ஒரு புதுவிதமான இசை நிகழ்ச்சிக்கு அந்தப் பாடகரை விழா ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவ்வளவு சிறப்பாகத் தயாராகிறார். நிகழ்ச்சி நடக்க வேண்டிய நாளும் வருகிறது. அன்று மேடையேறுவதற்காகப் போன அந்தப் பாடகருக்கு மேடையைப் பார்த்ததுமே பயங்கர கோபம் வருகிறது. விழா ஏற்பாட்டாளர்களிடம் பயங்கரமாக சண்டை போட்டுவிட்டு அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார். அந்தப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. அவர் ஏன் கோபப்பட்டார், அவர் கோபப்படும் அளவுக்கு மேடையில் என்ன சம்பவம் நடந்தது என கடைசியில் பார்ப்போம்.
பொதுவாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பிரபலம் கிடைப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனால், தமிழிசைப் பாடல், மக்களிசைப் பாடல் மேடைகளில் எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு பொதுமக்கள் மத்தியிலும் பிரபலம் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும். இவைபோக கர்நாடக இசையிலும் அவருக்கு பயிற்சி உண்டு, கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையான ஒரு விஷயத்தை நாட்டுப்புறப் பாடல்களில் கொண்டு வரும் அளவுக்கு இசைத்துறையில் ஆய்வும் செய்யும் ஒரு ஆய்வாளரும் கூட புஷ்பவனம் குப்புசாமி. இதெல்லாம் தாண்டி ஒரு அழகான காதலுக்குச் சொந்தக்காரர். அத்தனை விஷயங்களையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.
மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் 1990-ம் ஆண்டு ஒரு இசைத்திருவிழா நடத்தது, தென்னிந்தியா முழுக்க பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி அது. நிகழ்ச்சியை நடத்தும் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்பது ஒரு விதி. அவர்கள் விழாவை நடத்த வேண்டும் அவ்வளவுதான். நிகழ்ச்சி ஆரம்பித்த உடன் முதலில் வந்து பெர்பாமன்ஸ் செய்ய வேண்டிய ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை, அதனால் அவர்களால் மேடை ஏற முடியவில்லை, அவர்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குள் கீழே இருக்கும் மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக ரகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள். விழா ஏற்பாட்டாளர்களுக்கோ அந்தப் பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டு இருந்த புஷ்பவனம் குப்புசாமி, திடீரென மேடையேறி “தஞ்சாவூரு மண்ணெடுத்து… தாலி ஒன்னு செய்ய சொன்னேன்… வாடாதே என் வசந்த மல்லிகை ரோசாவே… நீ வாடாதே…” அப்படின்னு அவர் பாட ஆரம்பிச்சதும், மாணவர்கள் அமைதியாகிறார்கள். பாடலை முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே அவர் இறங்கும் போது, “We want Kuppusaami…” என அதுவரை ரகளை செய்த மாணவர்கள் கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
கிராமப்புற சாமானியனுக்கு மட்டுமல்ல, நவநாகரிக கல்லூரி மானவர்கள் வரைக்கும் கட்டிப்போட்டு மயக்கவைக்கும் குரலுக்கும் பாடலுக்கும் சொந்தக்காரன், சளைக்காத சண்டைக்காரன், மக்களின் கலைஞன் புஷ்பவனம் குப்புசாமி. இந்த நிகழ்ச்சியில் தான் அனிதா முதல் முறையாக புஷ்பவனம் குப்புசாமியைப் பார்க்கிறார். அனிதாவுக்கு அவர் சீனியர். புஷ்பவனம் குப்புசாமின்னு சொல்லும் போதே அனிதா குப்புசாமி பேரும் சேர்ந்தே வரும். இரண்டு பேரும் தனித்தனி இல்லை. பாடல்களாகட்டும், சொந்த வாழ்க்கையாகட்டும், வேறு வேறு குரல்கள், ஆனால் உயிரும் உணர்வுமாக இரண்டு பேருமே ஒன்றுதான். எல்லா பேட்டிகளிலும் அவர்களுடைய காதல் கதையை பல்லாண்டுகளுக்குப் பிறகும் பசுமை மாறாமல் சொல்வார்கள். அவர்கள் காதலில் நாம் அனைவரும் கற்க வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது, அதை இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்ப்போம்.
