாடக சங்கீதம். திரைப் பாடல்களைப் பொறுத்தவரையில் அவர், மதர் ஆஃப் லவ்-னு சொல்லலாம். தாய்ப் பாசம் மிகுந்த காதல் தேவதையின் தாலாட்டு மாதிரிதான் அவரோட ஒவ்வொரு பாடலுமே நமக்குத் தோணும். அதுவும், ஹாரிஸ் ஜெயராஜ் காம்போல இது தூக்கலாவே இருக்கும். சாம்பிளுக்கு சில பாடல்கள்.

‘வசீகரா’வே அப்படித்தான். ஒரு பாடல் எப்போது மேன்மையான ஒன்றா இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்? இதுக்கு ஈஸியான வழி ஒண்ணு இப்போ இருக்கு. எந்த ஒரு பாடல், இளம் இசைக் கலைஞர்களால், பாடுவதில் நாட்டம் உள்ளவர்களால் ஆராதிக்கப்பட்டு, இணையத்தில் ‘கவர்’ சாங்ஸாக படையெடுக்கிறதோ, அவற்றை சிறந்த பாடல்களாக உணரலாம். அந்த வகையில், அதிக எண்ணிக்கையில் இணையத்தில் கிடைக்கும் கவர் சாங்க்ஸில் முன்னிலை வகிப்பது ‘வசீகரா’தான். அதேபோல், எந்த காம்பெட்டிஷன் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியா இருந்தாலும் வசீகராவை பாடப்படாத மேடைகளே இருக்காது. இப்படி நம்மளைச் சுத்தி ஆயிரக்கணக்கான முறை இந்தப் பாடல் கடந்து வந்தாலும், மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டாம எவர்லாஸ்டிங் தன்மையோட இருக்குன்னா, அதுக்கு பாம்பே ஜெயஸ்ரீயின் அந்தக் குரலின் ஜீவன் மிக முக்கியக் காரணம்.

இந்த ஃபீலை இன்னும் அதிகமாவே கூட்டக் கூடியது, ‘காக்க காக்க’ படத்தின் ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ பாடல். தமிழ் சினிமாவில் காதல் பாடல்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆணின் கனவுகளும் ஏக்கங்களும் பெரும்பாலும் நிரம்பியிருக்கும். பெண்களின் ஆழ்மனதில் இருந்து வரக் கூடிய வரிகள் என்பது அரிதினும் அரிது. அது அதிகமா தமிழ் சினிமாவில் வரத் தொடங்கியதே வசீகரா, ஒன்றா ரெண்டாவுக்கு அப்புறம்தான். அதுல பாம்பே ஜெயஸ்ரீயின் குரலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டுன்னு சொல்லணுனு அவசியமே இல்லை.

இந்த ரெண்டுப் பாடமும் மெலடின்னா, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல வர்ற ‘உனக்கு நானே’ பெப்பியான சாங். அதுலயும் நம்மை உருகவைச்சிருப்பாங்க பாம்பே ஜெயஸ்ரீ. ‘தூம் தூம்’ல ‘யாரோ மனதிலே’ எல்லாம் காதல் தாலாட்டு. நம்ம மனசை அவ்ளோ இதமாக்கும். அதேபோல, பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ‘மஜ்னு’ல வர்ற ‘முதல் கனவே’ பாடல் கேட்கும்போது, ஒரு மாதிரி உடல் முழுவதுமே வைப்ரேஷன் பரவும்.

இதெல்லா சோலோ. டூயட்டு எடுத்துகிட்டா‘கஜினி’ படத்தின் ‘சுட்டும் விழி சுடரே..’, ‘தொட்டி ஜெயா’வில் ‘உயிரே என் உயிரே’ எல்லாம் அட்டகாசமா இருக்கும். அதுவும், ‘தொட்டி ஜெயா’வில் ‘உயிரே என் உயிரே’ பாடல் கார்த்திக், அனுராதா ஸ்ரீராமை தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ வாய்ஸ்ல லிரிக்ஸ் ஸ்டார்ட் ஆகும்போது, அந்தப் பாட்டே அடுத்த லெவலுக்கு போய் நம் மனசை டச் பண்ணும். ‘சத்யம்’ படத்துல வர்ற ‘செல்லமே செல்லமே’, ‘கோ’ல வர்ற ‘வெண்பனியே…’, ‘நன்பேண்டா’ல ‘வர்ற ஊரெல்லாம் உன்னைக் கண்டு’, ‘வனமகன்’ல வர்ற ‘யெம்மா ஹே அழகம்மா’ பாடல்களும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ அசத்திய டூயட்ஸ்.

இப்படி மொத்தமாவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய எல்லா பாடல்களுமே நம் மனசை ஊடுறுவக் கூடிய வசீகரமான பாடல்கள்தான். இந்தப் பட்டியலுக்கு ரீசன்ட்டா வெளிவந்த ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘மாயக்காரி’ பாடலும் விதிவிலக்கு அல்ல. ஆடியோ சாங்கா அந்தப் பாட்ட கேட்டுப் பாருங்க. ஹாரிஸ் – ஜெயஸ்ரீ காம்போ மேஜிக்கோட வேல்யூவை ரியலைஸ் பண்ணலாம். இந்த காம்போல இன்னும் நிறைய நிறைய எவர்லாஸ்டிங் சாங்ஸ் வரணும்ன்றதுதான் நம்மளோட ஆசை.

