ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் பட்ஜெட், விஸுவல் எஃபெக்ட்ஸுடன் உருவான ஹெச்.பி.ஓ ஒரிஜினல் சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு உலக அளவில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் எழுதிய இந்த சீரிஸ், 8 சீசன்களில் 73 எபிசோடுகளுடன் கடந்த 2019ம் ஆண்டு நிறைவுபெற்றது. முதல் சீசன் வெளியாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகிறார்கள்.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி 10 சுவாரஸ்யங்கள்
-
1 உலகின் மோஸ்ட் பைரேட்டட் ஷோ!
சட்டவிரோதமாக டோரண்ட் வெப்சைட்டுகள் மூலம் பதிவிறக்கப்பட்ட ஷோக்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. 2019ம் ஆண்டே சீரிஸ் முடிந்துபோன பிறகும் கூட மோஸ்ட் பைரேட்டட் ஷோ பட்டியலில் நீண்டநாட்களாக முதலிடத்திலேயே இருக்கிறது. 2015ல் வெளியான சீசன் மட்டுமே 14.4 மில்லியன் முறை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்பட்டதாகச் சொல்கிறது ஒரு புள்ளி விவரம்.
-
2 ஃபேக் கிளைமேக்ஸ்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் ஒளிபரப்பாகத் தொடங்கியது முதலே அதுகுறித்த விவாதம் வலுப்பெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த சீரிஸின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்ற பட்டிமன்றமே நடக்கத் தொடங்கியது. அதன் காட்சிகளை இண்டர்நெட்டில் லீக் செய்வதற்கென்றே பல ஹேக்கர்கள் இரவு, பகலாக உழைத்ததாகக் கூடச் சொல்வார்கள்.
இதனால், ஒரிஜினல் எபிசோடுகள் வெளிவரும்வரை பாப்பராசிகளைக் குழப்பும் வகையில் பொய்யான கிளைமேக்ஸ்கள், காட்சிகள் சிலவற்றை ஷூட் செய்வது கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழுவின் வழக்கமாம். இதுகுறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட ஹீரோ `ஜான் ஸ்நோ’ கிட் ஹாரிங்டன், சீசன் 7-க்காக மட்டுமே தலா 5 மணி நேரம் செலவழித்து 3 பொய்யான காட்சிகளை ஷூட் செய்ததாகக் கூறியிருக்கிறார் .
-
3 டனேரியஸ் டார்கேரியன்
புத்தகத்தில் இருந்து டிவி சீரியஸாக மாற்றப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸில் டனேரியஸ் டார்கேரியனின், நீண்ட வெள்ளை நிற முடி பிரபலமானது. ஆனால், கணவர் கால் ட்ராகோவின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதையில் நுழைந்து வெளியேறியபோது ஆடைகளுடன் சேர்ந்து முடியும் எரிந்துபோனதாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், அந்த கதாபாத்திரம் மொட்டைத் தலையுடனேயே வலம்வரும்.
-
4 சான்ஸாவின் நாய் பாசம்
ஸ்டார்க் குடும்பத்தின் முத்த மகளான சான்ஸா கேரக்டரில் நடித்திருந்தவர் சோபி டர்னர். கதைப்படி அவரது வளர்ப்புப் பிராணியான `லேடி’ ஓநாயாக நடித்திருந்த `ஜுன்னி’ என்ற நாய் கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது. கேமராவுக்குப் பின்னும் அந்த நாய் சோபி டர்னரோடு நெருங்கிப் பழகியதால், முதல் சீசனுக்குப் பின்னர் ஜுன்னியை சோபி டர்னரின் குடும்பம் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியது.
-
5 டோத்ராக்கி மொழியின் பிறப்பு
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியஸுக்கெனவே பிரத்யேகமாக `டோத்ராக்கி’, `வலேரியன்’ என்ற இரண்டு மொழிகளை சில வார்த்தைகளோடு உருவாக்கினார் மொழியியல் அறிஞர் டேவி.ஜே.பீட்டர்சன். ஆனால், கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் வெற்றி, அந்த மொழிகளின் பயன்பாட்டை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. குறிப்பாக டோத்ராக்கி மொழி, 4,000 வார்த்தைகள், இலக்கணங்களோடு முழுமையான பயன்பாட்டு மொழியாக இன்று வளர்ந்து நிற்கிறது. இதற்காகத் தனி அகராதியும் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் பலர் அந்த மொழியை ஆர்வமாகக் கற்று வருகிறார்கள்.
-
6 பட்ஜெட்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒவ்வொரு எபிசோடும் பெரும் பொருட்செலவில் உருவானவை. ஆறாவது சீசன் வரை ஒவ்வொரு எபிசோடின் பட்ஜெட் சராசரியாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.45.03 கோடி) என்ற அளவில் இருந்தது. இந்தத் தொகை ஏழாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடுக்கும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.75.08 கோடி) என்ற அளவில் வந்து நின்றது. டிவி சீரியஸ்களில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியஸே.
-
7 ஹார்வார்டு படிப்பு
மெடிவல் என்றழைக்கப்படும் வரலாற்றின் இடைக்காலத்தில் நடப்பதாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் கதை அமைக்கப்பட்டிருக்கும். பேண்டஸியான அந்தக் கதையாசிரியர் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் வழியில் மெடிவல் வரலாற்றுக் காலத்தை ஆய்வு செய்யும் வகையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் புதிய படிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.
-
8 ஜான் ஸ்நோ முன்மாதிரி!
கேம் ஆஃப் த்ரோன்ஸ் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின், இளம் வயதில் இந்தக் கதையின் நாயகன் ஜான் ஸ்நோவைப் போலவே இருப்பார். அந்த உருவ ஒற்றுமையாலேயே ஜான் ஸ்நோ கேரக்டரில் நடிக்க கிட் ஹாரிங்டன் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு ஃபேன் தியரி இருக்கிறது.
-
9 Winter is coming
`Winter is coming’ என்ற வாசகம் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு முன்பாக வெறும் வானிலையை அறிவிக்கும் வார்த்தையாகவே இருந்தது. ஆனால், அதன்பிறகு கொடுமையான நாட்கள் வர இருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதாகவே அமைந்துவிட்டது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸுலும் ஆறாவது, ஏழாவது சீசனில் அது வந்தேவிட்டது.
-
10 டீடெய்ல்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் டைட்டில் கிரெடிட்ஸை ரசிகர்கள் பெரும்பாலும் மிஸ் பண்ண மாட்டார்கள். ஒவ்வொரு எபிசோடின் தொடக்கத்திலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகில் இருக்கும் நகரங்களின் வரைபடங்களைக் காட்டுவார்கள். எந்த நகரத்தின் வரைபடம் காட்டப்படுகிறதோ, அந்த எபிசோட் அந்த நகரத்தைச் சுற்றி நிகழும் வகையில் கதையமைக்கப்பட்டிருக்கும்.
0 Comments