நாட்டுப்புற இசைக்கலைஞர் ஒருவரை தமிழ் சினிமாவின் இசைத்துறை கொண்டாடுவது சகஜம் தான். ஆனால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விதவிதமாக வித்தியாசம் காட்டியதில் கெட்டிக்காரர் புஷ்பவனம் குப்புசாமி.
தென்றல் படத்தில் “புத்தம் புது பாட்டு எடுத்து தாண்டவக்கோனே…” பாட்டுல யுகபாரதி மக்களிசையோட மகத்துவத்தை தன் வரிகளால் எடுத்துச் சொன்னார்னா, புஷ்பவனம் குப்புசாமி தன் குரலால் அந்த வரிகளுக்கு உயிரூட்டி பாடலின் இறுதியில் கண்கலங்க வைச்சிருப்பார். ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’ பாட்டுல ஒட்டுமொத்தமா சிம்ரன் எல்லாரோட கவணத்தையும் அள்ளிப்போனாலும் நம்மாளோட குரல் தனித்து தெரியும். மாயாவி படத்தில், “காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற”ன்னு துள்ளலா கொண்டாட்டமா ஒரு டூயட் பாடி அசத்திருப்பாரு. மத யானைக்கூட்டம் படத்தில் “கொம்பு ஊதி” பாட்டுல திருமணத்தோட திருவிழாக் கொண்டாட்டத்தைக் கொண்டு வந்திருப்பார். அவரோட ஒவ்வொரு பாட்டைப் பத்தியுமே இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
சினிமா மட்டுமல்ல, ‘சின்ன பாப்பா… பெரிய பாப்பா’வின் டைட்டில் டிராக்கையும் பாடி அசத்தினவர்தான் புஷ்பவனம் குப்புசாமி.
சினிமா, தொலைக்காட்சின்னு புஷ்பவனம் குப்புசாமி பொது மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடையுறதுக்கு முன்னாடியே நாட்டுப்புறப் பாடகராவே மக்கள் மத்தியில் ஆடியோ கேசட்டுகளிலும் சிடியிலும் அவர் தமிழக கிராமங்களின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மேடைக் கச்சேரிகள்னு கொடிகட்டிப் பறந்தவர்.
நாட்டுப்புற பாடல்களிலேயே, ஒவ்வொரு பாடலிலும் தன்னுடைய தனித்துவமான குரலால் ஒவ்வொரு பாட்டையும் வித்தியாசப்படுத்தியவர். ஓர் ஏழைத்தந்தை தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப்பாடலில் அழவைத்திருப்பார், விடுகதையாம் விடுகதை பாடலில் குறும்புத்தனம் கொப்பளிக்க கொக்கலி காட்டியிருப்பார். ரெட்ட மாட்டு வண்டி பூட்டின்னு பட்டனத்தைப் பார்க்கப்போகும் ஆர்வத்தையும் அவர் குரல் காட்டி இருக்கும். குள்ளநரி காட்டுல இல்லைன்னு நக்கலும் நய்யாண்டியும் பண்ணி வச்சிருப்பார். புஷ்பவனம் குப்புசாமியோட உண்மையான வீச்சைப் புரிந்துகொள்ள நாம கட்டாயம் கேட்க வேண்டியது அவருடைய மக்களிசைப் பாடல்களைத்தான்.
இவை போக, இந்த மண்ணோட கடவுளான முருகனை அவர் நெக்குருகி பாடிய பல ஆல்பங்களும் முருக பக்தர்கள் மத்தியில் காலங்காலமாக பாதயாத்திரைகளில் திரும்ப திரும்ப பாடப்படுவது உண்டு.