அதேநேரத்துல, பாம்பே ஜெயஸ்ரீ வெரைட்டி காட்டியது மற்ற இசைமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடல்களில்தான். அதுல முதலிடம்னா, யுவன் சங்கர் ராஜா இசையில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ‘தீண்ட தீண்ட’ பாடல் வேற ரகமா இருக்கும். அதே மாதிரி 90ஸ்லயும், 2000ன்ஸ் தொடக்கத்துலயும் தமிழ் சினிமால ஒரு ட்ரெண்டு இருந்துச்சு. ஹீரோயினோட ஓபனிங் சாங். அது முழுக்க முழுக்க இயற்கையை ஆராதிக்கிற மாதிரி இருக்கும். அப்படியான சாங்ஸ்ல தவிர்க்க முடியாத ஒண்ணுதான் 2004-ல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் இடம்பெற்ற ‘மலர்களே மலர வேண்டாம்’ பாடல்.

தீனா இசையிலும் பல பாடல்களை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்காங்க. குறிப்பிட்டு சொல்லக் கூடிய, எப்பவும் கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்னா, அது ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் வரும் ‘உப்புக்கல்லு’ பாட்டுதான். ரூட் பஸ் பாடல்களில் வசீகராவை விட இந்தப் பாடலுக்கு சிறப்பிடம் உண்டு. இதுவரை கேட்காதவங்க ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாருங்க.

ஜி.வி.பிரகாஷின் இசையைப் பொறுத்தவரையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல வர்ற ‘பெம்மானே’ பாடல் செம்ம மிரட்டலா இருக்கும்.

Also Read – சீனியர் க்ரஷ் லிஸ்ட் நடிகை.. வாணி போஜன் எங்க மிஸ் பண்றாங்க?

பாம்பே ஜெயஸ்ரீ ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கக் கூடிய ரொம்ப ரேரான சாங்னா, அது தரன் இசையில் ‘லாடம்’ படத்துல வர்ற ‘சிறு தொடுதலிலே’ பாடல்தான். அந்தப் பாட்டு செம்ம போதை. அதேமாதிரி இன்னொரு ரேரான சாங். இது ஒரு மாதிரி உத்வேகம் ஊட்டக் கூடிய ஒன்று. ‘ரேனிகுண்டா’ படத்துல கணேஷ் ராகவேந்திரா இசையில் உருவான ‘விழிகளிலே’ பாடல்தான் அது. டி.இமான் இசையிலும் சில பாடல்கள் பாடியிருங்காங்க. அதுல அதிகம் கவனிக்கப்படாத, ஆனா நல்ல ரொமான்டிங் சாங் ஒண்ணு இருக்கு. ‘நினைவில் நின்றவள்’ன்ற அந்தப் படத்துல வர்ற ‘கள்வனே என் கள்வனே’ன்றதுதான் அந்த சாங்.

அப்புறம் ஒரு பாட்டு மறந்துட்டேன். ஹரிஹரன் – லெஸ்லி லெவிஸ் மியூஸிக்ல ‘மோதி விளையாடு’ படத்துல சுனிதா சாரதியோட சேர்ந்து பாடின ‘பாதி காதல் பாதி முத்தம்’ பாட்டு செம்மயா இருக்கும். ஜெயஸ்ரீ மெலடிலயும், சுனிதா பெப்பியாவும் கலப்பியிருப்பாங்க.

கொஞ்சம் ரீசன்ட் இயர்ல்ப பார்த்தோம்னா, துர்புகா சிவா இசையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் ‘ஹே நிஜமே’, ‘போய் வரவா’, ‘முதல் நீ முடிவும் நீ’ல படத்தில் ‘நீள் கோடுகள்’ எல்லாம் தனிரகமான பாடல்கள். தன்னோட ரசிகர்களுக்கு பாம்பே ஜெயஸ்ரீ கொடுத்த எமோஷனல் ட்ரீட்னா, அது ரீசன்ட்டா கோவிந்த் வசந்த் இசையில் வெளிவந்த ‘ஹே சினாமிகா’ படத்தில் இடம்பெற்ற ‘யாரிசைக்க’ பாடல்தான்.

இதோட நாங்க லிஸ்டை முடிச்சிக்கிறோம். நீங்கள், உங்கள் ஃபேவரிட் லிஸ்டை கமென்ட்ல ஷேர் பண்ணுங்க. ம்… பாம்பே ஜெயஸ்ரீ பாடி அவங்களுக்கே பிடிச்ச, ஏதாவது ஒரு பாட்டு பாடுங்கனு எப்ப கேட்டாலும் டக்குனு அவங்க பாடுற பாட்டுன்னா, அது இளையராஜா இசையில் பாரதியார் வரிகளில் அவர் பாடிய ‘நின்னை சரணடைந்தேன்’!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top