சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோன், தனது ஆகஸ்ட் மாத இணைய இதழ் அட்டைப்படத்தில் தெருக்குரல் அறிவு படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. என்ன நடந்தது?
ரோலிங் ஸ்டோன் சர்ச்சை
எஞ்சாய் எஞ்சாமி, நீயே ஒளி பாடல்கள் படைத்த சர்வதேச சாதனைகளைப் பாராட்டும் வண்ணம் அந்தப் பாடல்களைப் பாடிய ஆஸ்திரேலிய – இலங்கைப் பாடகியான தீ மற்றும் கனடாவைச் சேர்ந்த வின்சென்ட் டி பால் ஆகியோரின் படங்களை அமெரிக்க இசை இதழான ரோலிங் ஸ்டோன் வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த இரண்டு பாடல்களையும் எழுதியவரும், எஞ்சாயி எஞ்சாமி பாடலைப் பாடியிருந்தருமான தெருக்குரல் அறிவு அதில் இடம்பெறவில்லை. அதுபற்றிய கட்டுரையிலும் அறிவு பற்றி அதிகம் பேசவில்லை. இது சாதியரீதியிலான ஒடுக்குமுறை என்று சர்ச்சை எழுந்தது.
இயக்குநர் பா.இரஞ்சித் இதுபற்றி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். ட்விட்டரில் அவர், “எஞ்சாயி எஞ்சாமி, நீயே ஒளி பாடல்களை எழுதியவரான தெருக்குரல் அறிவு பெயர் மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு பாடல் வரிகளும் மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர், மறைக்கப்படுவதை எதிர்க்கிறது என்பதை ஒப்புக்கொள்வது அவ்வளவு கடினமா?’ என ரோலிங் ஸ்டோன் இதழ், மஜா அமைப்பிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். வி.சி.க பொதுச்செயலாளர் வன்னி அரசும் இந்த விவகாரத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்தநிலையில், ரோலிங் ஸ்டோன் தனது ஆகஸ்ட் மாத இணைய இதழின் அட்டைப்படத்தில் அறிவு படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதுதொடர்பான அட்டைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ரோலிங் ஸ்டோன், `வார்த்தைஜாலம் செய்பவர், இசையமைப்பாளர் தெருக்குரல் அறிவு எங்கள் ஆகஸ்ட் மாத இணைய இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார். வரைமுறையோடு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர் அவர்’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறது.
Also Read – தெருக்குரல் அறிவு எங்கே… அமெரிக்க இதழின் சர்ச்சையான அட்டைப்படம் – பின்னணி என்ன?