நிறம், மொழி, இனம், வர்க்கம் அத்தனை வேறுபாடுகளையும் தாண்டி, அவர் குடும்பத்தினரிடம் பேசியும் கெஞ்சியும் சண்டை போட்டும் புஷ்பவனம் குப்புசாமியை திருமணம் செய்தது ஏன் என்பதற்கு அனிதா சொன்ன ஒரு காரணம், “அவருடைய காதல் என்னைத் தொடர்ந்து பாடவைக்கும். என் திறமைக்கான சரியான அங்கீகாரத்தை எங்கள் காதல் தரும்” என்பதுதான். புஷ்பவனம் குப்புசாமி தன் குரல் மூலம் மட்டுமல்ல, தன் வாழ்க்கை மூலமும் நமக்கு சொல்லும் பாடம் அதுதான்.
முதல்ல சொன்னேன்ல ஒரு நிகழ்ச்சியில் அவர் கோவப்பட்டார்னு, அது என்னன்னா… கர்நாடக சங்கீதம், நாட்டுப்புறப் பாடல்கள், லைட் மியூசிக் என அனைத்தும் கலந்துகட்டிய ஒரு இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதற்காக புஷ்பவனம் குப்புசாமி அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு போய் மேடையைப் பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. கர்நாடக இசைக்கு மேடை உயரத்திலும் அதற்குக் கீழே நாட்டுப்புறப் பாடல்களுக்கும் லைட் மியூசிக்குக்கும் தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இசையில் ஏற்றத்தாழ்வா… எங்கள் மக்களிசை என்ன தரம் தாழ்ந்ததா என குப்புசாமி கொதித்தெழுந்து விழா ஏற்பாட்டாளர்களிடம் சண்டைபோட்டுவிட்டு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இசையில் ஏற்றத்தாழ்வுகளையோ, அது உசந்தது, இது தரம் தாழ்ந்தது என்று பாகுபாடு காட்டுவதற்கு எதிராக தொடர்ந்து வலுவான குரல் எழுப்பும் ஒரு கலைஞன் குப்புசாமி. நாட்டுப்புறப் பாடல்கள் என அழைப்பதையே விரும்பாதவர். இது மக்களுடைய இசை, மக்களுக்கான இசை, மக்களே பாடும் இசை… அதனால், இதனை ‘மக்களிசை’ என்று அழைப்பதே முறை என தொடர்ச்சியாக பேசும் போதும் எழுதும் போதும் மக்களிசை என்ற சொல்லையே பயன்படுத்துவார்.
Also Read – வசீகரா, உனக்குள் நானே, ஒன்றா ரெண்டா ஆசைகள்… இதெல்லாம் பாம்பே ஜெயஸ்ரீ பாடுனதா?!
தொல்காப்பியம், சிலப்பதிகாரத்தின் காலம் முதலே, தமிழிசைக்கான குறிப்புகள் உண்டு, அப்போதிலிருந்தே பாட்டாளிகள் பாடிய இசைதான் தமிழிசை. அது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை. கர்நாடக இசையை விட பழமையானது, பெருந்திரளான மக்களால் பாடப்படுவது, ஆனால், கர்நாடக இசைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் பெருமையும் ரொம்பவே அதிகம். அது மக்களிசைக்கும் கொடுக்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல்கொடுக்கும் குப்புசாமி, இன்னுமொரு அசாத்தியமான வேலையையும் செய்திருக்கிறார்.
மக்களிசைக்கு நொட்டேஷன் எழுதுவது, ஸ்வரம் எழுதும் முயற்சியை முன்னெடுத்து அதை பல பாடல்களுக்கு எழுதியும் ஆவனப்படுத்தி இருக்கும் குப்புசாமியின் குரல், நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பாட்டாளி வயலில் இறங்கி வேலை செய்யும் போது பாடும் வரைக்குமே ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்.
புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல்களில் உங்களுக்கு ரொம்பவே புடிச்ச பாடல் என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.